இலங்கை மீது எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது – ஜயநாத் கொலம்பகே

சில மேற்குலக நாடுகள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை இலக்கு வைத்து அதற்கெதிரான நடவடிக்கைகள் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகிறன. எவ்வாறிருப்பினும் எந்த காரணியை அடிப்படையாக் கொண்டும் இலங்கை மீது எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்று வெளியுறவுகள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளால் முன்வைக்கப்படுகின்ற பிரதான குற்றச்சாட்டுக்களான நல்லிணக்கம் , பொறுப்பு கூறல் மற்றும் காணாமல் போனார் விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு வெகுவிரைவில் பதிலளிக்கப்படும் என்றும் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் கூறிய விடயங்கள் சுருக்கமாக வருமாறு,

ஐ.நா. விவகாரம்

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றனவா என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? 2012, 2013, 2014 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலேயே இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை இலக்கு வைத்து ஏன் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஐ.நா.விடம் கேள்வியெழுப்புகின்றோம். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தவறானவையாகும். இலங்கை மீது யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

கொவிட் சடலம்

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு சுகாதார மற்றும் மருத்துவ ரீதியிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டமையும் மருத்துவ ரீதியிலான காரணிகளின் அடிப்படையிலாகும். இவை அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அதற்கமைய இதுவரையில் சுமார் 69 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சில சமூகத்தினர் கவலையடைந்திருந்தமையை நாம் புரிந்து கொள்கின்றோம். அதற்கு எதிராக நாம் வாதாடவில்லை. எனினும் தற்போது அந்த தீர்மானத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

சிறுபான்மை மக்கள்

சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் சகல இன மக்களுக்காகவும் செயற்படுவதாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் ஒரு கருத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கிறீர்கள். நான் சகல மக்களுக்குமான ஜனாதிபதி என்றே அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானது. 2015 – 2019 காலத்தில் காணப்பட்ட இரு கட்சிகளை பிரதானமாகக் கொண்ட தேசிய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் நாம் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளோம். எதிர்வரும் சில வாரங்களில் உண்மையான பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.

காணாமல் போனோர் விவகாரம்

2015 இல் இலங்கை அரசாங்கத்தால் இனை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 பிரேரணைக்கமைய காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்கமை காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களது உறவினர்களால் ஏன் பொலிஸ் நிலையத்திலோ அல்லது ஜனாதிபதியிடமோ முறைப்பாடளிக்க முடியும். அவர்களால் முறைப்பாடளிக்கப்பட்டால் அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறுபவர்கள் ஒரு சிலருடைய தேவைக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

காணாமல் போனோல் , பொறுப்பு கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 2009 – 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் 3 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. எனினும் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை தொடர முடியாமல் போனது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதியால் தற்போது மீண்டும் இது தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் தேவை

சில நாடுகள் அவற்றின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் பெருமளவான நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வோம்.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை இலங்கைக்கு எதிரான வாக்குகளில் ஒன்று குறைவடைந்துள்ளது. 14 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன. எனவே காலப்போக்கில் ஏனைய நாடுகளின் தீர்மானங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். எனவே வெகுவிரைவில் நல்லணிக்கம் , காணாமல் போனோர் மற்றும் பொறுப்புகூறல் என்பவற்றுக்கான பதிலை வழங்குவோம்.

Posted in Uncategorized

ஆன்மீக உடை தரித்த துணிச்சலான போராளி ஐாேசப் ஆண்டகை -ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இறைபதம் அடைந்த முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராஐப்பு ஐோசப் அவர்கள் உண்மையில் சீருடை தரிக்காத ஆன்மிக உடை தரித்த போராளி என்றால் மிகையாகாது.

ஈழத் தமிழர் வரலாற்றில் அவரது பணிகள் மகத்தானவை விடுதலைப் போராட்ட காலங்களில் அரசபடைகளால் நடைபெற்ற அட்டூழியங்களை துணிச்சலாக வெளி உலகிற்கு தன்னால் இயன்ற வரை ஊடகங்கள் வாயிலாகவும் சர்வதேச அமைப்புக்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியவர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் தன்னால் இயன்ற பணிகளை ஒன்றிணைத்தவர் கொள்கைக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விட உறுதியாக உண்மையாக செயலாற்றியவர்.

இறுதிப்போரில் நடைபெற்ற அனைத்து மனிதப் படுகொலைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஒன்று திரட்டி சர்வதேச அரங்கிற்கு அம்பலப்படுத்தியதுடன் தானே போரின் சாட்சியாக பதிவு செய்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில் 2009 ஆண்டிற்கு முன்னர் மதிப்பிற்குரிய ஆண்டகை அவர்கள் ஆற்றிய பணிகள் பலவற்றை நேரில் பார்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்தது. ஆனால் அவர் இறைபதம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகவீனம் அடைந்து மக்கள் பணியாற்ற முடியாத நிலையில் இருந்த போதும் அவரைப் பார்க்க இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தது ஆனால் அவர் பணியாற்றிய அளவிற்கு யாராலும் முடியவில்லை என்ற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.

ஐாேசப் ஆண்டகைக்கு நிகர் அவரே தான் உண்மையில் இராஐப்பு ஐாேசப் ஆண்டகை சீருடை தரிக்காத போராளியாகவும் தேர்தல் சீட்டில் நிற்காத மக்கள் பிரதி நிதியாகவும் தமிழ் இனத்திற்காக பணியாற்றினார் என்பதை வரலாறு சொல்லும் அத்துடன் தமிழர் வரலாற்றில் சிறந்த மாமனிதர்.

சபா குகதாஸ்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
ரெலோ இளைஞர் அணி தலைவர்

புகழுடல் எய்திய ஆண்டகைக்கு எம் இதய அஞ்சலிகள்- ரெலோ

தமிழ் தேசியத்திற்காய் அஞ்சாது ஒலித்த குரல் மெளனித்து விட்டது. அதி வணக்கத்துக்குரிய ஓய்வுநிலை ஆண்டகை இராயப்பு யோசப்பு அவர்கள் தனது எண்பதாவது வயதில் பூவுடல் நீத்து புகழுடல் எய்தியுள்ளார்.

தமிழினத்தின் விடிவுக்காய் உரிமைக்காய் தொடர்ந்தும் அஞ்சாது குரல் கொடுத்து வந்த மாமனிதரின் மறைவு தமிழ் மக்களைப் பெரும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

யுத்த காலத்திலே எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை துணிச்சலோடு எதிர் கொண்டதோடு மாத்திரமல்லாமல் சர்வதேச அரங்கில் எடுத்துரைத்தார். தானே அதற்கு சாட்சியமாக ஆதாரங்களை பதிவு செய்தவர். அன்னை மடுமாதாவின் ஆலய வளாகத்தை யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனம் செய்து பல்லாயிரக்கணக்கான தஞ்சமடைந்த மக்களை பாதுகாத்தவர். எமது இனம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகிறது, எங்கள் இனத்திற்கான விடுதலை அவசியம் என்பதை தெள்ளத்தெளிவாக சர்வதேசத்திற்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் துணிச்சலோடு எடுத்துக்கூறிய பெருந்தகை.

அரசியல் கட்சிகள் தனித்து பயணிப்பதை விட ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தி அத்தோடு அவர்கள் ஒன்று படுவதற்காகவும் அரும்பாடுபட்டவர். விடுதலை இயக்கங்களுக்கு இடையில் இருந்த முரண்பாடுகளை தணித்து அவர்களுக்குள்ளே ஒரு சமாதான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு பெரிதும் முயன்று வெற்றி கண்டவர். இறுதி வரைக்கும் பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைய வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தி வந்ததோடு மாத்திரமல்லாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்தவர்.

இன்றுள்ள ஜனாதிபதி யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலராக கடமையாற்றிய பொழுது ஆண்டகை எமது தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களோடு பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை முன்னெடுத்து அவர் அலுவலகத்திலேயே நேரடியாகச் சென்று தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த அத்துமீறல்கள் மனித உரிமை குற்றங்கள் புரியப் படுவதாகவும் இதை கண்டிப்பதாகவும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என நேரடியாக கண்டித்தவர். அந்தக் கணத்தில் துளியளவும் விட்டுக் கொடுப்பில்லாமல் துணிச்சலோடு செயலாளர் அதிர்ந்து போகும் அளவிற்கு தன்னுடைய கருத்தினை உறுதியாக முன்வைத்தவர்.

