தமிழரசுக் கட்சியில் சிறீதரன் – சிறிநேசன் ஆகியோரை நீக்குவதில் தீவிர திட்டம்

இலங்கையின் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இவ்வாறான மாற்றங்கள் வெறுமனே இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழ் அரசியல் கட்சிகள், முக்கியமாக தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் நகர்வுகளிலும் நிகழ வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சிக்கு யார் தலைவர் என்ற பிரச்சினை மிக தீவிரமாக பேசப்பட்டது. அதன்பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல விவாதங்களும் நடைபெற்றன.

இவ்வாறு ஒவ்வொரு அரசியல் நகர்வுகளிலும் தமிழ் அரசியல்வாதிகள் தமது கருத்து வேறுபாடுகளால் முரண்பட்ட வண்ணமே உள்ளனர்.

இதன் உச்சகட்டமாக தற்போது தமிழரசுக் கட்சியில் இருந்து சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோரை நீக்குவதற்கு தீவிர திட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் இந்தியா : தமிழ்கட்சிகளிடம் தூதுவர் தெரிவித்த விடயம்

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்டோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

இந்திய தூதுவர் கூறிய விடயம்
நேற்று இந்திய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. அவையாவன தற்போதுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டில் தாங்களும் இணைந்து செயற்படப் போவதாக இந்திய தூதுவர் எடுத்துக் கூறினார். அடுத்து வடக்கில் அதிகளமான அபிவிருத்தியை இந்தியா செய்ய இருக்கின்றது. அவ்வாறான அபிவிருத்தியின் போது அதன் பலன்களை தமிழ் மக்கள் அடைய வேண்டும் என்ற ரீதியில் அவருடைய கருத்துக்கள் இருந்தன.

அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். தற்போது உள்ள அந்த பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும்.

அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் தமிழரசு கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன்.

இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசு கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும்.

அந்த வகையில் எங்களைப் பொறுத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம். விமர்சனங்கள் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் வெளிப்படையாக சஜித்துக்கும் ரணிலுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பொது வேட்பாளராக களம் இறங்கிய அரியநேந்திரன் 2 லட்சம் வாக்குகளை பெற்றது என்பது சாதாரண விடயம் அல்ல. நாங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்திருந்தால் கூடுதலாக வாக்குகளை பெற்று இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.

இந்த காலத்திலே விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றது. தேசியத்தோடு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கு விரலை நீட்டி அவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நிலைமை காணப்பட்டது. அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கின்றது. அவை ஆராயப்பட வேண்டும்.

குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும்.

மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும்.

வன்னியை பொறுத்தவரை அபாயகரமான நிலை
ஆகவே வன்னியை பொறுத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது. அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும்.

ஆகவே மக்கள் கோபப்படும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்காது, இருக்கவும் கூடாது என கேட்டுக் கொள்வதோடு ஒரே அணியில் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தான் சாதகமாக இருக்கும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் மாயமான கிழக்கு எம்.பிக்கள் : லவக்குமார் குற்றச்சாட்டு!

கிழக்கை மீட்கப் போகின்றோம், அபிவிருத்தியை செய்யப்போகின்றோம் என்றவர்கள் இன்று புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் ஒழித்து திரிகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் சுயேடட்சைக்குழுவாக போட்டியிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை (1) தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழினத்துக்காகவும் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

கடந்த கால அரசியல் பயணங்களை பார்க்கின்றபோது பலவிதமானவர்கள் பலவித அரசியல் கோணங்களிலே பயணித்தனர்.

ஏங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பி பலவிதமான தடைகள் எதிர்ப்புக்கு மத்தியிலே இலங்கை அரசையும் எதிர்த்து நாங்கள் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை நடாத்தவேண்டிய காலம் மாறவேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு : விஜித ஹேரத் விளக்கம்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை வெளியிடுவதைத் தவிர்த்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வு வழங்கப்படுமெனவும், 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவெனவும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் சிங்கள மொழியில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அது அமைந்திருந்தது.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

“ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முதலாவது விடயம் கடந்த காலத்தில் இடம்பெற்றது ஜனாதிபதி தேர்தல். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு இப்போது நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர்தான் அரசாங்கத்தை அமைக்கும் விடயம் இடம்பெறும்.

எனவே, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதனை இந்நாட்டு மக்களிடம் சமர்ப்பித்து, இந்த நாட்டு மக்களின் பொதுக் கருத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கை மற்றும் வேலைத் திட்டம் தெளிவாக உள்ளது” என்றார்.

புதிய ஜனாதிபதியின் மூவரடங்கிய அமைச்சரவைக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்படாவிட்டாலும், அவர்களின் விடுதலைக்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்,

“எங்கள் நிலைப்பாடும் அதுதான். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான சட்ட கட்டமைப்பு உள்ளது. நீதி அமைச்சிடமிருந்து தேவையான அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

எனவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் பிரதான விடயங்கள் குறித்தே இடம்பெற்றது.

அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் எதிர்காலத்தில், குறிப்பாக புதிய அரசாங்க செயல்முறையுடன், நாங்கள் நிச்சயமாக தீர்மானம் எடுப்போம்.” என்றார்.

Posted in Uncategorized

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி: அநுர தரப்பு குற்றச்சாட்டு

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில், நேற்று (01.10.2024) இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நேற்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் இடையூறு ஏற்படுத்தியதோடு தாம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என பொய்யாக கூறி எமது கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தவும் அபகீதியை ஏற்படுத்தும் நோக்கோடும் செயற்பட்டிருந்தனர்.

தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படுகின்ற ஆதரவையும் நல்ல எண்ணத்தினையும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறான செயலில் ஈடுபட்டதை எண்ணி மனவருத்தமடைகின்றோம் என தெரிவித்தார்.

சர்வதேச ரீதியான ஒப்பந்தங்களில் விலக முடியாத பெரும் நெருக்கடியில் அநுர!

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கையில் இருந்து இலங்கை விலகிச் செல்வதற்கான ஏது நிலைகள் இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அது அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமாக இருந்தாலும், வேறு யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் அதில் இருந்து விலகிச் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு விலகிச் செல்வார்களாக இருந்தால் மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நிச்சயமாக சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

போர்குற்றச்சாட்டு விசாரணைக்கு அநுர அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் : ஜெய்சங்கரிடம் கோரிக்கை!

இலங்கையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணைக்கு, முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே ராமதாஸ் தமது எக்ஸ் (X) தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த விஜயம் இலங்கைத் தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள போதிலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

எனவே, மாறிமாறி ஆட்சி செய்த பாரம்பரிய கட்சிகள் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளார். ஆகையால், பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை ஜனாதிபதியிடம் முன்வைக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

Posted in Uncategorized

உணவுக்கான நிலுவை தொகையை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை கணக்கிட்டு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுப்பனவு தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாதாந்த கொடுப்பனவு
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் இவ்வாறான நிலுவையிலுள்ள கணக்குகளுக்கு உடனடியாக தீர்வினை காண மாதாந்த கொடுப்பனவு தொகையை தாமதமின்றி வழங்குவதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொடுப்பனவு தொகை தாமதமானது தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற சேவை திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

Posted in Uncategorized

பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி: ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம்

ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரே சீனா கொள்கையானது இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரிமாற்றங்கள், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கிடைத்த உதவிகள், பட்டுப்பாதை முயற்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சீன நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்புகள் என்பவற்றை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் ஒற்றுமை
இந்தநிலையில்,பொருளாதார மீட்சி செயல்முறைக்கு சீனாவின் ஒற்றுமை, ஆதரவு மற்றும் தொடர்ச்சியான பங்காளித்துவத்தை இலங்கை நாடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங், சர்வதேச நிலைமைகள் எவ்வாறு மாறினாலும் அல்லது பாரம்பரிய அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், சீன அரசாங்கமும் மக்களும் எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized