கோட்டா கோ கமவில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் 35ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35ஆவது நாளாகவும் தொடர்கிறது.

மேலும் இதன்போது, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.இதேவேளை நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் ரணிலுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு!

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.

Posted in Uncategorized

எங்கள் உறவுகளை கொன்றொழித்தவர்கள் இன்று சொந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்புத் தேடி ஒழிந்துகொண்டிருக்கின்றார்கள்… – த.செல்வராணி

தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

‘உப்பில்லாக் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் அவல நிலையை நினைவு கூரும் முகமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் நாள் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது இன்று பதின்மூன்று வருடங்களின் பின்னர் இலங்கையில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களது சொந்தங்களை, உறவுகளை, உடமைகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பதற்கு தக்க இடமில்லாமல், ஒழிப்பதற்குக் கூட இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு ‘முள்ளிவாய்க்கால் உப்பிலாக் கஞ்சி’ தயார் செய்து பிரதேச பொதுமக்களுக்கு வழங்கினர். இதனைப் பொதுமக்;களும் பெரும் ஆவலுடனும், உணர்வு பூர்மாகவும் அருந்திக் கொண்டனர்.

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாகவும், அவ்வுறவுகள் பட்ட அவலங்களை பறைசாற்றும் முகமாகவும் முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வானது மே 12 தொடக்கம் மே 18 வரையான காலப்பகுதிகளில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: கொழும்பில் உள்ள இந்திய தூதர்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதும் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியையடுத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து  புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் (தூதரகம்) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்,’ என்று தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு!

காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்னை அடிப்படையாகக் கொண்டே இவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்‌ஷ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன, பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலருக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”பிரபலமான அமைச்சு பதவிகளை நாங்களும் பெறலாம்”: மனோ

இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்திலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
அவரின் அந்தப் பதிவு வருமாறு,
ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.
எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம். அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே ஆளட்டும்.
அவருக்கு எமது பண்பான வாழ்த்துகள்.
ரணிலுக்கு இழக்க எதுவுமில்லை. எமது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஆட்சி பொறுப்பை ஏற்காமைக்கு காரணம், பிரதான எதிரணியான எமது கொள்கை கோட்பாடுகள்.
நமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறுபான்மை கட்சி. இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம். அதற்கான அழைப்பு எமக்கு எப்போதும் இருக்கிறது.
ஆனால், அதை நாம் செய்யவில்லை. மாறாக வெளியிலிருந்து பிரதமரை, எமது “முன்னாள் பிரதமரை” வாழ்த்துகிறோம்.
தற்சமயம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, நாம் எதிரணியில் இருக்கிறோம். நடப்புகளை அவதானித்து பொறுப்புடன் கட்சியாக பயணிக்கிறோம்.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

இதனை அடுத்து அமைச்சரவையும் கலைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதே வேளை, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் ஊடாக அவர் தனது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் – சரத் பொன்சேகா

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் திட்டவட்டமாக ஏற்கப்போவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச தலைவரின் கீழுள்ள அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என அந்த பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலை படுகொலை வாரம் வடக்கு கிழக்கில் இன்று ஆரம்பமானது.2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இறுதிக் காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனித பேரவலத்தையும் கொடுமையினையும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து அமைத்து அவற்றினை மக்களுக்கு வழங்கி முள்ளிவாய்க்கால் துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

Posted in Uncategorized