பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணியில் 5000 பேர்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்த உள்ளதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.

தேர்தல்
ஜனாதிபதி தேர்தலை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த விடயத்தை பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவத்துள்ளார்.

திட்டமிடல்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் நான்காயிரம் பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலின் போது நீண்ட கால அடிப்படையிலான கண்காணிப்பாளர்களாக 200 பேர் வாகனங்களுடன் நியமிக்கப்பட உள்ளனர்.

பொதுத் தேர்தலின் போது விருப்பு வாக்குகளும் எண்ணப்படும் காரணத்தினால் வாக்கு எண்ணும் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெபரல் திட்டமிட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணை!

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு செய்யக் கோரி பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெனீவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது.

அதன்படி கூட்டத் தொடரின் தொடக்க நாளான கடந்த மாதம் 9 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்து மூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெற்றது.

இது இவ்வாறிருக்க, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 51 ஆவது கூட்டத் தொடரின்போது மீண்டும் கால நீடிப்பு செய்யப்பட்டு, தற்போது 51/1 தீர்மானம் எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தத் தீர்மானம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் ஒன்றிணைந்து 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குக் கால நீடிப்பு செய்வது குறித்து ஆராய்ந்தன.

அதற்கமைய ‘இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட முதல் வரைபுக்கு சகல தரப்பினரதும் ஒப்புதல் பெறப்பட்டு, அதனைப் பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இந்தப் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் எனவும், இவ்விவகாரத்தில் நெருங்கிப் பணியாற்றி வரும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

Posted in Uncategorized

முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்

அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த ஏழு பேரும் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளை பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏழு பேரும் அவர்களின் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களில் சிலர், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் சொத்துக்களை பெற்று வந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யான கூற்று என்று ஆணைக்குழு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள், தாம் சில சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை விளக்க முடியாமல் உள்ளனர். கறுவாத் தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரைப் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள்
இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 5 காப்புறுதிக் காப்புறுதிகளை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தனது நெருங்கிய சகாக்களின் பெயரில் வாங்கியதாக கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Posted in Uncategorized

டிரான் அலஸ் இன் மோசடி விசா முறையால் 100 மில்லியன் டொலர் இழப்பு!

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் அறிமுகப்படுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா முறை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கருத்திறனை மையமாக கொண்டே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது இணைய வழியாக வீசா பெற்றுக் கொள்ளும் முறை நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வந்தது.

எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் அதனை மாற்றி, இந்திய நிறுவனம் ஒன்றின் ஊடாக சுற்றுலா வீசா வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.

இதற்கமைய டிரான் அலஸ் அறிமுகப்படுத்திய புதிய முறையில் வீசா வழங்குவதற்கு கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டதுடன், வீசா பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையைத்தவிர்த்து வேறு நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் காரணமாக சுமார் 100 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜித ஹேரத்தின் கூற்றுக்கு ரணில் தரப்பு கடும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பேச்சாளர், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்தின் கூற்றை இன்று மறுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்ரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதியின் தண்டனையின்மை சலுகையை கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தண்டனையின்மையை கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும், அத்துடன் உண்மையில், அத்தகைய கோரிக்கையை அவர் ஒருபோதும் முன்வைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சாட்சியாக கூட குறிப்பிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹேரத், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் தடையின்மை சலுகையினால், சட்ட நடவடிக்கைகள் முன்னர் ஸ்தம்பிதமடைந்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கூற்றுக்களை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பணிப்பாளர் மறுத்துள்ளார்.

இந்தக் கூற்று, வேண்டுமென்றே ஊடகங்கள் உட்பட முழு பொதுமக்களையும் தவறாக வழிநடத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே பொறுப்புள்ள அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர், தெரிந்தோ தெரியாமலோ பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமற்றது என்றும் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே – கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்.பி

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் வைத்து நேற்றையதினம் (2) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேர்தல் மேடைகளில் எரிபொருளின் விலையை குறைப்போம், மின் கட்டணத்தை குறைப்போம், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவோம் என கூறினார்கள்.

புதிய அரசாங்கம்
இப்போது புதிய அரசாங்கம் ஒன்று அமையப் பெற்றுள்ளது. அப்படியானால் அப்படியானால் தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே?

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒக்டேன் 92 ஒரு லீட்டர் துறைமுகத்திற்கு வந்திறங்கும் போது அதன் விலை 195 ரூபாவாக இருந்தது, புதிய விலைகளின் கீழ் கூட ஒரு லீட்டர் எரிபொருளுக்கு அரசாங்கம் 117 ரூபா வரி அறவிடுகின்றது.

