பெருந்தோட்ட மக்களின் சுமையை அதிகரித்துள்ள மண்ணெண்ணெய் விலையேற்றம்

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

2019 ஆம் ஆண்டு குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 24 வீடுகள் முற்றாக எரிந்ததுடன், அந்த வீடுகளில் இருந்தவர்கள் போர்டைஸ் பொது மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறு வாழ்ந்து வரும் இவர்கள் உணவு சமைப்பதற்கு பெரும்பாலும் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்பையே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்தது.

இந்த விலையேற்றம் விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தும் தம்மை பெரிதும் பாதித்துள்ளதென ஹட்டன் போர்டைஸ், 30 ஏக்கர் தோட்டத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பயணத்தடைக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு மண்ணெண்ணெய்க்கு மேலும் 7 ரூபா அதிகமாகக் கொடுத்து வாங்கும் வசதி இல்லை எனவும் தெரிவித்தனர்.

கேகாலை – தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாம்பேகம தோட்டத்தில் மக்கள் மின்சார வசதி இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கூலித்தொழில் செய்பவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் பிள்ளைகளின் கல்வி பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் மேலும் 1,633 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 220,556 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 186,516 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

மடு மாதா அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி (02-07-2021) இடம் பெற உள்ளது. இவ்வருடம் எமக்கு சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆடி மாத திருவிழாவை நடாத்த வேண்டியுள்ளது.

எனவே இம் முறை யாத்திரிகர்கள் , பக்தர்கள் மருதமடு அன்னையின் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழாவிற்கு மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்” என்றார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கைக்கு முன்கூட்டியே பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைத்தொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக் கொள்வதாக இலங்கை அதகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது என கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல்களை வழங்கியிருந்தது என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானும் தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எரிபொருள் விலையேற்றம்: அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென SLPP வலியுறுத்தல்

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய நிலைமை ஏற்படக்கூடுமென்பதை அறிந்து, உரிய தருணத்தில் தேவையான தீர்மானங்களை எடுக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தவறியதன் காரணமாக அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்து உள்ளவர்களுக்கான இணையத்தளம்!

சீனி, பால்மா, சோளம் நெல் மற்றும் அரிசி போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் www.caa.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.

மேலும், தமது கையிருப்புக்களின் விபரங்களை குறித்த இணையத்தளத்தில் புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சீனி, பால்மா, சோளம், நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

மேலும், தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜீ.எஸ்.பி. யை இலங்கை இழந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா

அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடுகள், நாட்டு மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் உள்ளிட்ட மோசமான பல செயற்பாடுகளின் விளைவாகவே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாதுபோயுள்ளது.

இதன் விளைவாக எமது பொருளாதாரம் மேலும் நெருடிக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தினால் நாட்டிற்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த எமது நாடு, நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினால் மேலும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கும் அதேவேளை எதிராக வெறுமனே 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த 2010 – 2016 வரையான காலப்பகுதியில் எமது நாட்டிற்கு அந்த வரிச்சலுகை கிடைக்கப்பெறவில்லை. தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்காத 2011 – 2016 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியானது, வெறுமனே 6 சதவீதமாகவே காணப்பட்டது. எனினும் அவ்வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் 2016 – 2019 வரையான காலப்பகுதியில் ஏற்றுமதிகள் 28 சதவீதமாக வளர்ச்சிபெற்றது.

எமது நாட்டிற்கு வழங்கப்படாமல் இருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு நானே புருசேல்ஸிற்கு சென்றிருந்தேன். ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியான இராஜதந்திரப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பை மங்கள சமரவீர என்னிடம் கையளித்திருந்தார். அங்குசென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்போது எமக்கு ஆதரவாக 636 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின. மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவோம் என்றே அப்போது நாம் வாக்களித்தோம். அதன்படி அக்காலத்தில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான நல்லாட்சி அரசாங்கம் என்ற அடிப்படையில் நாம் புதிய சட்டங்களையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கினோம். காணாமல்போனோர் பற்றிய அலுவலக சட்டத்தையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தையும் உருவாக்கினோம்.

