அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது; கோவிந்தன் கருணாகரம்!

சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோரி கடந்த எட்டு தினங்களாக காலிமுகத்திடலில் சிங்கள இளையோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும்,ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடு இன்று பொருளாதார ரீதியாக அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது.எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதாரத்தினை தூக்கிநிமிர்த்தக்கூடிய நிலையில்லை.இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதன் தர்ப்பரியம் தெரியாமல் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியான போராட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்றபோது தமிழ் மக்கள் மீதான யுத்ததிற்காக இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசுகள் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ததே முதல்காரணமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் மாறிமாறி வந்த அரசுகள் இந்தளவுக்கு யுத்ததிற்கு டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது.

தற்போதுகூட சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி சிங்கள மட்டும் சட்டத்தினை கொண்டுவந்தபோது தமது மொழி உரிமைக்காக இதே காலிமுகத்திடலில் ஜுன் மாதம் 05ஆம் திகதி தமிழ் தலைமைகள் சத்தியாக்கிரக போராட்டம் செய்தார்கள். அப்போராட்டத்தின்போது சிங்கள காடையர்கள் ஏவிவிடப்பட்டு தமிழ் தலைமைகளின் மண்டைகள் உடைக்கப்பட்டதுடன் காதுகள் கடித்து துப்பப்பட்ட வரலாறுகள் எங்களுக்கு தெரியும்.

தமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் இந்த போராட்டத்தினை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதை சற்று சிந்திக்கவேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை ஒப்படைத்த,காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1800 நாட்களையும் தாண்டி வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

சிங்கள இளைஞர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இன்று ஒரு சில தமிழ் தலைமைகள் அறைகூவல் விடுக்கின்றனர்.இவ்வாறு அறைகூவல் விடுக்கும் அந்த பிரதிநிதிகள் வடகிழக்கில் தமது உறவுகளை தேடி போராடும் போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைப்பதற்கு எந்தவித அக்கறையும் அற்றவர்களாகவேயிருந்தனர்.

நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகம். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினால் இன்று மின்சாரத்திற்கும்,எரிபொருளுக்கும்,பால்மாவுக்கும் போராடுகின்றார்களே தவிர இந்த பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான எந்த முயற்சியும் காட்டப்படவில்லை.

எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது : தாய்நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பலத்துடன் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எனவே இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும். அது எம்மால் முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பு – கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். சுயநலத்திற்காக கோபமும் , விரோதமும் தலைதூக்குகியிருக்கிறது.

இலங்கைக்குள் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையை நாம் என்று மாற்றப் போகின்றோம்? நாம் என்று புதியதொரு தொடக்கத்திற்குச் செல்லப் போகின்றோம்? அது தொடர்பில் சிந்திப்பதற்கான காலம் தோன்றியுள்ளது.

ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எம்மால் தொடர்ந்தும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது.

நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைவரையும் ஊழல்வாதிகளாகவே காண்கின்றோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி , அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாகவுள்ளனர். 74 ஆண்டுகளுக்குள் எமது அழகிய தாய் நாடு சீரழிந்துள்ளது.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றுதல் , பொய் மற்றும் ஊழல் என்பவற்றின் உச்சகட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்களை எதிர்கொண்ட விதமும் , அவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முறைமையுமாகும்.

முழு நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. எம் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர். நாம் நேர்மையாக செயற்பட வேண்டும்.

வரலாற்றில் பல தவறுகளை இழைத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியும் என்றார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (18) 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Posted in Uncategorized

17 பேரடங்கிய புதிய அமைச்சர்கள் விபரம் – நசீர் அஹ்மட்டுக்கு முழு அமைச்சுப் பதவி (முழு விபரம் உள்ளே)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது.

இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஷீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம்

பிரசன்ன ரணதுங்க – பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து

கனக ஹேரத்- பெருந்தெருக்கள்

விதுர விக்ரமநாயக்க – தொழில்

ஜனக வக்கும்புர – விவசாயம், நீர்பாசனம்

செஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன யாபா – நீர் வழங்கல்

விமலவீர திசாநாயக்க – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

காஞ்சன விஜேசேகர – எரிசக்தி, மின்வலு

தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

நாலக கொடஹேவ – ஊடகம்

சன்ன ஜயசுமன – சுகாதாரம்

நசீர் அஹமட் – சுற்றாடல்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதால் குழப்பம்!

இன மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு பலவாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பலரது வரவரப்பை பெற்ற போதிலும் பௌத்த தேரர் ஒருவர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த தேரர் அங்கு நின்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இலங்கை மக்களிடையே இனவாத சிந்தனைகளை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிய ஒரு தரப்பினர் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டுவருகின்றது.

எவ்வாறாயினும் இன்று இலங்கையர்களாக காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ள மக்கள் தமது ஒற்றுமையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.

எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைய ஒற்றுமை இன்றியமையாதது. குழப்பக்காரர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மக்களின் மத்தியில் முறுவலை ஏற்படுத்தலாம் அவற்றை கண்டுகொள்ளாது அல்லது சகித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதே வெற்றிக்கான வழி!

Posted in Uncategorized

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் – அத்துரலியே ரத்ன தேரர்

மகாசங்கத்தினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.

காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கு முரணாக செயற்பட்டதன் விளைவை அரசாங்கம் தற்போது எதிர்க்கொள்கிறது.

அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பிரதான தடையாக உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதையும் மகாசங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள் .மகாசங்கத்தினரது ஆலோசனைக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலக வேண்டும்.

காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளம் தலைமுறையினரது கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மக்களின் ஜனநாயக போராட்டம் இறுதியில் இராணுவ போராட்டமாக மாற்றமடையுமா என்ற அச்சம் காணப்படுகிறது என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகம்மீது ஒளி பாய்ச்சி நூதன போராட்டம்!

காலிமுகத்திடலில் ஒன்பதாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகிலுள்ள ஜனாதிபதி செயலகம்மீது ஒளிபாய்ச்சி நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என்று போராட்டம் நடத்துவோரே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது அவர்கள் கோட்டாபயவு வீட்டுக்கு போ என்ற வாசகங்களை பரப்பியதுடன், அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களையும் ஒளி மூலம் ஜனாதிபதி செயலகத்தில் பாய்ச்சினர்.

Posted in Uncategorized

அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினரையும் இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.

ஆனால் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட உயிராபத்தை தடுப்பதற்காக அப்போதிருந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்திருந்தால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அவர்கள் இராஜினாமா செய்யவில்லை. அனைவரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒழித்து வாழ்ந்தார்கள். இதனால் மக்களை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இதேவேளை அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார் .

Posted in Uncategorized

புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்கப்போவதில்லை

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று தெரிவித்துள்ளார்.

தனது தீர்மானம் தொடர்பில் சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு, புத்தசாசனம் மற்றும் மக்களுக்கான ஐக்கியத்துக்காக எப்போதும் நிற்பதாகவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வதாகவும் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

உடனடியாக இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வரையில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் என ஊடகங்களி் செய்திகள் பரவி வருகின்றன.

புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் புதிய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத் தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

எனினும் குறித்த இணையத் தளமானது உடனடியாக சில மணி நேரங்களுக்குள் வழமையான செயற்பாட்டுக்காக, மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவை வீரகேசரிதொடர்புகொண்டு வினவிய போது, பொலிஸ் இணையத் தளத்தில் தடங்கல்கள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார்.

அது தொடர்பில் விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இச்செய்தி எழுதப்படும் வரை பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.