ஜனாதிபதி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டினார் – விஜயதாச ராஜபக்ச பரபரப்பு குற்றச்சாட்டு

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு போர்ட்சிட்டி தொடர்பில் தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என விஜயதாச ராஜபக்ச டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது : தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது – விஜயதாஸ

தனி நாடாக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொழும்பு துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனாவின் நெடுநாள் திட்டம் தற்போது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்புக்கும், இலங்கையின் ஆட்புல எல்லைக்கும் முரணாக காணப்படுகிறது.

இலங்கையின் தலைநகருக்கும், மேல்மாகாணத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் இதனால் துறைமுக நகரம் காணப்படுகிறது.

விசேட ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என முன்னாள் நீதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று பல்துறையில் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, எல்லை கடந்த அரசமுறை கடன் நெருக்கடி, சுகாதாரமற்ற உணவு பயன்பாடு என பலதரபபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. பொருளாதார மட்டத்தில்; இலங்கை அச்சுறுத்தலான தன்மையினை நோக்கி நகர்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட முறையற்ற அரச முறைகடன்களினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் விற்க நேரிட்டது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்குவதற்கு அக்காலக்கட்டத்தில் அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். இதனால் அப்போது வகித்த நீதியமைச்சர் பதவி மாத்திரம் பறிபோனது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அரச தலைவர்கள் இன்று அனுபவ ரீதியில் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

ஏனையோரை காட்டிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் பாடம் புகட்டியுள்ளார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை காட்டிலும் பன்மடங்கு விளைவு கொழும்பு துறைமுக பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தினால் ஏற்படும்.

இலங்கையின் ஆட்புல மற்றும் கடல் எல்லை ஆகியவை அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேல்மாகாணத்தில் காலி முகத்திடலில் ஒரு 644 ஹெக்டயார் கடற்பரப்பு மணலாம் நிரப்பப்பட்டு கொழும்பு துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்நிலப்பரப்பினை இலங்கையின் மொத்த பரப்பளவிற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு கொழும்பு துறைமுகத்தை தனித்த ஒரு பகுதியாக காண்பித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம்மூலம் சபைமுதல்வரினால் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

சர்வதேச வர்த்தகம், கப்பற் தொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரை கடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம் , வியாபார வழிமுறைகள்,வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு. பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.

Posted in Uncategorized

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சிறந்ததாக அமையும் -ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின் போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ள போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்திய ரோலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்ற போது தமிழ் நாட்டு மக்களுக்கும், எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ் நிலை காணப்படும்.தமிழ் நாட்டை பொறுத்த வகையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர்.

பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன் னெடுத்துள்ளனர். அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது. இவ்வாறு எமது தமிழ் நாட்டு மக்கள் எமது இனத்திற்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்ற போது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்ற போது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

எனவே இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும். ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் இந்திய அரசுடன் பேசி இரண்டு தரப்பு மீனவர்களுக்கும் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதனால் எல்லை தாண்டி வருகின்ற, மீன் பிடிக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னார் கடற் பிராந்தியத்தில் உள்ள பவளப் பாறைகள் இந்திய இழுவைப்படகுகளினால் அழிக்கப் படுகின்றது.

மீன் உற்பத்தியாகும் இடமாக குறித்த பாறைகள் உள்ள நிலையில் அவை அழிக்கப்படுகின்றது. எனவே இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சிறந்ததாக அமையும்.

இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து மனுதாக்கல்

இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் குறித்த சட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

நாட்டை சீன காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

நாட்டை சீனாவின் காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்ப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக இன்று (15) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி 204.62 ரூபாவாக மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Posted in Uncategorized

மலரும் சித்திரை தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலுமுள்ள தமிழர் எமக்கு அமைதி மலரட்டும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் அமைதியும் சமாதானமும் மலர தாங்கள் ஆசிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இன்று சர்வதேச அரங்கில் சமவுரிமை ஐக்கியம்,சமாதானம் ஆகியன பெரிதும் தேவையானவைகளாக காணப்படுகிறது.

எமது முன்னோர்களின் பண்பாடான விட்டுக்கொடுப்பு ,சகிப்புத்தன்மை ஆகிய அறங்களை எமது இளைய தலைமுறையினருக்கு கொடையாக்கி எமது வருங்கால சந்ததியினரை நாம் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

எம்மை சுற்றி கொரோணா அபாயமும் இன்னும் தீராத நிலையில் நாம் இந்த புத்தாண்டை மிக நிதானமாக சுகாதார வழிமுறைகளையும் பேணி கொண்டாடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் எமது பாரம்பரியங்களையும், மரபுவழிமுறைகளையும், கலாச்சார பண்புகளையும் பேணி அன்பு இரக்கம் ஆகியவற்றோடு ஆசித்தவர்களாக எமது தாயக தேசமும், நாமும் சிறக்க இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோமாக.

என்றும் அன்புடன்.

கெளரவ செல்வம் அடைக்கலநாதன்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

11 இஸ்லாமிய அடைப்படவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தௌஹீத் ஜமாத்

சிலோன் தௌஹீத் ஜமாத்

ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்

அகில இலங்கை தௌஹீத் ஜமாத்

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா

தாறுல் அதர்

ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்

இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு

அல்கய்தா அமைப்பு

சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு

சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகிய அமைப்புகள் நேற்று (13) நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.