சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்பு

முழுமையாகத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்கள், தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த சுற்றுலாப் பயணிகள் நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கு செல்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர்கள், பிராந்தியப் பணிப்பாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான கூட்டம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதன்போதே  சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் தீர்மானத்தை அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

ஹோட்டல்களில் உள்ள கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டல்களில் உள்ள மதுபானசாலைகள், தேநீர் நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் சுற்றுலாத்துறை தொடர்ந்து இயங்குவது பொருளாதாரத்துறைக்கு அவசியமான ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகை ஊசிகளும் வட கிழக்குக்கு வேண்டும்: ஜனாதிபதிக்குக் கடிதம்

வடக்கு- கிழக்கு பிராந்தியத்திற்கு பைசர், அஸ்றாசெனேகா, ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டுமென தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ.மயூரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் செ.மயூரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு- கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் நன்மை கருதி அனைத்துவகை கொரோனா தடுப்பூசிகளையும் இந்தப் பிராந்தியத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வடக்கு- கிழக்கில் வசிக்கும் மக்கள் அல்லது இளைஞர்களில் அநேகமானவர்கள், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுடன் தொடர்புகளை பேணுபவர்களாக உள்ளனர்.

குறிப்பாக தொழில் நோக்கத்திற்காகவோ அல்லது பல்வேறு காரணங்களிற்காகவோ வெளிநாடுகளிற்கு செல்லும் நோக்கம் அவர்களிடம் இருக்கின்றது. எனவே, நாட்டின் தலைவர் என்றவகையில் அதனை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

மேலும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிற்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பயணிகள் பைசர், அஸ்ராசெனேகா, மொடேர்னா போன்ற கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வடக்கு கிழக்கு பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் சீனா நாட்டினால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளே அதிகம் ஏற்றப்பட்டு வருகின்றது. இதனால் வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் இருக்கும் அனேகமான பொதுமக்கள் சீனநாட்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் கொரோனா தொற்றுப்பரவலடைந்து, உயிரிழப்புக்களும் மென்மேலும் அதிகரிக்கும் அபாயநிலமை காணப்படுகின்றது ஆகவே, இவைகளை கருத்தில் கொண்டு நாட்டின் தலைவர் என்ற வகையில் வடக்கு- கிழக்கு பிராந்தியத்திற்கு பைசர், அஸ்றாசெனேகா, ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லையம்பதி அலங்காரக்கந்தன் இரதோற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (05) காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டவத்தில் அருள்பாலித்து விளங்கும் ஆறுமுக நல்லையம்பதி முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் என்ப இடம்பெற்று வசந்த மண்டத்தில் இருந்து பீடத்தின் திருவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனை தொடர்ந்து தங்கரத்திருத் தேரில் எம்பெருமான் சமேதராக ஏறி உள்வீதியூடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ் திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி. வைகுந்தன் குருக்கள் தலைமையிலான அந்தணர் சிவாச்சாரியர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது.

இவ் ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் கடந்த (13.08) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று இரதோற்சவம், நாளை தீர்த்த உற்சவமும், மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

Posted in Uncategorized

இலங்கையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக விசாரணை

தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (4) மாலை ராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 27 பேர் படகு ஒன்றின் மூலம் கடல் வழியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடி வந்தனர்.

கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டு மதுரையில் தங்கியிருந்த 27 பேரையும் ராமநாதபுரம், மதுரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் இலங்கையில் இருந்து கனடா தப்பிச் செல்ல மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கை தமிழர் 32 பேரை மங்களூர் கியூ பிரிவு பொலிஸார் ஜூன் மாதம் 11ஆம் திகதி மாலை கைது செய்தனர்.

இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணத்தில் சிலர் அடைக்கலம் கொடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து மர்மப் படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரிய வந்தது.

அதன்படி தமிழர்கள் சிலரை மங்களுரூ தனிப்படையினர் ஜூன் மாதம் 20ஆம் திகதி அழைத்து வந்து வேதாளை கடல் பகுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அதிகாரி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று (4) ராமநாதபுரம் வந்தனர்.

மண்டபம் அருகே வேதாளை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பார்வையிட்டனர். இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை பிடித்து ராமநாதபுரத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

Posted in Uncategorized

10 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 189 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 462,023 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் இறுக்கமாக்கப்படும் – நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுக்கமாக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உறுதியளித்துள்ளார்.

ஒக்லாண்ட் நகரில் இலங்கையர் ஒருவரால் நேற்று (03) கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக இந்த மாற்றங்களை மேற்கொள்ள இயலுமான நிலையில் தாம் இருக்க வேண்டுமென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த நபரொருவர் ஒக்லாண்டிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் 6 பேரை நேற்றைய தினம் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதுடன், IS அமைப்பின் ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரதமர் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதுடன், அந்த மாற்றங்களுக்கு பாராளுமன்றம் இம்மாத இறுதியில் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டிருந்ததாகவும் சட்டத்தின் இடைவௌிகளை பயன்படுத்தி அவர் ஒவ்வொரு முறையும் வெளியே வந்ததாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது – ஜி.எல்.பீரிஸ்

நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன சுயாதீனமாக செயற்படுகின்றன. எனவே இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகளவில் பேசப்படும். எனினும் அதனை சிறந்த முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகள், இலங்கையின் பொதுச்சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன என ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் காணாமல் போனார் விவகாரம், மீள்குடியமர்த்தல், வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பினுடைய போராளிகளின் விடுதலை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்  தொடர்பாக  ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான ஆலோசனை சபை நியமிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த ஆலோசனை சபையின் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஜி.எல்.பீரிஸ் உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யா

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட், (Aeroflot) இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை எரோஃப்ளொட் ஆரம்பிக்கவுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவின் எரோஃப்ளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம், நேற்று முதல் இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது. ஆனாலும் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் பிற்போட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3,333 பேருக்கு கொவிட் தொற்று: 145 பேர் உயிரிழப்பு

நாட்டில் இன்று இதுவரை 3,333 பேருக்கு கொவிட் தொற்று   உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 459,459 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382,476 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,951 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் தேசிய கட்சிகள் ஒருமித்ததாக ஐ.நாவுக்கு அறிக்கை

வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை  பற்றிய   மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல  அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.  46/ 1 பிரேரணையை  இலங்கை அரசாங்கம் நிராகரித்து இருக்கிறது.  முக்கியமாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அதிகாரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு கடந்த கூட்டத்தொடரில் மனித உரிமை  பேரவை வழங்கியிருந்தது.
இதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்று அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலே ஆதாரங்களை திரட்டுவதற்கு மனித உரிமை ஆணையம் தயாராகி உள்ளமையை தெரிவித்துள்ளது.
 அதன் அடிப்படையில் முக்கியமாக கருதப்படுகின்ற  எதிர்வரும் மனித உரிமை பேரவையின் அமர்வில் நீதி பொறிமுறைக்கான நடவடிக்கைகள் காத்திரமான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் 46/1 பிரேரணைக்கு பின்னராக  அரசாங்கம் தமிழர் தாயகப் பரப்பில்  கட்டவிழ்த்துவிட்ட தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அறிக்கையிடுவது என தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் தமிழ் மக்கள் கூட்டணியின்  செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன்,  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற மன்றஉறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன்,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா  மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  பாராளுமன்ற மன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்  ஆகியோரின் கையொப்பத்துடன் விரிவான அறிக்கை ஒன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில்  46/1 பிரேரணைக்கு பின்னராக   தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழினத்துக்கு எதிரான  விடயங்களான  காணி அபகரிப்பு,  தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள்,  சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல்,  காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல்,  காணாமல் ஆக்கப்பட்டோரை தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு,  பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள்,  அன்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தினாலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாயநிலைகள் என்ற விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளன.
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Posted in Uncategorized