பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைப் பிரமத வைத்தியர் திருமதி எரங்க ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பிலும் பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை குறித்து பிரதம வைத்தியரினால் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அவை நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட நோயாளிகளைப் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தொழில்நுட்ப இயந்திர வசதிகள், பிணவறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றன தொடர்பிலும் விசேடமாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதம வைத்தியரினால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்கள் மட்டத்தில் தீர்க்கப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வு காண்பதற்கும், ஏனைய விடயங்கள் தொடர்பில் மத்திய அரசின் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு இயன்ற செயற்பாடுகளை மேற்காள்வதற்கும் ஆவன செய்வதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பின்னர் வாழைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களைச் சந்தித்து பிரதேசத்தின் சுகாதார நிலைமைகள் மற்றும் டெங்கு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது.

இந்நிலையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். பல்லேதலவின்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நுகேகொட பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வத்தளை பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். ஹுன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை 774 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 76428 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 69 411 பேர் குணமடைந்துள்ளதோடு 6157 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

664 பேர் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்திற்கமைய இது வரையில் ஒரு இலட்சத்து 89 349 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 29 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை 146, 327 பேருக்கும் , பெப்ரவரி 5 தொடக்கம் 11 வரை 9983 பேருக்கும் , 12 ஆம் திகதி 1110 பேருக்கும் , 13 ஆம் திகதி 7457 பேருக்கும் , 14 ஆம் திகதி 2695 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகள், சீன திட்டங்களில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தினால் அதிருப்தியும், அதிக எச்சரிக்கையுணர்வையுமடைந்த இந்தியா, அதிக அழுத்தங்களை பிரயோகித்து இரண்டு திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொள்ள, சீனாவின் எம்.எஸ் / சினோசர்-எடெக்வினுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன. சூரிய, காற்று மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க கலவையை இந்த ஆலைகள் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க இருந்தது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தீவுகளின் இருப்பிடங்களில் ஒன்று ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் இருப்பதால் இந்த திட்டத்தை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. அங்கிருந்து சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது.

இந்த திட்டத்திற்காக டெண்டர் வழங்கிய இந்திய நிறுவனத்தை விட சீன நிறுவனம் சிறந்த தகுதி வாய்ந்தது என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஒப்பந்தத்தை அனுமதித்து என்றும் இலங்கை அரசு குறிப்பிட்டது. எனினும், இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருக்கவில்லை.

இந்தியாவின் ஆட்சேபனை இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதிப்பதாக ஆளுந்தரப்பின் ஒரு தரப்பினர் அழுத்தங்கொடுத்தனர். எனினும், பாகிஸ்தான் பிரதமரின் வருகை, சீனாவின் அதிகரித்த பிரசன்ன விவகாரங்கள் என அதிகரித்து வரும் இந்திய அதிருப்தியையடுத்து, இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை பணிந்துள்ளது.

இதேவேளை, கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லையென அரசு எடுத்த முடிவையடுத்து, மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு முனையத்தின் அபிவிருத்தியில் தொடர்புபடும் இந்திய நிறுவனத்திற்கு 85% பங்குகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு 49% பங்குகளையே வழக்க முன்னர் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதிசெய்ய இந்தியா நடவடிக்கை – தமிழகத்தில் மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

அவர்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

இலங்கையின் தமிழ் சகோதரர்கள், சகோதரிகளின் நலன்கள் அபிலாசைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்குள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாங்கள் இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்துவருகின்றோம்.

கடந்த காலங்களை விட எங்கள் அரசாஙகம் அதிகவளங்களை வழங்கியுள்ளது.

இலங்கையின் வடகிழக்கில் இடம்பெயர்ந்தவர்களிற்கு 50,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கையின் மலையகத்தில் 40,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறதென தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- கடல்வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலத்சினி? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடல்வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலத்சினி மன்னாரில் மூன்று இடங்களில் தங்கியிருந்த பின்னர் புத்தளத்திற்கு சென்று பின்னர் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே ஆணைக்குழு இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் கைதுசெய்யப்படாமல் தப்பியுள்ளவர்கள்,பிணையில் விடுதலையானவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டு போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டவர்களை புலத்சினி சந்தித்துள்ளார் என ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.

Posted in Uncategorized

இந்த அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவைச் சீண்டுகின்றது ரெலோ ஜனா

வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இந்தியா தொடர்பில் இலங்கையின் சமகால நிலைப்பாடுகள் சம்மந்தமாகக் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே தற்போது என்ன நடக்கின்றது. நான்கு தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையம் தொடர்பாக போராட்டம் நடத்துகின்றன என்பதற்காக இலங்கை, இந்தியா, ஜப்பான் போன்ற மூன்று நாடுகள் சேர்ந்து மேற்கொண்ட ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுகின்றது. இந்தியா இந்த நாட்டிற்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கின்றது. ஜே.வி.பி காலகட்டத்திலே 1971ம் அண்டு நடந்த கிளர்ச்சியின் போது இந்தியா தான் இந்த நாட்டைக் காப்பாற்றியது. 2009ல் கூட இங்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் இந்தியா இந்த அரசிற்கு உதவியது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரதத் தண்டவாளங்களை அமைத்துத் தந்தது.

அதே போல் ஜப்பான் என்பதும் இன்னுமொரு ஜனநாயக நாடு. இந்தப் பாராளுமன்றக் கட்டிடம் கூட ஜப்பானால் இந்த நாட்டிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்து. அவ்வாறான நாடுகளை ஏன் வெறுக்கின்றீர்கள். எதிர்வரும் 22ம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இந் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும், 23ம் திகதி அவர் இந்தாப் பாராளுமன்றத்திலே உரையாற்ற இருப்பதாகவும் செய்திகள் மூலம் நாங்கள் அறிகின்றோம். இதன்மூலம் என்ன நடக்கப் போகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து உரையாற்றும் போது இந்தியாவிற்கு எதிராகத் தான் உரையாற்றப் போகின்றார். வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கேள்வி. இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்

Posted in Uncategorized

ஜெனீவா விடயம் – வடக்கில் நுழையும் சீனக் கம்பனிகள் விடயம்: தமிழ் கட்சிகள் எடுத்துள்ள முடிவு!!

தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை கவனத்திற்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

இந்நிலையில், குறித்த பத்துக் கட்சிகள் சார்பாக நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.

இந்தக் குழுவை இணைத்துச் செயற்படுத்துவதற்கான இணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் செயற்படவுள்ளார்கள்.

அத்துடன், ஜெனீவா விடயம் தொடர்பாகவும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம். ஏற்கனவே, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிக்கையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும், இணை அனுசரணை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுடனும் ஏனைய உறுப்பு நாடுகளுடனும் கலந்துரையாடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.

சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளோர், கூட்டாக பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் குறுகிய நாட்களுக்குள் உரையாடவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வரக்கூடிய நெடுந்தீவு, அனலை தீவு, நயினாதீவு, போன்ற தீவுகளில் ஒரு மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் சீனக் கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறான ஒரு விடயம் நடக்குமாக இருந்தால், வடக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும்.

எனவே, அவ்வாறான சீனக் கம்பனிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு பத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வலியுறுத்துகின்றன” என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் விதமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு தற்போதே அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் கடந்த கால பொறுப்புக்கூறல்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ள நிலையில், இம்முறை இலங்கைக்கு நெருக்கடியான நிலைமை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,

ஜெனிவாவில் கொண்டுவரப்போகும் புதிய பிரேரணையை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இப்போது வரையில் சீனாவின் முழுமையான ஆதரவுடன் ரஷ்யா, கியூபா நாடுகளின் ஒத்துழைப்புகளை இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதற்கு முன்னர் 30/1 பிரேரணையை கொண்டுவந்த வேளையில் அதற்கு எதிராக வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை புதிய நகர்வுகளை கையளவே ஆராய்ந்து வருவதுடன், அதிகளவில் இலங்கையின் சார்பில் பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் புதிய பிரேரணை அடிப்படையற்ற ஒன்றாக முன்வைக்கப்படவுள்ளது.

எனவே இது குறித்து வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பார் எனவும் அமைச்சர் வீரசேகர கூறினார்.

இந்நிலையில் ஜெனிவா பிரேரணையில் இலங்கையின் பக்கம் ஆதரவை தக்கவைத்துக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். தற்போது பல நாடுகளுடன் பேசியுள்ளதாகவும், 23 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுவார்த்தை நகர்வுகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸை கட்டுப்பாடுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் நீதி கோரி வீதியில் இறங்க ராஜபக்சக்களே காரணம் – சந்திரிகா அம்மையார் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இலங்கை அரசின் தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறு கோரிக்கைகளை முன்வைப்பதற்கான நிலையை ஏற்படுத்தியமைக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, தமது கடந்த ஆட்சியில் ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழர்கள் இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்க வேண்டிய நிலை வந்திருக்கமாட்டாது.

இந்த ஆட்சியிலும் அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச, தனது ஜனாதிபதி பதவியைத் துஷ்பிரயோகப்படுத்தி வருகின்றார்.

சிவில் நிர்வாகச் செயற்பாடுகளின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை நியமித்துள்ளதுடன் மட்டுமன்றி வடக்கு, கிழக்கில் தமிழர்களைப் பழிவாங்கும் வகையிலும் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான மோசமான செயற்பாடுகளே தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது” – என்றார்