இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கரையோர வர்த்தகர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க கூறிய விடையம் இலங்கையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழித்தால் தான் நாடு முன்னோக்கி செல்லும் யதார்த்த பூர்வமாக இருந்தாலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கான வழியை அனுர சட்டரீதியாக குறிப்பிடவில்லை.

உண்மையாக பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பே அந்த நாடுகளில் இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற அமைதியான நாடுகளாக முன்னோக்கி செல்ல மாத்திரமல்ல அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும் மாற வழி திறந்தது.

இலங்கையில் பல்லினங்கள் வாழும் நாடு அவ்வாறு இருக்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் ஒரு இனத்திற்கு சார்பான அதிகாரங்கள் மேலோங்கி இருக்கும் போது ஏனைய தேசிய இனங்கள் நசுக்கப்படுவதற்கு அப்பால் அதிகார மேலாதிக்கம் கொண்ட இனத்தின் மூலமே இனவாதமும் மதவாதமும் கட்டவிழ்க்கப்படுகிறது.

ஆகவே ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களுமே இனவாதம் மற்றும் மதவாதங்களை தங்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலாக செயற்படுத்தியுள்ளனர் தற்போதும் செயற்படுத்துகின்றனர் எனவே இலங்கைத் தீவில் இனவாதம் மற்றும் மதவாதத்தை அடியோடு இல்லாது ஒழித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பாக மாற்ற வேண்டும்.

இதனை பகிரங்க வெளியில் தொடர்ந்து அனுரகுமார திஸநாயக்காவால் கூற முடியுமா?

Posted in Uncategorized

தமிழினத்தை மண்ணுக்குள் கொன்று முடக்கிய இராணுவத்தினர்: அஞ்சி ஒதுங்கும் அநுர

சர்வதேச மட்டத்திலும், இலங்கையில் தென்னிலங்கை மற்றும் மலையக தரப்புக்களிலும் செம்மணி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறி இருப்பினும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியையும் அரசின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்வி குறியாக்கியுள்ளது.

நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்தவை இனப்படுகொலை இல்லை என காலம் காலமாக இலங்கை அரசு தெரிவித்து வந்த நிலையில், தற்போது எலும்புக்கூடுகள் கொத்து கொத்தாக கண்டுபிடிக்கப்பட்டு நடந்தது இனப்படுகொலைதான் எனவும் அதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்கியுள்ளது.

இருப்பினும், இதற்கு காரணமான சூத்திரதாரிகளை காப்பாற்றுவதில் அன்றைய அரசாங்கம் தொட்டு தற்போதைய அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கம் வரை மிகவும் கவனமாக உள்ளனர்.

நாட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்த அநுர தற்போது அதற்கு காரணமான இராணுவத்தினரை காப்பாற்ற முற்படுவது என்பது அவர்கள் மீதான பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பிலும், செம்மணி விவகாரத்தில் அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு, தமிழ் மக்களின் கோரிக்கை, இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமான இராணுவத்தினரின் அடுத்த கட்டம், சர்வதேச நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும்,வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளரும் வடக்கு மனித உரிமைகள் நிலையத்தின் முக்கியஸ்தருமாகிய தியாகராஜா நிரோஸ் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் -ரெலோ தலைவர் செல்வம்

தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள். நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேச கூடாது என ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாத்துறையை விஸ்தரிக்க முடியும் வெளிநாட்டு பறவைகள் மன்னாரில் தான் தங்குகின்றன எனவே மன்னாரில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முடியும் . அதனை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். அவர் கடற்படையில் ரொட்டி சுட்டவர் போலுள்ளது. எங்களைப் பொறுத்த வரையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியது. இந்தியா கொடுத்த பணத்தில் சரத் வீரசேகர உடம்பை வளர்த்து விட்டு இப்போது இந்தியாவுக்கு எதிராகப் பேசுகின்றார்.

எங்களைப் பொறுத்த வரையில் நாம் சொல்கின்றோம் தென்னிலங்கையை நீங்கள் சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் விடுங்கள்.நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். இந்தியாவை பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒரு போதுமே செயற்பட முடியாது. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா உள்ளது என்றார்.

காணி அபகரிப்புகள் இந்த அரசு மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் ரெலோ தலைவர் செல்வம்

“வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். அரசு ஓர் கொள்கையில் இருக்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். மாறுபட்ட கொள்கைகளால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்” என்று ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “எமது மக்களிடம் இருப்பதை தக்கவைத்துக் கொள்வதற்காக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகள் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுக் காணிகளில் உள்ள மரக் கிளையை தமிழர் ஒருவர் வெட்டினால் அவர் கைது செய்யப்பட்டு, அவர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஆனால், வடக்கில் மகாவலி வலயத்துக்குட்பட்ட 600 ஏக்கர் காணியைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் வெற்றிடமாக்கியுள்ளார்.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள காணி ஒன்றைப் பொலிஸார் துப்பரவு செய்துள்ளனர். காணி அபகரிப்பு நிறுத்தப்படும், காணி விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ஆனால் பொலிஸார், முப்படையினர் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றார்கள்” என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “ஓமந்தை பொலிஸ் நிலையம் தொடர்பில் இன்று காலையில் அறிந்தேன். இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். அந்தக் காணி துப்பரவு செய்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., “மிக்க நன்றி. அரசு ஒரு கொள்கையில் செயற்பட்டாலும், வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். இவ்வாறான மாறுபட்ட கொள்கையினால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதைக் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.

