தீ விபத்துக்குள்ளான கப்பலால் மீன்வளத்துக்கு பாதிப்பு- பேராசிரியர் நவரத்னராஜா

கொழும்பு துறைமுகத்திற்கு வட மேற்று பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.

கப்பலிலிருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது. ஆகவே கடலில் மிதந்து வரும் பொருட்களை தொடுவதை பொது மக்கள் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா குறிப்பிட்டுள்ளார்.

தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு கப்பலினால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், மீன்வளத்துறைக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து சிதறிய கொள்கலகள் நீர்க் கொழும்பு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருட்கள் கடலில் கலந்துள்ளமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது வரை கிடைக்கப் பெற்றள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.

கப்பலில் இருந்து வெளியாகியுள்ள பிளாஷ்டிக் உற்பத்தி மூலம் பொருட்கள் பெருமளவில் நீர்கொழும்பு பிரதேசத்தின் கடற்பரப்பில் கரையொதிங்கியுள்ளன. இம் மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மூலம் பொருட்களை மீன்கள் உண்பதால் அவை இறக்க நேரிடும். இக் கடற்பரப்பில் மீன்கள் இறந்து மிதக்கின்றனவா என்பது குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே தற்போதைய நிலைமைக்கு அமைய சமுத்திரத்திற்கும், கடற் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும் மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

நன்றி -வீரகேசரி

Posted in Uncategorized

சில துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,

துறைமுக அபிவிருத்தி அதிகார சபை
பெட்ரோலிய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல்
துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் சேவை
ரயில்வே
இலங்கை போக்குவரத்து சபை

ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சேவை உள்ளடங்கலாக பிரதேச மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களினது சேவைகளும் குறித்த வர்த்தமானியினூடாக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ சேவை ஆகியனவும் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 128 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவே இதுவரை மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட COVID-19 தொற்றாளர்களில் அதிகமான எண்ணிக்கையாகும்.

நேற்று (26) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (26) வவுணதீவில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனைகளில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களாவர்.

இவ்விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அங்கு கட்டில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வௌி மாவட்டங்களுக்கு தொற்றாளர்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா மரணங்கள் 1,300 ஐ கடந்தது

இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் 2,572 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு மாகாணத்திற்கு தடுப்பூசிகள் வழங்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கொரோனா நிலைமைகளில் கட்டுப்பாட்டை ஏற்படு்த்த உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை விரைவு படுத்த ஆளுநர் நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண சுகாதார அமைச்சுக்கு வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் வடக்கு ஆளுநர் நிர்வாகத்தின் கவனத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

1) பி சி ஆர் இயந்திரங்கள்
2) தடுப்பூசி மருந்துகள்

போன்றன மிக பிரதானமானவையாகவும் அடுத்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சரியான முறையில் அவர்கள் ஓரளவு திருத்திப்படும் வகையிலான அடிப்படை வசதிகளை பேணுதல்.

பி சி ஆர் இயந்திரங்கள் பற்றாக்குறை வடக்கு மாகாணத்தில் தொற்றாளர் பாரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட இயந்திரத்திற்கு இராசயன மருந்து முடிவடைந்தமையால் பரிசோதனை தடைப்பட்டுள்ளது. வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் இயந்திரங்கள் பற்றாக்குறை ஆரோக்கியமானதாக இல்லை.

வடக்கு மாகாணத்திற்கு ஓரளவு முதல் கட்டமாக சமூக தொடர்பாடல்களுடன் உள்ள 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.

தற்போது வடக்கு மாகாண நிர்வாகம் ஆளுநரின் பொறுப்பில் இருப்பதன் காரணமாக விரைந்து நடவடிக்கைகளை ஆளுநர் நிர்வாகமே எடுக்க வேண்டும்.

உரிய செயற்பாட்டை வடக்குமாகாண மக்கள் ஏதிர்பார்க்கின்றனர்.

சபா குகதாஸ்
முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர்.

ரெலோ இளைஞர் அணித் தலைவர்.

Posted in Uncategorized

‘பரிசோதனை உபகரணங்கள்’ வழங்குமாறு இந்திய, பிரித்தானியவிடம் ரெலோ தலைவர் செல்வம் எம்பி கோரிக்கை

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிற்கான பரிசோதனை உபகரணங்கள் வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னிமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக தொற்றாளர்களை அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

குறிப்பிட்ட அளவான பரிசோதனைகளை செய்வதற்கே வசதி இருப்பதால் அதன் முடிவுகள் வருவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுப்பதனால் தொற்றுக்கள் அதிகமாக பரவுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த தொற்று பரிசோதனைக்கான உபகரணங்கள் இல்லாமையும் அவற்றிற்கான பற்றாக்குறையும் இருப்பதனாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்யவேண்டும.

எனவே காலம் தாழ்த்தாமல் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கும் உடனடியாக முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கும் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை தந்துதவுமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் உடனடியாக இந்த பரிசோதனை உபகரணங்கள் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிறப்புரிமையடிப்படையில் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் அபாய நிலை வருவதற்கு முன்னதாக இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வன்னி மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்று தனது கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட ஊடக அறிக்கை ஒன்றினூடாக பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களூடாக நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பாதுகாப்பு தொடர்பில் நான்காம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ராஜகிரிய – களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலை ஒப்பந்தம் சீனாவுக்கு

அத்துருகிரிய வெளிச்சுற்று அதிவேக பாதையை இணைக்கும் வகையில் ராஜகிரிய ஊடாக களனி புதிய பாலத்திற்கான நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குரிய ஒப்பந்தத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மூன்று வருடங்களுக்குள் இந்த செயல் திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 25 இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந்த பாதையை மேலும் 15 வருடங்களுக்கு இயக்கி லாபம் ஈட்ட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 18 வருடங்களின் பின்னர் இந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் குறிப்பிட்ட நெடுஞ்சாலையை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு;

05. அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமானம்

அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிப் பாலத்தையும் தொடர்புபடுத்தி தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலையை, நிர்மாணித்து பராமரித்து ஒப்படைத்தல் (BOT) முறைமையின் அடிப்படையில் மேற்கொள்வதற்காக 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலீட்டுக் கருத்திட்டத்திற்காக குறித்த முதலீட்டாளர்களின் தொழிநுட்ப மற்றும் நிதி யோசனைகள் அடங்கிய போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சைனா ஹாபர் இன்ஜினியரிங்க் கோபரேஷன் கம்பனிக்கு வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் கைச்சாத்து: கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் இன்றிலிருந்து அமுலுக்கு வந்தது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (27.05.2021) காலை கையொப்பமிட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உயர் நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சட்டமூலம் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபைப்படுத்தியதில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான கடுமையான விமர்சனங்களும், மாற்றும் கருத்துகளும் எதிர்க்கட்சியினராலும், ஆளும் தரப்பினராலும், நிபுணர்கள், கல்விமான்கள், தேரர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,பாராளுமன்றத்தில் கடந்த மே 20ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனாவால் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்று (26)வரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (26) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கந்தளாய், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும், இன்றுவரை மொத்தமாக 69 பேர் திருகோணமலை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் 63 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை 1403 பேரும், 2020 டிசம்பர் மாதம் முதல் இன்று வரை 2 ஆயிரத்து 844 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக அளவில் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், குச்சவெளியில் 9 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும் கந்தளாயில் ஏழு பேரும்,கிண்ணியாவில் 6 பேரும், மூதூர் மற்றும் உப்புவெளியில் தலா 4 பேர் வீதமும், தம்பலகாமம் மற்றும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் வீதமும், சேறுவில பகுதியில் ஒருவரும் கோவிட்-19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.