இலங்கையை நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – அமெரிக்கா

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கையை கவனமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் குறித்த அறிக்கையில் அரசாங்க செயற்பாடுகளை இராணுவமயமாக்குதல், பொது சமூகத்தை மிரட்டுதல் என்பவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன் சர்வதேச சமூகத்தின் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை தாங்கள் கவனமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலம் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் கடந்த காலத்தை கையாள்வதில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ஐ.எஸ்.ஐ.எஸ். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்த ‘மாத்தளை சஹ்ரான்’

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு நேரடியாக தொடர்புபடவில்லை என்பதும், தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பை அவ்வமைப்பு ஏற்பதற்கான நடவடிக்கைகளை ‘மாத்தளை சஹ்ரான்’ எனும் சந்தேக நபரே முன்னெடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

தனது ஆலோசனைகளின் கீழ், சி.ஐ.டி.யின் டிஜிட்டல், கணினிக்குற்றம் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி , பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோரின் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரியவந்ததாக சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர கூறினார்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளிக்கும் போது, அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

‘இவ்விசாரணைகளில் மாத்தளை சஹ்ரான் எனும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரே ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலின் பின்னர் தொடர்புகொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க அப்பயங்கரவாத அமைப்புக்கு கோரிக்கையானது அவர் ஊடாக சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, ‘சொனிக் சொனிக் ‘ எனும் புனைப் பெயரில் செயற்படும் தேசிய உளவுச் சேவை அதிகாரி ஒருவரினால் குறித்து தகவல் வெளிப்பட்டது. குறித்த அதிகாரி மாத்தளை சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரிடம் வாக்கு மூலம் பெற சி.ஐ.டி. அதிகாரிகள் சென்ற போது, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் சொனிக் சொனிக் எனும் புனைப் பெயர் கொண்ட அதிகாரியிடம் விசாரித்து வாக்கு மூலம் பெற நான் தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.’ என தெரிவித்தார்.

முன்னதாக ஆணைக் குழுவில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஷானி அபேசேகர,

‘இந்த தாக்குதலுடன் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு நேரடி தொடர்பு இல்லை என அப்போது விசாரணைகளில் தெரியவந்தது. வெளிநாட்டு உளவுச் சேவைகள், விசாரணைப் பிரிவுகள் மற்றும் இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் அத்தாக்குதலை நெறிப்படுத்தியவர் யார் எனும் கேள்வி இன்றும் தொடர்கிறது. காரணம், எந்தவொரு பயங்கரவாத அமைப்பினதும் தலைவர் முதல் அணியிலேயே தானும் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இல்லை. எனவே சஹ்ரானை இயக்கியவர் யார் என்ற கேள்வி இன்னும் உள்ளது.’ என தெரிவித்தார்.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம்! கெஹலிய ரம்புக்வெல

“ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது.” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

‘இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும்.

ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்” – என்றார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் பலி,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 06 பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பகுதியை 76 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கொழும்பு சிறைச்சாலையின் 61 வயதுடைய ஆண் கைதி ஒருவரும், கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் எடேரமுல்ல பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கை தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் சிவில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை தவறியுள்ளமையானது, மனித உரிமைகள் நிலைவரம் மேலும் மோசமடைவதைக் காண்பிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் அதிகரிக்கலாம் என்பதற்கான சமிக்ஞையாக அமைந்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகள் பேணப்படுவதையும் உறுதிசெய்யும் வகையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முக்கியத்துவம் மிக்க 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதில் இலங்கை வெளிப்படுத்தியிருக்கும் மோசமான விளைவையும் இது மனித உரிமைகளின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியம் இதனூடாக வெளிப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான உள்ளகப்பொறிமுறை கடந்த ஒரு தசாப்தகாலமாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி ஐ.நாவின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்திருப்பதுடன், அவற்றின் பரிந்துரைகளில் மிகவும் வரையறுக்கப்பட்ட விடயங்களே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே அரசாங்கத்தின் அனுசரணையுடனோ அல்லது அனுசரணையின்றியோ பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படும் என்ற மிகமுக்கிய செய்தியை ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்குக் கூறவேண்டும்.