ஆனால் 2019 ஆம் ஆண்டின் பின்னர் என்ன நடந்தது? தற்போதைய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை முழுமையாகப் புறக்கணித்தது. நாடு படிப்படியாக இராணுவமயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமது எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரஜைகளின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதை நிறுத்தவேண்டும். அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து, படிப்படியாக இராணுவமயமாக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எந்தவொரு சலுகைகளும் வாய்ப்புக்களும் இல்லாமல்போனாலும் பிரச்சினையில்லை. எனினும் எமது கைகளிலேயே அதிகாரம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தானாகவே எமக்குக் கிடைக்கும். அந்தச் சலுகை இருப்பதென்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சிபெறுவதற்குப் பெரிதும் உதவும் என்றார்.

Posted in Uncategorized

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிடம் மத்திய வங்கி கோரிக்கை!

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளைப் பற்றிய 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களைக் கோரியுள்ளது.

1. செயற்படுகின்ற கொடுகடன் வசதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள்

(அ) 2021 மே 15 திகதி அன்று செயற்படுகின்ற வகையினுள் காணப்படுகின்ற கொடுகடன் வசதிகள் தொடர்பில், தகைமையுடைய கடன்பெறுநர்களின் நிதிசார்ந்த இன்னல்களைக் கருத்திற்கொண்டு (தொழில் இழப்பு, வருமானம்/ சம்பளங்கள் அல்லது விற்பனைகள் இழப்பு அல்லது குறைவு, வியாபாரத்தினை மூடுதல் போன்ற) 2021 ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதின் போது விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் மூலதனம், வட்டி அல்லது இரண்டினதும் அறவீட்டினைப் பிற்போடுதல்.

(ஆ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், பிற்போடப்பட்ட தொகை மீது மாத்திரம் அத்துடன் பிற்போடப்பட்ட காலப்பகுதிக்காக 2021 மே 19ஆம் திகதி அன்று உள்ளவாறான 364 நாட்கள் திறைசேரி உண்டியல்கள் ஏல வீதத்துடன் ஆண்டிற்கு 5.5 சதவீதத்தினைக் கூட்டிய வீதத்தினை (அதாவது ஆண்டிற்கு 10.68 சதவீதம்) விஞ்சாத வட்டி வீதத்தினை அறவிடலாம்.

(இ) மாற்றுவழியாக, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், கடன் பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் அத்தகைய கடன் பெறுநர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற் கொண்டு ஏற்கனவே காணப்படுகின்ற கொடுகடன் வசதிகளை நீண்ட காலப்பகுதி ஒன்றுக்காக மறுசீரமைக்கலாம்.

2. செயற்படாக் கொடுகடன் வசதிகளுக்காக வழங்கப ;பட்டுள்ள சலுகைகள்

(அ) 2021 மே 15 திகதி அன்று செயற்படா வகையிலுள்ள கொடுகடன் வசதிகளை கடன்பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற்கொண்டு நீண்ட காலப்பகுதி ஒன்றுக்காக மீள் அட்டவணைப்படுத்தல். (ஆ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், 2020 ஏப்ரல் 01ஆம் திகதி அன்று அல்லது அதற்குப் பின்னர் செயற்பாடற்றவையாக வகைப்படுத்தப்பட்டுள்ள கொடுகடன் வசதிகளுக்கு எதிரான அனைத்து அறவீட்டு நடவடிக்கைகளையும் இடைநிறுத்தல் வேண்டும்.

3. ஏனைய சலுகைகள் (அ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், வெளிப்படையாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக 2021 ஜூன் 30 வரையான காலப்பகுதியின் போது கடன் அட்டைகள் அத்துடன் வேறு கொடுகடன் வசதிகள் மீதான தாமதக் கொடுப்பனவுக் கட்டணத்தினை நிறுத்தல் வேண்டும்.

(ஆ) தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பயணத் தடைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களிடம் இருந்து கடன் மீள்கொடுப்பனவுகளை ஒரு சில நாட்களினால் (உயர்ந்தபட்சம் 10 வேலை நாட்கள்) தாமதிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை அத்தகைய தாமதத்திற்கு ஏதேனும் மேலதிக வட்டியை அல்லது வேறு கட்டணங்களை அறவிடாது பரிசீலனையிற் கொள்ளுதல்.

(இ) தற்போது காணப்படும் கொடுகடன் வதியினைப்/ வசதிகளைப் பிற்போடுவதற்கான அல்லது மறுசீரமைப்பதற் கான தெரிவிற்குப் பதிலாக 2021 ஆகஸ்ட் 31 அன்று அல்லது அதற்கு முன்னா் அவர்களது தற்போதைய கொடுகடன் வசதிகளைத் தீர்ப்பனவு செய்வதற்கு கடன் பெறுனர் ஒருவர் அவரது விருப்பத்தினை வெளிப்படுத்துகின்ற விடத்து வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், தகைமையுடைய கடன் பெறுநர்களிடம் இருந்து ஏதேனும் முன்கூட்டிய தீர்ப்பனவுக் கட்டணத்தை அறிவிடலாகாது.