மகாவலி வலயத்துக்குட்பட்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “600 ஏக்கர் அல்ல 46 ஏக்கர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர்தான் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை அழித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அந்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சம்பவத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், “மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அண்மையில் மன்னாரில் பொதுக் காணிகள் துளையிட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (1) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், மன்னார் நகர சபை உறுப்பினர் செபமாலை ஆரோக்கியநாதன் பிகிறாடோ, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறையில் கப்பல் கட்டுவதற்கு சிறிய நிலையம் ஒன்றை அமைத்தல், மன்னாரில் நவீன முறையில் விளையாட்டு மைதானம் அமைத்தல், மாந்தை மேற்கில் உள்ளக விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்தல், மன்னார் பிரதேச சபை பிரிவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தேவையான உதவிகள் போன்றவற்றை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோளை இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி ஏற்றுக்கொண்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப்படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம்

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இழிவு படுத்தி ஊடகங்களில் கதறிய சிங்கள இனவாதிகளுக்கும் கடந்த காலத்தில் பேரினவாத அரசுகளை மீட்டு கொடுத்த தமிழ்க் குழுக்களும் மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் உடையது எனவும், அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.

செம்மணிப் மனிதப் புதைகுழி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால் பொய்யுரைக்கும் போது செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக் கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மிகப் பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும் கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது.

செம்மணிப் பகுதியில் புதைகுழி ஏற்படுத்தப்பட்ட சம காலத்தில் அப்பகுதி இராணுவமுகாமில் இருந்த சிப்பாய்கள் சாட்சியாக இருக்கும் போது கடந்த கால அரசுகளின் கைக்கூலிகளும் தென்னிலங்கை இனவாதிகளும் யாரைக் காப்பாற்ற செம்மணிப் மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

தண்ணிரூற்று பொதுச் சந்தை இருப்பினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் – கமல விஜிந்தன்

கரைதுறைபற்று பிரதேச சபை உங்களிடம் அவசர வேண்டுதல் தண்ணிரூற்று பொதுச் சந்தை தொடர்பான மிக அவசியமான விடயங்களை பல நாட்கள் அவதானிப்பின் பின் உடனடி தீர்வுக்காக இதனை முன்வைக்கின்றேன் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் கரைதுறைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கமல விஜிந்தன்

01-தண்ணிரூற்று பொதுச்சந்தையின் நுழைவாயில் பகுதி எந்தவிதமான அச்சறக்கையும் இல்லாமல் திறந்த வெளியாக காணப்படுகின்றது இதனால் இரவு நேரங்களில் கால்நடைகள் குறிப்பாக மாடுகள் தங்கு பட்டியாக மாறுகின்றது இதனால் வியாபாரிகள் பெரும் அசௌரியங்களை எதிர்கொள்கின்றார்கள் இதனை நேரடியாகவும் அவதானித்தேன் அவர்கள் என்னை அழைத்தும் பேசியிருந்தார்கள் எனவே அவர்களுடைய கோரிக்கையையும் உங்களுடைய கடமைகளையும் கருத்தில் கொண்டு உடனடியாக அதனை அச்சறக்கை செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் .

02- சந்தையினுள் நுழைவதற்கான பாதை மிகவும் சரியான முறையில் அல்லது இலகுவான முறையில் நுழையக் கூடியதாக இல்லை இதனை உடனடியாக RDA உடன் தொடர்பு கொண்டு அந்த உள் நுழையும் பாதையினை சீர் செய்து கொடுப்பதன் ஊடாக வியாபார நடவடிக்கைக்கும் பயனாளிகளுடைய போக்குவரத்துக்கும் இலகுவாக அமையும் இதனை RDA உடன் தொடர்புகொள்ளும் பட்சத்தில் ஒரு சில நாட்களுக்குள்ளேயே செய்து முடிக்க முடியும் இதனையும் தாங்கள் உடனடியாக கவனத்தில் கொள்ளவும்

03- விரைவில் மின்னொழுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது அதனையும் சீர் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்

04- மிகவும் கவலைக்குரிய விடயம் தண்ணிரூற்று பொதுச்சந்தையானது மிக விரைவில் மூடு விழாவை காண்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது அது தற்போது மேலும் வலுப்பெற்று இருக்கிறது இந்த விடயத்தை நீங்கள் யாவரும் அறிந்தது இதற்கான தீர்வுக்கு பல வழிகள் உண்டு அதனுடாக தீர்வை நோக்கி நகர்ந்து நீண்ட வரலாறுகளைக் கொண்ட மிக முக்கியமான வருமானம் மூலமாக இருந்த தண்ணிரூற்று பொதுச்சந்தையினை அதன் இருப்பினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்.

பொது நலன்களுடன்
கமல விஜிந்தன்

Posted in Uncategorized

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சந்திப்பு

இன்றைய தினம் 25/6/2025 புதன்கிழமை மாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருக்கின்றார். கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் சந்திபொன்று நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் தமிழரசு சின்னத்துரை அவர்களின் வகிபாகம் காத்திரமானது – நினைவுரையில் வலி கிழக்கு தவிசாளர் நிரோஸ்

கட்சி அரசியல் மக்களை முன்னேற்றுவதற்கானது என்ற உயரிய சித்தாந்தத்துடனும் செயற்பாட்டுடனும் வாழ்ந்துகாட்டியவர் முன்னாள் தமிழரசுக் கட்சியின் தலைவர் அமரர் ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

தமிழரசு சின்னத்துரை அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) தமிழரசி இல்லத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தில் அஞ்சலி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், எமது அரசியல் பயணம் என்பது எமது மக்களுக்கானதாக விட்டுக்கொடுப்பின்றியதாக அமையவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் சின்னத்துரை அவர்கள். அடக்கு முறைக்கு எதிரான தமிழ்த் தேசிய பயணப் பாதை என்பது போராட்டங்களும் சவால்களும் மிக்கது என்பதை அனுபவ ரீதியில் உணர்ந்து அதனைத் தேர்ந்தெடுத்து தலைவராக எம் மண்ணில் அவர் செயற்பட்டுள்ளார்.

எமது பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவராக தனது குடும்ப வாழ்க்கை முறையைக் கூட அவர் வாழ்ந்தார். இதனை எம் மூத்தோர் வாயிலாக எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. 1953 ஆம் அண்டு தமிழரசு வாலிபர் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்குழு உறுப்பினராக அவர் செயற்பட்டுள்ளார். பின் அவ் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இளைஞர் முன்னணி ஊடாக அவர் பெரிதும் சேவையாற்றியுள்ளார். இம் முன்னணி 1953 காலப்பகுதியில் இன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவலவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டமை என பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளது. அதுபோன்று இவரின் காலத்திலேயே வாலிபர் முன்னணி தாயகத்தில் பல மாநாடுகளை கூட வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இதனால் எமது மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் மயப்பட்டனர்.

தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், தமிழர் உரிமையை வலியுறுத்திய திருமலை பாதயாத்திரை(1957), கச்சேரி நிர்வாக முடக்கல் போராட்டம் (1961) என்று பல போராட்டங்களில் இளைஞனாக முழுமூச்சுடன் தமிழரசு சின்னத்துரை அவர்கள் போராடியுள்ளார். சிறி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வேறு இனத்தின் உரிமை நோக்கிய போராட்டங்களிலும் அவர் சிறை சென்ற போதும் அவர் தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை.

உள்ள10ராட்சி அரசியலில் அவரிடம் ஏனைய தலைவர்களிடத்தில் காணப்படாத நாகரீகம் காணப்பட்டுள்ளது. இது சகலரையும் பாரபட்சம் இன்றி அணைத்துச் செல்லும் பண்பாகும். இப் பண்பு எமக்கு இன்றும் முன்னோடியானது. அடிப்படையில் எமது வலிகிழக்கில் இருந்து மாநகரசபை மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபை என பல கௌரவ அவைகளில் அவர் மக்கள் பிரதிநிதியாக வாழ்ந்து காட்டியுள்ளார். இந்நிலையில் அவரின் வாழ்வியல் முறைமை ஏனையோருக்க வழிகாட்டலாக அமைய வேண்டும் என வலிகாமம் கிழக்க பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு அநுர அரசிலும் நீதி கிடைக்க வாய்ப்பில்லை:ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

வடக்கில் பெரும்பாலும் பேசப்படும் மனிதப் புதைகுழி விவகாரம் வதந்தி என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்தமை மூலம் அநுர அரசிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக கூறுகின்றது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகத்தில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கான உறுதியான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் தான் பாதிக்கப்பட்ட உறவுகள் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ஆரம்பத்தில் உள்ளகப் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் என கூறிய அநுர அரசாங்கம் கனடா இனப்படுகொலை தூபி திறப்பிற்கு பின்னர் போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகள் என்பது எல்லாம் கட்டுக்கதைகள் என கதை அளந்தனர்.

தற்போது மனிதப் புதைகுழி விவகாரத்தை வதந்தி என முடித்துள்ளனர்.

உள் நாட்டில் நீதி இல்லை

ஆகவே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உள் நாட்டில் நீதி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடமும் தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்து அகிம்சைப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

அத்துடன் உள் நாட்டில் நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன என்ற செய்தியை வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.