அதோடு நின்றுவிடாது எமது மக்களுடைய கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கும் மறுவாழ்வு மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் அயராது சர்வதேச சமூகத்தோடும் அரசியல் தலைவர்களோடும் தொடர்ந்து முன்னின்று உழைத்தவர். தமிழ் இனத்திற்காக, மதக் கோட்பாடுகளையும் கடந்து அயராது குரல் கொடுத்து வந்த அன்னார் இன்று எம்மை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் ஆத்மா இறைவனடியில் சாந்தி அடையப்பிரார்த்திக்கிறோம். அன்னாருக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலிகள்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ

இறுதி நல்லடக்க நாளன்று மன்னாரில் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினம் அனுஷ்டிக்க அழைப்பு! – ரெலோ மன்னார் நகர முதல்வர்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இனம், மதம், மொழி கடந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்கத் தொடர்ந்தும் குரல்கொடுத்தார்.

தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் நேசிக்கும் ஒருமனிதர். ஆன்மீகத்திற்கு அப்பால் மனித நேயத்தை நேசித்தவர். காணாமல் ஆக்கப்பட்டவர், கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இறுதி மூச்சுள்ள வரை குரல் கொடுத்தவர்.

இவரது இழப்பு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பாரிய இழப்பு. தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையுடன் துக்க தினத்தை நினைவு கூற வேண்டிய கடற்பாட்டில் உள்ளோம்.

எனவே ஆயர் அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் கமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இறக்குமதியான தேங்காய் எண்ணெய்யில் புற்று நோய்க்குரிய இராசயணப் பதார்த்தம் உள்ளதாக வெளியான செய்தி மக்களிடையே பாரிய அச்சத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் உணவு தயாரிப்பில் பிராதான பொருள் தேங்காய் எண்ணெய்யாகும் அவ்வாறு இருக்கையில் நாடுமுழுவதும் உள்ள மக்கள் எண்ணெய்க் கொள்வனவில் பலத்த சந்தேகங்களை மனதளவில் உடையவர்களாக அச்சத்துடன் நின்மதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் பெரும்பாலான மக்கள் உணவுச் சாலைகளில் உணவினை பெற்று உண்பவர்களாக இருப்பதால் அவர்களும் பல குழப்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி யாரிடம் முறையிடுவது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையை உடனடியாக மாற்றி உணவுப் பொருட்களுக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சகல உணவுப் பொருட்களுக்குமான தர நிர்ணயம் மற்றும் சுகாதார உத்தரவாதம் போன்றவற்றை சுங்கப்பகுதியில் உறுதி செய்யக் கூடிய பக்கசார்பற்ற நிலையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் உருவாக்க வேண்டும். தவறு நடைபெறுகின்ற போது சம்பந்தப்பட்ட தரப்பு யாராக இருந்தாலும் அதி உச்ச தண்டனையை சட்டத்தின் முன் வழங்க வேண்டும்.

கொவிட் 19 ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வருமானங்கள் இல்லாமல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையில் அவலப்படும் போது அடிப்படை விடையங்களும் அரசிலாக்கப்படுமாக இருந்தால் நாடு அபாய நிலையை சென்றடையும். இதனை தவிர்க்க உடனடி நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

தமிழனத்தின் காவலனின் இழப்பு பேரிழப்பாகும் -ரெலோ வினோ நோகதாரலிங்கம்

எவருக்கும் அடி பணியாமல் உரிமைக்காக குரல் கொடுத்த தமிழனத்தின் காவலனின் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாப செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ் அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“அகில உலகமே போற்றுகின்றி வணங்குகின்ற ஓர் ஒப்பற்ற ஆன்மீக தந்தையை நம் நாடு இன்று இழந்திருக்கின்றது. அதிவந்தனைக்குரிய ஆயர் இராயப்புயோசப் ஆண்டகையின் உடலும் உருவமும் பௌதீக இழப்புக்குள் செல்வது இறைவிதி ஆகும். மனிதகுலத்தின் குறிப்பாக தமிழ்தேசிய நெஞ்சங்களில் வியாபித்து நிற்கும் உயிரும் உணர்வும் மௌனிக்க முடியாதது.

