தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்க அரசு முயற்சி-ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா குற்றச்சாட்டு

தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் இந்திரகுமார் பிரசன்னா மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றதே இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடான 13வது திருத்தச் சட்டம்.

குறித்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் கபட நாடகம் ஆடுகின்றது.

இதேவேளை இந்தியா, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு ஒத்துழைப்பதாக கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காமல் அதனை செயற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தற்போதைய அரசாங்கம், மாகாணசபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் செயற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள், இந்த 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, அதனூடாக தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியான மாகாணசபையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.ரெலோ செயலாளர் ஜனா.

மாகாணசபையை அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழத் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தினால் நடாத்தப்பட்ட தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் உட்பட தோழர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் இன்றை கொரோனா நிலைமையில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில உறுப்பினர்களுடன் நடைபெறுகிறது.

பத்மநாபா அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத தலைவராக இருந்திருக்கின்றார். இன்றும் கூட அவரது நினைவுகளை, போராட்ட குணாம்சங்களை மறக்க முடியாது. இவ்வாறான தலைவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய எமது மக்களின் அவல நிலை இப்படி இருந்திருக்காது. ஏனெனில் அவர் அவருடன் இருந்த ஏனைய போராட்ட இயக்கங்களின் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர். போராட்ட இயக்கங்கள் ஒன்றிணைந்து நமது பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று 1984லே சிந்தித்து ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபரெத்தினம் அவர்களுடன் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கியதில் மிகவும் கூடுதலான பங்களிப்பைச் செய்தவர்.

அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள். அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம். இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள்.

1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள். இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருகக்கின்றார்கள். தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையை தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள். அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் தேவையாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில் உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை, கட்சியின் வளர்ச்சியை, சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில் எங்களது பிரதேசத்தையும், மக்களையும், மாகாணசபை முறைமையையுமாவது காப்பற்ற முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார்:அலிஷாஹிர் மௌலானா

7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார், எனக்கு துரோகமிழைத்தார்

இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது.
அந்த நாள் ஜூன் 22 2004 நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க . எனக்கு துரோகமிழைத்த கட்சி தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்

கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 20 ம் திகதி அது நடந்தது.

மறுநாள் எனது கட்சி தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.மங்களசமரவீரவும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுததவண்ணமிருந்தனர்.

எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதானபேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சி தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார் நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன்.நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம்இநான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன் நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன்

நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்கவேண்டும் நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன் நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார்.நான அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.எனக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமரை புதுடில்லியில் இன்று சந்தித்தவேளை ஸ்டாலின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் குடியுரிமை திருத்தசட்டத்தை மீள பெறவேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் கச்சதீர்வை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

எம்.பியாகின்றார் பஸில் – நிதி அமைச்சுப் பதவியும் ஒப்படைப்பு?

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காகப் பதவி துறக்கவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.

Posted in Uncategorized

2020 வாக்களர் பட்டியல் சரிவு- யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனம் ஒன்று காலியானது

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 7 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆகவும் , கம்பஹா மாவட்டத்தில் 18 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளமைக்கமைய , இலங்கையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16, 400, 000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தாகும் இலகு ரயில் திட்டத்திற்காக 5,896 மில்லியன் ரூபாவை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

ஜப்பானின் நிவாரணக் கடனின் கீழ் கடந்த அரசாங்கம் செயற்படுத்த முயன்ற இலகு ரயில் திட்டத்தை இரத்து செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்தாலும் 5,896 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடத்தின் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான கணக்காய்வாளரின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,896 மில்லியன் ரூபாவை இலகு ரயில் திட்டத்தின் ஆலோசனை சேவைக்கு வழங்க வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தொகை கடந்த வருடம் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல் பதிவுகளில் உள்வாங்கப்படவில்லையெனவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி

தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப் பெறுவதன் நோக்கம் தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை நிலைப்படுத்தி கொள்வதற்கு.

சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நிரலை யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தவில்லை மாறாக வேகமாக செயற்படுத்தியே வருகின்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் கொரோனா பெருந் தொற்றைக் காரணம் காட்டி பயணத் தடை ஒன்றை வைத்துக் கொண்டு மிக வேகமாக முன்னேடுக்க ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தை இவர்கள் குறிவைத்துள்ளனர். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாண அதிகாரங்கள் மத்திக்கு செல்வதை அந்த மாகாண மக்கள் ஆச்சரியமாக பார்க்கமாட்டார்கள் காரணம் எல்லாமே ஒரே இனம் தான் ஆனால் வடகிழக்கு அவ்வாறு அல்ல அதனால் தமிழர் தாயகம் என்பது முழுமையான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டம் அதனை இனங்களின் கலப்பு மாவட்டமாக மாற்ற வேண்டும். அதுவே அரசின் நோக்கம்.

இதன் முதற் கட்டமாக முல்லைத்தீவு மணலாறு, வவுனியா,மன்னார்,கந்தளாய்,சேருவில்,புல்மோட்டை ஆகிய இடங்கள் நூறு நவீன நகராக்கத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது காரணம் குறிப்பிட்ட தமிழர் தாயகப்பகுதியில் தற்போது சிங்கள குடியேற்றங்கள் ஏற்கனவே அமையப் பெற்றுள்ளன அவற்றை மேலும் விரிவாக்கம் செய்து குடியேற்ற சிங்களவர்களை அதிகரித்தல் தான் நோக்கம். அத்துடன் உருவாகும் நகரங்களில் பாரிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளும் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனைவிட வன்னிமாவட்ட பொது வைத்திய சாலைகள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டமை. மாகாணப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டமை மாகாண காணிகள் தொல்லியல்,வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்படுதல் போன்ற பல அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக அதிகமாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்துக்களின் தொன்மையான இடங்களான குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் போன்ற பல இடங்கள் வன்னியில் பௌத்த மயமாக்கலுக்கு தீவிரமாக உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே மாகாண அதிகாரங்களை பறிப்பதன் மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை விரிவு படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

ஆடைத் தொழிற்சாலையை மூடாவிட்டால் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் – ரெலோ மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மன்னார் ஆடைத் தொழிற்சாலையினை உடனடியாக மூடி, நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாக மன்னாரிலுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கு அமைய மன்னாரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி, மாவட்டத்தில் ஏற்படவுள்ள பாரிய அபாயத்தை தடுப்பதற்கு அரச உயர் அதிகாரிகள், சுகாதார துறையினர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தொடர்பான புதிய அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.