மேலும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணித்தல், அறிக்கையிடல் மற்றும் எதிர்காலத்தில் வழக்குத்தொடுப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளடங்கலாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமுல்படுத்த வேண்டும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் பிரித்தானியா, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் ஏனைய உறுப்புநாடுகளுடன் இணைந்து புதிய தீர்மானமொன்றை முன்வைக்கவிருக்கும் நிலையில், தற்போது அனைவரது கவனமும் அதன் பக்கமே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புநாடுகள் கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் உயர்மட்ட மனித உரிமை அதிகாரிகளினால் இனங்காணப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று மன்னிப்புச்சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட், இலங்கை தொடர்பான புதிய ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையையும் இங்கிலாந்து பரிசீலிக்கும் என கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று வெளியான நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில்” இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.

எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பிரித்தானியா ஆதரவு வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எந்த நாட்டிலும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை – ரெலோ கருணாகரம்

உலகின் எந்தவொரு நாட்டிலும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைவர்கள், போராளிகள் இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “இங்கு அப்பாவி பொதுமக்கள் கொத்தணியாக கொல்லப்பட்ட வரலாறு இருக்கின்றது.

உலகத்தின் பல நாடுகளில் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக பல விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்.

அந்தப் போராட்டத்தில் இறந்த எமது உறவுகளை நினைவு கூருவதற்குக்கூட இந்த அரசாங்கம் தடை விதிக்கின்றதென்றால் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலுமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் தடுப்பூசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்

கொரோனா தடுப்பூசியை விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட தீர்மானம் என லலித் வீரதுங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள COVID தடுப்பூசியின் முதலாவது தொகுதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க தடுப்பூசி பரிசளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் Astrazeneca Covishield தடுப்பூசி மும்பையின் Serum Institute-இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் Astrazeneca Covishield தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று முற்பகல் 11.45 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இன்று கொண்டுவரப்பட்டுள்ள 2,50,000 தடுப்பூசிகளின் நிறை 1323 கிலோகிராம் ஆகும்.

குளிரூட்டபட்ட விசேட வாகனத்தில், Astrazeneca Covishield தடுப்பூசிகள், சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், 2 – 8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை மேல் மாகாணத்தின் 06 வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

COVID ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 1,50,000 ஆயிரம் சுகாதார சேவையாளர்கள், முப்படையின் 1,20,000 பேர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவினால் 03 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக COVID தடுப்பூசியை தருவிப்பது தொடர்பான குழுவின் தலைவர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயார்: பிரித்தானியா, கனடா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் பிரெய்த்வெய்ட் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் ஆதரவு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னே அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கின்றார்:

‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கனடா தயாராக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் – மிச்சேல் பச்லெட்

இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறைகள் அவற்றுக்கான சிறந்த தீர்வைப் பெற்றுத்தருவதற்குத் தொடர்ந்தும் தவறியிருப்பதுடன், தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்திருக்கிறது என்றும் மிச்சேல் பச்லெட் சுட்டிக்காட்டியிருப்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னைய நிர்வாகங்களினால் மேற்கொள்ளப்பட்ட சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் தற்போதைய கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது என்றும் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள் மீதான கண்காணிப்புக்களும் சுயதணிக்கைக்கான அவசியமும் அதிகரித்திருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப்படைகள் மருத்துவமனைகளின் மீதும் வான்வழி ஊடாகவும் கண்மூடித்தனமாகக் குண்டுவீச்சுக்களை நடத்தியதாகவும் சரணடைந்தவர்களைப் படுகொலை செய்ததாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டதாகவும் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதற்தடவையாகப் பரிந்துரைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், தமிழ் கிளர்ச்சியாளர்கள் உள்ளடங்கலாக போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைமீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிப்பதற்கும் அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கும் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.