பேரருட்திரு ஆண்டகையின் ஓருயிர் ஓராயிரம் கோடி உயிர்களிடம் சங்கமித்துவிட்டது. இனம் மதம் மொழி தேசம் கடந்து ஒரு ஆன்மீகப் பணியாளனின் உயிர் உச்சரிப்பை வரலாறு எல்லோருக்கும் தந்துவிட்டுச் செல்வதில்லை.

அரசியல் பணியாளனாக தந்தை செல்வாவை அடையாளப்படுத்திச் சென்ற வரலாற்றைப் போல அந்த வெற்றிடத்தை அரசியல் ஆன்மீக சமூகவிடுதலை உரிமைசார்ந்த அனைத்துப் பரிமாணங்களிலும் ஒன்றித்து பயணித்து வரலாற்று சாட்சியமாக ஆயர் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆயரின் பணிக்காலம் என்பது போர் முனைகள் ஆயுத அடக்குமுறைகள் சூழ்ந்திருந்தகாலம். தமிழ் தேசிய தரப்புக்கள் கூட முரண்பாடுகளை கொண்டிருந்த காலம். தமிழ் பேசும் இனம் கடந்த கால அனுபவங்களை மறந்து ஒன்றுபட வேணும் என்றும் குரல் கொடுத்து அதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தவர்.

ஆயரின் அழைப்பையோ அறிவுரைகளையோ எந்ததரப்பினரும் நிராகரிப்பதில்லை. உறுதியான தூய்மையான எண்ணங்களை கொண்டிருந்தவர். தனது பணிகளை தனது சக்திக்கும் இயலுமைக்கும் ஏற்றாற்போல பூரணப்படுத்தி மக்கள் மனங்களில் எப்போதும் வாழ்வதற்கானவராக வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இராயப்புயோசப் ஆண்டகை பெருந்தேசியவாத சிந்தனை கொண்ட சமூகத்துக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். ஒரு இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைக்காக விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த இனத்துவேசிகள் ஆயரையும் அப்பட்டியலில் இணைத்து முத்திரை குத்தினர். புலிகளாக சித்தரித்தனர்.

பயமுறுத்தல்கள் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் சரியானதையும் உண்மையானதையும் நேர்மையான பாதை அமைத்து துணிவுடன் பயணித்தார். யாருக்கும் அஞ்சாமல் யாரிடமும் அடிபணியாமல் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். உலகின் மூலை முடுக்குகளெல்லாம் அவரின் உரிமைக்குரல் பதிவாகியது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை உழைத்த ஓர் உத்தமனின் உயிர்ப்பிரிவானது கோடானுகோடி இதயங்களை கதறி அழச் செய்துள்ளது. உலக சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கங்களும் அவரால் நிரப்பப்பட்டிருக்கும். நீண்ட பலகாலம் காத்திருந்தும் ஆயரின் வெற்றிடம் அடைக்கப்படும் என உறுதியாக்கம் செய்யப்படப்போவதில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் அயராது உழைத்து களைத்துப்போய் துயில் கொள்ளும் ஆண்டகைக்கு எங்கள் இறுதி அஞ்சலிகளை காணிக்கையாக்கி அவர் தம் ஆன்மீக அரசியல் சமூக விடுதலைப் பாதையில் பயணிக்க அவர்தம் கனவுகள் மெய்ப்பட அவர் நாமம் சுமந்து எங்கள் வாழ்வையும் அர்ப்பணிப்போம்” என்றார்.

இந்தியாவை ஏமாற்ற நினைத்து தம்மை ஏமாற்றிக்கொண்ட கோட்டாபய அரசாங்கம் – சிறிதுங்க சாடல்

ஜெனீவா பிரேரணைக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஏமாற்றி அதன் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தமக்கான ஆதரவை பெற முடியும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளது என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவை ஏமாற்றி இந்த வேலையை செய்து கொள்ள முடியும் எனவும் நினைத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள்.

அதற்கான சட்டங்களை கொண்டு வருமாறு பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் இந்தியா அவதானித்துக் கொண்டிருந்தது.

இந்தநிலையில், மோடி – கோட்டாவை ஏமாற்றிவிட்டார். இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என்று ஜயநாத் கொலம்பகே கூறியிருந்தார்.

