ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக களமிறங்கும் சசிகலா ரவிராஜ்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் இன்றைய தினம் (07) அவர் கையெழுத்திட்டார்.

இதன்போது ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுவுடன் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 இலக்கம் 09 ஐ கொண்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80 (01) (P), 82 (01) (E), 82 (02), 89, 90 (04) ஆகிய சரத்துக்களின் படி, வாக்களிப்பு நாள் அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் 80 (01) (பி), 82 (01) (இ), 82 (02), 89, 90 (04) ஆகிய பிரிவுகளின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியுடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கை
மேலும், சரத்து 99 A இன் படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையையும் சமர்ப்பிக்கத் தவறினால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை : செல்வம் அடைக்கலநாதன்!

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம்.வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம்.

தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

அந்த அலை தற்போது எங்களிடம் பரவியுள்ளது. ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம், கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது என குறிப்பிடப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 17 சுயேட்சைக்குழுக்கள்!

பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேட்சை குழுக்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இரண்டு சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஐந்து தேர்தல் மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் எந்தவித வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சுயேட்சைக்குழுக்களில் மூவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த செயலாளர் உட்பட நான்கு பேர் மட்டுமே வருகைதரமுடியும் எனவும் மாவட்ட செயலக வளாகத்திற்கள் ஊர்வலத்திற்கு பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழரசின் தலைமையை சிறீதரன் உடன் ஏற்க வேண்டும்: மாவை சிறப்பு கடிதம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.

தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை.

அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடன் ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன்.

2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இந்தக் கடிதம் மூலம் அறியத் தருகின்றேன்.

எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

இந்நிலையில், குறித்த கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உமாகரன்!

தமிழரசுக் கட்சியில் இருந்தும், இதுவரை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி வந்த ஆதவில் இருந்தும் விலகிக் கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சிலர் கட்சிக்குள் இருக்கும் வரை மீண்டும் கட்சியோடு இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தலைவரால் காட்டப்பட்ட சின்னம் என்ற வகையில் நாங்கள் தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவும், மற்றும் தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தெடாடர்ச்சியான ஆதவையும் இதுவரை நாட்கள் நாங்கள் வழங்கி வந்தோம்.

நாடாளுமன்றத் தேர்தல் உட்பட கடந்த காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் கட்சிக்காக பணியாற்றியுள்ளோம். கட்சி சார்ந்த வழக்குகளில் முன்னிலையாகியிருக்கின்றோம். குறிப்பாக ஊதியம் ஏதும் இன்றி கட்சி சார்ந்த வழக்குகளில் முன்னிலையாகியிருக்கின்றோம்.

இவ்வாறு நாங்கள் தொடர்ச்சியாக கட்சியோடு நின்ற போதிலும், நான் உட்பட ஏராளமான புத்திஜீவிகளும், இளம் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட இதர தொழிலில் இருக்கக் கூடியவர்களும், கட்சியினுடைய விசுவாசிகளும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட நிலைப்பாட்டை சமகால வேட்பாளர் தெரிவில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதன் அடிப்படையில் கட்சியின் சகல நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதோடு, கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தும் நாங்கள் விலகிக் கொள்கின்றோம்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், தமிழ்த் தேசிய கொள்கைக்கும் நலன்களுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயற்படும் நபர்கள் அந்தக் கட்சிக்குள் இருக்கும் வரைக்கும் மீள அந்தக் கட்சியோடு இணைந்து செயற்பட மாட்டோம் என்ற முடிவை அறிவிக்கின்றோம்.

நானும், என்னோடு இருக்கும் ஆதரவாளர்களும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதை தளர்த்திக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வரி செலுத்தாதோருக்கு பேரிடி : நடைமுறையாகும் புதிய திட்டம்!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை வரியாக வசூலித்துள்ள நிலையில்,இது 2024 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கான 2024 பில்லியன் ரூபாயில் 70 சதவீதத்தை தாண்டிய ஒரு எண்ணிக்கையாகும்.

எவ்வாறாயினும், சுயமதிப்பீட்டுக் கொடுப்பனவுகளின் கீழ் செலுத்த வேண்டிய வரி செலுத்துவோர் இன்னும் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களின் வளாகங்களுக்குச் சென்று அவற்றை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரியை சட்ட நடைமுறைக்கு ஏற்ப உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலின் பிரசார செலவு அறிக்கைகளை வழங்க கால அவகாசம் நீடிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நடைமுறையாகும் புதிய திட்டம்
பிரசார செலவு அறிக்கைகள்
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியுள்ளனர்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக முன்னணியின் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சமாஜ்வாதி கட்சியின் மஹிந்த தேவகே, சுயேச்சை வேட்பாளர் பிரேமசிறிமானகே மற்றும் கே. ஆனந்த குலரத்ன ஆகிய நால்வரே தமது பிரசார செலவு அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

மேலும், தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் பிரசார செலவு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அதன்பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளுக்கு சட்டவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சுமந்திரனால் அழிவுப் பாதையில் தமிழரசு கட்சி – அதிரடியாக பதவி விலகிய கே.வி.தவராசா

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தான்தோன்றித் தனமாக தமிழரசுக் கட்சியின் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் கட்சியை பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் ஊடாக முழுச் செயற்பாடுகளையும் நிர்வகித்து வரும் சுமந்திரன் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது.

இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் பல தியாகங்களாலும், வீரம் செறிந்த பல போராட்ட சரித்திரங்களாலும் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியத் தலைவரின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, தமிழரசுக் கட்சிகளின் தூண்களையும் வெளியேற்றி, மேலும் தென்னிலங்கையின் முகவர் அரசியல் செய்வதற்கு முற்படுகின்ற சுமந்திரனின் தான் தோன்றித் தனமான செயற்பாடு ஒட்டு மொத்த தமிழரசுக் கட்சியையும் அழிக்கும்.

எனவே என்னை நேசிக்கும் யாழ்.கிளிநொச்சி தேர்தல் மாவட்டம், வடக்கு – கிழக்கு மக்களுக்கு நான் அறியத் தருவது என்னவென்று சொன்னால் வீரத்தின் பால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று சோர்விழந்து சோரம் போகின்ற ஒரு ஆபத்தான நிலையில் இருக்கின்ற படியினால் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நான் விலகுகின்றேன்.
தமிழ் தேசிய விரோதிகளின் கைகளுக்குள் சிக்குண்ட தமிழரசு கட்சியில் தொடர்ந்தும் பயணிப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த முடிவு எட்டப்படுகிறது,

தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டு தமிழரசு கட்சி சின்னாபின்னமாகி இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் பயணிக்க முடியாது

தேசியத்தை கண்முன்னாலே குழி தோண்டி புதைக்கின்ற செயற்பாடுகளுக்கு துணை போகின்ற வரலாற்று துரோகத்தை நான் செய்ய தயார் இல்லை என்பதால் தமிழரசு கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன்

தமிழ் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்ட என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்குண்டான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்கு முடிவெடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள்

இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07.10.2024) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 வருடத்துக்கு ஒருமுறை இந்த சனத்தொகை கணக்கெடுப்பானது முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized