திருகோணமலை மாவட்ட மக்களே உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க எங்கள் வேட்பாளர் துஷ்யந்தன் உங்கள் முன் நேருக்குநேர் -இடம் நகரசபை மண்டபம் -சனிக்கிழமை 26-10-24 -நேரம் பிற்பகல் 4 மணி.
திருகோணமலை மாவட்ட மக்களே உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க எங்கள் வேட்பாளர் துஷ்யந்தன் உங்கள் முன் நேருக்குநேர் -இடம் நகரசபை மண்டபம் -சனிக்கிழமை 26-10-24 -நேரம் பிற்பகல் 4 மணி.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது அரசுடன் இணையுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.
தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.
இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம்.
உண்மையை நாட்டு மக்களுக்குக் கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சராவது பிரச்சினை அல்ல, அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்தான் பிரச்சினை – என்றார்.
”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார்.
அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது,
”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.
வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.
13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.
இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.
இலங்கை தமிழரசுக்கட்சி என்பது சுமந்திரனின் தனிப்பட்ட கம்பனி. தனிப்பட்ட இந்த கம்பனியில் அவர் தலைவராக இருக்கிறார். எனவே வீட்டுக்கு வாக்களிப்பதா அல்லது கம்பனிக்கு வாக்களிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியம் என்பது தற்போது அறவே இல்லை. அப்படி இருந்திருந்தால் கடந்த 06 ஆம் திகதி நான் கட்சியை விட்டு விலகியிருக்கமாட்டேன்.நான் ஒருபோதும் பதவி கேட்டு அலைபவன் அல்ல. பதவிக்காக கட்சியை விட்டு விலகியது என குற்றம் சாட்டுவது பொய்யானது.
சம்பந்தனுக்கு உள்ள குணமே சுமந்திரனிடமும் உள்ளது. அதாவது காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றையும் பேசுவது. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் உள்ளவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள். அவ்வாறு அவரின் ஆதரவாளர்களை உள்வாங்குவதற்கு காரணம் சம்பந்தன் என மேலும் தெரிவித்தார்.
ஒரு சில சமூக கட்டமைப்பை சேர்ந்தவர்கள் சுயலாபத்திற்காக சங்கு சின்னத்துக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் பொய்யானவை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (16) அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ” எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கப்பட்டமைப்பானது பங்குபற்றவில்லை என அறிவித்ததன் பின்னர், சங்கு சின்னம் சமபங்காளிகளாக இருந்த எங்களுக்கு உரித்தாகியது.
எனவே, சட்ட ரீதியாக தேர்தலில் போட்டியிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கமைய பொதுக்கப்பட்டமைப்பின் அனுமதியுடன் சங்கு சின்னத்தை நாங்கள் பெற்று கொண்டுள்ளோம். அதில் எந்தவிதமான குளறுபடிகளும் இல்லை.
இந்நிலையில், ஒரு சில சமூக கட்டமைப்பை சேர்ந்தவர்கள் தங்களுடைய சுயலாப அரசியலுக்காக, சங்கு சின்னத்தில் போட்டியிட கூடாது என கருத்து முன்வைக்கப்பட்டதாக பொய்யாக கூறி வருகின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
சில தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாகவே தமிழரசுக் கட்சியில் குழப்ப நிலை காணப்படுவதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று புதன்கிழமை (16) மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இடம்பெறுகின்ற தேர்தல்களில் இளைஞர்கள் போட்டியிட வேண்டும், மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றீர்கள்.
அரசியலில் இளைஞர்கள்
வன்னி தேர்தல் தொகுதியில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது, பல மாற்றங்கள் தென்படுகின்றது. தென்பகுதி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய பின்னர் எமது பிரதேச மக்களிடமும் மாற்றம் ஒன்று வேண்டும்.
இளைஞர்கள் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றிய துமிந்த ஹுலங்கமுவ புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் சிரேஸ்ட பொருளாதார ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி என்ற கட்சியின் சார்பில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் இந்ரானந்த டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மெதிரிகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்
குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் ஆலோசனை குழுவின் பெயர் பட்டியலில் 12ஆம் இடத்தில் இருப்பவர்தான் இந்த துமிந்த என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை சுற்றியிருந்து, நாட்டையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள் தள்ளிய ஊதாரிகளுக்கு அநுர அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
துமிந்த ஹுலங்கமுவ இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
கோட்டாவின் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த ஹுலங்கமுவ, அநுர அரசாங்கத்தில் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்ரானந்த டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்த குற்றச்சாட்டை நேற்று தம்புள்ள பிரதேசத்தில் வைத்து முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக வரையின்றி கடன் பெற்றுக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுர அரசாங்கத்தை விமர்சிக்கும் மொட்டுவின் வேட்பாளர்
அநுர அரசாங்கத்தை விமர்சிக்கும் மொட்டுவின் வேட்பாளர்
ஓய்வூதியம்
எனினும், நாட்டு மக்களுக்கு எவ்வித உணரக்கூடிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட முடியாது என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கான 3000 ரூபாவினை இன்னமும் செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2ஆம் திகதி, 9ஆம் திகதி, 11ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது எனவும் இதன் மொத்த தொகை 41900 கோடி ரூபா எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.
ஜெனத்தா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர அரசு கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி கோத்தா தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் உள்ளது அதிகாரப்பகிர்வு தேவையற்றது 13 ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் என கூறிக் கொண்டு அதனை நீக்க புதிய அரசியலமைப்பு குழுவை தன்னிச்சையாக நியமித்த விழைவை எப்படி அனுபவித்தார் என்பதை நாடே அறியும்.
கோத்தாவின் வெளியேற்றத்தை சாதகமாக பயன்படுத்தி ஜனாதிபதிக் கதிரைக்கு வந்து விட்டு கோத்தா தமிழர் விவகாரத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை அநுர கையில் எடுப்பதாக இருந்தால் கோத்தா சந்தித்த அதே நிலையை எதிர் கொள்ள வேண்டி வரும்.
தமிழர் விவகாரத்தை இனவாதமாக கையில் எடுப்பதான வெளிப்பாடுகள் தான் தொடர்ச்சியாக அநுர அரசின் பிரதிநிதிகள் அனைவரும் வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது இப்படியான வெளிப்பாடு நாட்டின் மாற்றத்திற்கு ஆரோக்கியமாக அமையமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.