(ஈ) வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் கொடுகடன் தகவல் பணியகத்தின் பாதகமானப் பதிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் தகைமையுடைய கடன் பெறுநர்களிடமிருந்து கிடைக்கும் கடன் விண்ணப்பங்களை நிராகரித்தலாகாது.

4. கோரிக்கையினைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி

சலுகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற தகைமையுடைய கடன்பெறுநர்கள், 2021 ஜூலை 15 அன்று அல்லது அதற்கு முன்னர் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய கிளைக்கு எழுத்தில் அல்லது இலத்திரனியல் வாயிலாக கோரிக்கை ஒன்றினை முன்வைப்பதற்கு வேண்டப்படுகின்றனர்.

இது தொடர்பில் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க விரிவான சுற்றறிக்கை இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://www.cbsl.gov.lk/en/laws/directions-circulars-guidelines-for-non-banks. பொதுமக்கள், சுற்றறிக்கை தொடர்பான மேலதிகத் தகவல்களை 011-2477000, 011-2477966 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை மத்திய வங்கியில் தாபிக்கப்பட்டுள்ள அழைப்பு நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். .

கிழக்கில் உர உற்பத்திக்கு விரைவான திட்டம்

உரங்களை உற்பத்தி செய்வதற்கான விரைவான திட்டத்தைத் தயாரிக்குமாறு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே உரங்களை உற்பத்தி செய்து வரும் உள்ளூராட்சி மன்றங்களிடம் இந்தச் செயல்முறையை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், குப்பை சேகரிப்பு குறைவாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உரங்களை உற்பத்தி செய்ய மாற்று முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், மாகாண விவசாய சேவைகள் பணிப்பாளர், மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு விவசாய சமுதாயத்துக்கும் தங்களுக்குத் தேவையான உரங்களை உற்பத்தி செய்வதற்கான சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டனர்.

பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஓயாமல் தொடரும் அன்னதானப் பணி

அன்னதானக் கந்தன் எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயச் சூழலில் நீண்டகாலமாகப் பல்வேறு சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் அன்னதானப் பணியை ஓயாமல் தொடர்ந்து வருகிறது.

தற்போதைய நிலையிலும் பராமரிக்க யாருமின்றி, உற்றவர்களின் அன்பு இன்றி சந்நிதியான் ஆலயச் சூழலில் தங்கியுள்ள 50 இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தினமும் சந்நிதியான் ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கள் பசிப் பிணியைப் போக்கி வருகின்றனர். அத்துடன் அயற் பகுதிகளிலிருந்தும் வறியநிலையிலுள்ள பலரும் தினமும் ஆச்சிரமத்தை நாடிச் சென்று தமது பசிப் பிணியைப் போக்கிவரும் நிலையில் அவர்களின் நன்மை கருதி இந்த இக்கட்டான சூழலிலும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் அன்னதானப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

அதுமாத்திரமல்லாமல் தற்போதைய அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், பயணக் கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்களுக்கும் தொடர்ச்சியான உதவிகள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மேற்படி ஆச்சிரமத்தில் வைத்தும், வீடுகள் தேடிச் சென்றும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றித் தற்போதைய சூழலில் ஆச்சிரமத்தை தேடிவரும் உதவிக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சந்நிதி முருகப் பெருமானின் திருவருளுடன் எளிமையின் உருவமாக விளங்கும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி மேற்படி பணிகளையெல்லாம் முன்னின்று நெறிப்படுத்தி வழிநடாத்தி வருகிறார்.

கொடிதிலும் கொடிது பசிப் பிணி. அந்தக் கொடிய பசிப் பிணியைப் போக்கும் வகையில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் தொடர்ச்சியாக அன்னதானப் பணியை மேற்கொண்டு வருவதுடன் காலத்தின் தேவையறிந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருவது பாராட்டுதற்குரியது.

அந்தவகையில் தற்போதைய பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் மேற்படி ஆச்சிரமத்தின் அன்னதானப் பணி மூலம் தினமும் பயன்பெற்று வரும் மூத்தோர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்துக்குத் தமது நன்றிகளையும் வெளிப்படுத்தினர்.

Posted in Uncategorized