அதுதான், கோட்டாபய தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பின்வாங்குகின்றார். தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட வியத்மக குழுவினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்யுமாறு கூறுகின்றனர். ஆனால் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசிக்கின்றார்.” என்று சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஆளும் கட்சிக்குள் குழப்பம் ; உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடரத் தீர்மானம் – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் லொக்குகே

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணய விவகாரம், தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சிகளில் பெரும்பாலானோர் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள். என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைத்த யோசனை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்குமாறு குறிப்பிடப்பட்டடுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு ஆளும் தரப்பினர் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய காரணிகளை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபைதேர்தல் தொடர்பில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.

உரிய காலத்தில் மாகாண சபை தேர்தல் இடம் பெற்றிருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபையின் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது .

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபை தேர்தல் குறித்து கவனம் செலுத்துமாறு மகாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த யோசனை தொடர்பில் ஜனாதிபதி மகாசங்கத்தினருடன் இடம் பெறும் சந்திப்பின் போது தீர்மானத்தை அறிவிப்பார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு

மாகாண சபை தேர்தலை அரசியல் காரணிகளுக்காக பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபை தேர்தல் எத்தேர்தல் முறையில் ,எப்போதுஇடம் பெற்றாலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் பெற்றிப்பெறும் என்பதை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.

ஆயருக்கு ரெலோ யாழில் அஞ்சலி

மறைந்த ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொரிய கோவிலில் மக்கள் அஞ்சலிக்காக ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கட்சியின் தலைவர் மற்றும்,ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ்,பொருளாளர் விந்தன் கனகரத்தினம், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் சுகாதார மட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

ஆயரின் மறைவிற்கு வலி கிழக்குப் பிரதேச சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது -ரெலோ தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களது பங்களிப்பு மதிப்பிடப்பட முடியாதது. அவரது இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்றம் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

போரின் போதும் போருக்குப் பின்பாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை நியாயமாக வெளிப்படுத்தும் நடுநிலையாளராக மறைந்த ஆயார் அதிமேதகு இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் செயற்பட்டார்.

தமிழ் மக்களுக்காக அவர் எடுத்துக்கொண்ட நீதியான வகிபாகத்தின் நிமிர்த்தம் பல சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார். ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தினை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாகவும் உணர்வாகவும் அவர் செயற்பட்டுவந்தார்.

தமிழ்த் தேசியப் பரப்பில் மதங்களைக் கடந்து எமது மக்கள் விடுதலை அடையவேண்டும் என்ற உறுதியோடு பயணித்த உத்தமர் ஒருவரையே தமிழ் இனம் இழந்து நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுவதற்காக சர்வதேச சமூகம் இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை ஆயர் பக்கசார்பற்று நடு நிலையாளராக ஐ.நா. வரை வலியுறுத்தி வந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி மீள்குடியேற்றம் என அவரது பங்களிப்பு மனித உரிமைகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது. இதற்கு மேலாக இராணுவமயமாக்கம் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மதகுருமாரையும் சிவில் அமைப்புக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட்ட ஒருவரையே நாம் இழந்து நிற்கின்றோம்.

எமது இனத்தின் மீதான ஒடுக்கு முறைகளை வெளிப்படுத்தும் உலகம் ஏற்றுக்கொண்ட ஒருவரான அவரை இழந்து இனம் தவிக்கின்றது என்பதே உண்மை. அவர் போன்றவர்கள் எம் இனத்திற்குத் தீர்வு கிட்டுவரையிலாவது இருந்திருக்க வேண்டும். அதற்குக் காலம் சந்தர்ப்பமளிக்கவில்லை. அவர் காட்டிச் சென்ற பாதையை எல்லோரும் பின்தொடரவேண்டும் என்பதே இன்றைய கடமை.

தமிழ் மக்களின் விடயங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தினர் மீது முடுக்கிவிடப்பட்ட தாக்குதல்கள் சிறைகளில் சிங்கள கைதிகள் கொல்லப்பட்டமை ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கவியலாளர்கள் மாணவ தலைவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்காகவும் எதிர்த்துப்போராடினார். ஜனநாகக் கருத்துருவாக்கத்திலும் மனித உரிமைகளுக்காக குரலற்றவர்களுக்கான குரலாக விளங்கியமையிலும் ஆயரின் பணி அளப்பரியது.

இந் நிலையில் வலிகாமம் பிரதேச சபை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது என அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.