தேர்தல் காலத்தில் அதிக வரி விதிக்கப்படுகிறது, வரம்பற்ற லாபத்தைப் பெறுகிறார்கள். எனவே எண்ணெய் விலை குறைக்கப்படும். வரிகள் நீக்கப்படும். மேலும் மின் கட்டணம் 40% குறைக்கப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு மேடைகளில் பேசினார்கள்.

உண்மையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, இலங்கைக்கு பெட்ரோல்(92) ரூ. 195க்கும், டீசல் (வழக்கமான) ரூ. சுமார் 200க்கும் கொள்வனவு செய்துள்ளனர். அதன்படி, புதிய விலையை எடுத்துக் கொண்டாலும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ.117 வரியும், டீசலுக்கு சுமார் ரூ.83 வரியும் அதிகமாக விதிக்கப்படுகிறது என தெரிகிறது.

மேடைகளில் என்ன பேசினாலும் அதுதான் நிஜம். எனவே இன்னும் மின் கட்டணத்தை குறைக்க எந்த முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கினார்.

அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பெருமளவான மக்கள் வாக்களித்திருப்பதை இந்நாட்டு உழைக்கும் மக்கள் தபால் மூல வாக்களிப்பு மூலம் பார்த்துள்ளனர். சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அந்த மக்களும் நம்புகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்த் தேசியக்கூட்டணியில் இணையுமாறு தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு

“இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினராகிய நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்துகொள்ள வேண்டும் இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்தது போன்று தற்போதும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள பல்வேறு கட்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகச் செயற்படுகின்றோம்.

கூட்டணியில் ஐந்து கட்சிகள் அங்கம்
இந்தக் கூட்டணியில் தற்போது ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களுக்கு ஐக்கியம் வேண்டும் எனக் கருதுகின்றவர்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் வந்து இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம்.

எமது இந்த அழைப்புக்குப் பதிலளிக்காத இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இந்தத் தேர்தலில் மீண்டும் வந்து போட்டியிடுமாறு கூறுயிருக்கின்றனர். அந்த அழைப்பானது உளப்பூர்வமாக இல்லாமல் வெறுமனே ஏனோதானோ என்பது போல் அமைந்திருந்த்து. உண்மையில் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது.

ஆனால், நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில் வந்து இணைந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழ் மக்களின் ஐக்கியம் குறித்து பேசுகின்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் எமது கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்புகின்ற பட்சத்தில் எப்போதும் வந்து இணைந்துகொள்ளலாம். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் ஒருமித்த தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. அவர்களுக்கு இடையே உள்முரண்பாடு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே அந்தக் கட்சி இப்போது நீதிமன்றமும் சென்றுள்ளது. அவர்களால் ஒருமித்து திட்டவட்டமான தீர்மானமொன்றை எடுக்க முடியாது. இப்போது இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் தங்கள் கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு கட்சிக்குள்ளேயே சுமுகமான அமைதியான சூழலை ஏற்படுத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாதவர்கள் எவ்வாறு பொது இணக்கத்தை ஏற்படுத்த முடியும்.? இதனால் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கப்படுமா என்பது கூட சந்தேகம் நிலவுகின்றது. ஆகவே, தமது கட்சிக்குள்ளேயே உள்ளக முரண்பாடுகளைத் தீர்த்து முதலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கட்டும்.

அதன் பின்னர் ஐக்கியம் குறித்து பேசலாம். கூட்டணி குறித்தும் பேசலாம். எனவே, தமிழரசுக் கட்சியினர் தமது கட்சிக்குள்ளேயே பல பிரிவுகளாக இல்லாமல் ஓரணியாக ஒருமித்த தீர்மானத்தை எடுத்து அதனை உளப்பூர்வமாக முதலில் அறிவிக்கட்டும். அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.” – என்றார்.

Posted in Uncategorized

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தங்களுடன் கூட்டிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலி்ல் போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே நியமிக்கப்பட வேண்டும் என்று சஜித் தரப்பில் இருந்து கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 இல் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்து செய்ய உத்தரவு
2024 இல் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்து செய்ய உத்தரவு
கூட்டணி பேச்சுவார்த்தை
அது மாத்திரமன்றி கூட்டணியின் செயலாளர் பதவியும் தமக்கே தரப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ருவன் விஜேவர்த்தன மற்றும் தலதா அதுகோரளை ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் தரப்புடன் கூட்டிணையாமல் தனித்துப் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதன் காரணமாக ஐ்க்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

யாழில் பொது தேர்தலை இலக்குவைத்து கட்டுப்பணம் செலுத்திய 8 சுயேச்சைக் குழுக்கள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 8 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க முடியும்.” என்றார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை கண்டுபிடிக்குமாறு கோரும் நாமல்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துமாறு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் செனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அறிக்கை காணவில்லை என கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சிரில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பிலேயே நாமல் ராஜபக்ச தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் கண்டுபிடிப்புகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

இது, உண்மையாக இருந்தால், அரசாங்கம் உடனடியாக அதனை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized