இனப்படுகொலை என்ற வார்த்தையால் சபையில் சர்ச்சை : கஜேந்திரகுமாருடன் இராஜாங்க அமைச்சர்கள் வாக்குவாதம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான தமிழர் எழுர்ச்சி பேரணி இடம்பெற்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் எம்.பியுடன் வாக்குவாதப்பட்டனர்.

“இன்றும் இனப்படுகொலை” என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்ட போதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் எம்.பி வாக்குவாதப்பட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதான பத்து கோரிக்கைகளை முன்வைத்து சிவில் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியானது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் குறித்த பத்து காரணங்கள் மாத்திரமே எமது பிரதான கோரிக்கைகள் அல்ல. மேலும் நான்கு உப கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் வடக்கு கிழக்கு பூமி தமிழ் பேசும் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். தமிழர்களுக்கான தனித்தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் கீழ் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமையையும் இன்னும் அது தொடர்கின்றது என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த உண்மைகள் மறைக்கப்பட முடியாது என உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா :- இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், இன்றும் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி கூறுகின்றார். அவர் எதனை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகின்றார் என தெளிவில்லை என கேள்வி எழுப்பினார்?

இதற்குப் பதில் தெரிவித்த கஜேந்திரகுமார் எம்.பி :- இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை கொள்வது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலை என்றே கருதப்படும்.

2009 ஆம் ஆண்டு வரையில் உயிர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதை போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலனித்துவ கொள்கையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தொல்பொருல் திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர், இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதும் இனப்படுகொலையாகும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா :- ஆனால் எமக்கு தெரிந்தவரையில் இனப்படுகொலை என்பது அதிகளவான மக்களை கொன்று குவிப்பதாகும் என்றார். இதன்போது ஆளும் தரப்பில் இருந்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் :- இனப்படுகொலை என்பது எமக்கு தெரிந்த வரையில் திட்டமிட்ட கொலையாகும்.

அதிகளவான மக்களை அல்லது ஒரு இனக்குழுவை கொள்வது இனப்படுகொலை என அர்த்தப்படும். ஆனால் நீங்கள் கூறும் காரணிகளுக்கு இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்றாகும். எனவே அதனை திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொலைக்கான வரைவிலக்கணம் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. எந்த விதத்திலும் இதற்கான வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியும். ரோமானிய பிரகடனத்தின் ஐந்தாம் உறுப்புரையை வாசியுங்கள்.

ஹர்ஷ டி சில்வா :- இனப்படுகொலை என்ற வார்த்தையை நீங்கள் சரளமான விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் ஒரு தகுதியான சட்டத்தரணி, எனக்கு எவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது தெரியும். இனப்படுகொலை நடந்தது. அதற்கான நியாயத்தை கேட்கிறோம். இதற்கான சாட்சியில் நானும் ஒருவன், அதேபோல் இன்றும் எமது அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. அதனையே நான் அவ்வாறு கூறுகின்றேன்.

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் :- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. நீங்கள் கூறும் காரணிகளுக்கு பொருத்தமான வார்த்தை இதுவல்ல.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் சட்ட முறைமைக்கு அமையவே பேசுகிறேன். நீங்கள் ரோமானிய பிரகடனத்தை பாருங்கள். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டை ஏன் உங்களால் விசாரிக்க முடியாதுள்ளது. முதலில் அதனை செய்யுங்கள்.

ஹர்ஷ டி சில்வா :- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.அது பாரதூரமான வார்த்தை கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் மிகவும் பொறுப்புடன் இந்த இடத்தில பயன்படுத்துகிறேன். உங்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், எதிர்க்கட்சி தலைவரும் ஆளும்கட்சி தலைவரும் வாருங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவோம். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதா இல்லையா என விவாதிக்கலாம். அதற்கு ஏன் அஞ்சுகிறீர்கள்.

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் :- இன்றைய விவாதத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத காரணிகளை பேச வேண்டாம்.

கஜேந்திரகுமார் எம்.பி:- நீங்கள் எனது உரையை தடுக்க வேண்டாம் என்றார்.

இதன்போது சபையை வழிநடத்திய அஜித் ராஜபக் ஷ எம்.பி :- நீங்கள் விடயத்திற்கு பொருத்தமாக பேசுங்கள் அப்போது இந்த குழப்பங்கள் எதுவும் எழாது. நீங்கள் பொருத்தமில்லாத விடயங்களை பேசுவதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்காக அதிக நேரத்தை வழங்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சாந்த பண்டார எம்.பி :- கஜேந்திரகுமார் எம்.பியின் இனப்படுகொலை என்ற வார்த்தை பிரயோகம் பொருத்தமானதல்ல,இலங்கையில் அவ்வாறன ஒரு இனப்படுகொலை இடம்பெறவில்லை, இனியும் இடம்பெறாது. எனவே அவரது வார்த்தையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா :- பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாம் பேசும் வார்த்தைகள் என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும்.

ஒருவர் பேசியதை நீக்க வேண்டுமென இன்னொருவர் கூற முடியாது. ஆனால் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியா தவற என்பதை வார்த்தைகளை பயன்படுத்தும் உறுப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அடுத்த தடவை நீங்கள் பேசும் போது அவதானமாக பேசுங்கள் என்றார். இதனை அடுத்து ஆளும் கட்சியில் பலர் கஜெந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கருத்துடன் முடன்பட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பினை தலைமை ஏற்று நடத்த இந்தியா முன்வர வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்

இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையம் தொடர்பான விடயத்தில் அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து தௌிவுபடுத்தும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றினை தமிழ் மக்களே தெரிவு செய்யும் வகையில், சர்வதேச சமூகத்தினால்
வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா தலைமை ஏற்று செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் சி.வி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு முனையம் விடயத்தில் அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றி வந்ததன் தொடர்ச்சியாகவே இம்முறையும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இது நடைபெறும் என தாம் எதிர்ப்பார்த்தாலும் முன்கூட்டியே அது நிகழ்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்க இருப்பதாக வௌியாகியுள்ள செய்தி மிகவும் பாரதூரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு முனையம் விடயத்தில் நடந்ததே எதிர்காலத்தில் 13 ஆவது அரசியல் திருத்த விடயத்திலும் நடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்தத் தீர்விற்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் பிரதி உயர்ஸ்தானிகரிடம் எடுத்துக்கூறியதாக ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கும் விடயத்திற்கு நியாயம் பெற்றுத்தர பாகிஸ்தான் பிரதமரது விஜயம் உதவ வேண்டும் என எதிர்பார்ப்பதாக இவர்கள் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரிடம் கூறியுள்ளனர்.

அத்துடன், இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 24, 25 ஆம் திகதிகளில்: ஆறு அமர்வுகளில் 2,608 பேருக்குப் பட்டங்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2 ஆயிரத்து 608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு :

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் முன்னிலையில் எதிர்வரும்; 24 ஆம், 25 ஆம் திகதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கவுள்ளார். இரண்டு நாள்கள் – ஆறு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

முதலாம் நாளான 24 ஆம் திகதி, புதன்கிழமை ஆயிரத்து 388 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள முதலாவது அமர்வில், நிதி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், விவசாய உயிரியலில் முது தத்துவமாணி, விவசாய இரசாயனத்தில் முது தத்துவமாணி, சைவ சித்தாந்தத்தில் முது கலைமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், வியாபார நிருவாக முதுமாணிப் பட்டத்தினை 55 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், பொறியியல் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 பேரும், கலைமாணி (விசேட பகுதி) பட்டத்தை 160 பேரும், வணிகமாணி பட்டத்தை 88 பேரும், தாதியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 09 பேரும், மருந்தகவியல் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 14 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும் பெறவிருக்கின்றனர்.

இவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 114 கலைமாணி பட்டதாரிகளதும் 2 நடனமாணி பட்டதாரிகளதும்; பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில், இந்து நாகரிகத்தில் கலாநிதி பட்டம், கல்வியியலில் முது தத்துவமாணி, வரலாற்றில் முது தத்துவமாணி, கிறிஸ்தவ நாகரிகத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 66 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், கலைமாணி (விசேட பகுதி) பட்டத்தை 168 பேரும், வியாபார நிருவாகமாணி (சிறப்பு) பட்டத்தை 22 பேரும், கலைமாணி (நடனம்) பட்டத்தை 50 பேரும், கலைமாணி (வாய்ப்பாட்டு) பட்டத்தை 77 பேரும், கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) பட்டத்தை 22 பேரும் பெறவிருக்கின்றனர்.

இவற்றுடன், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்களைப் பெறுபவர்களில் 7 வணிகமாணி (பழைய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 16 வணிகமாணி (புதிய பாடத்திட்டம்) பட்டதாரிகளதும், 36 வியாபார முகாமைத்துவமாணி பட்டதாரிகளதும் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள மூன்றாவது அமர்வில், மனித வள முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம், புவியியலில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா இருவரும், பௌதிகவியலில் முது தத்துவமாணி, மண் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், ஆங்கிலம் – இரண்டாம் மொழியாக கற்பித்தலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 18 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், வியாபார நிருவாகமாணி பட்டத்தை 259 பேரும், சட்டமாணி பட்டத்தை 49 பேரும், தாதியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 22 பேரும், மருந்தகவியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தை 21 பேரும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.

இரண்டாம் நாளான 25 ஆம் திகதி, வியாழக்;கிழமை ஆயிரத்து 220 பேருக்குப் பட்டங்களும், டிப்ளோமாக்களும் வழங்கப்படவுள்ளன.

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ள 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வில் தமிழில் கலாநிதி பட்டம், மெய்யியலில் முது தத்துவமாணி, அரசியல் விஞ்ஞானத்தில் முது தத்துவமாணி ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 77 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 118 பேரும், மருத்துவ விஞ்ஞானமானி பட்டத்தை ஒருவரும், சித்த வைத்தியமாணி, சத்திர சிகிச்சைமாணி பட்டத்தை 70 பேரும், பொதுக் கலைமாணி பட்டத்தை 127 பேரும், பொதுக் கலைமாணி (ஆளில்லா நிலையில்) பட்டத்தை ஒருவரும் பெறவுள்ளனர்.

இவற்றுடன், வியாபார நிருவாக டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், நுண் நிதியியலில் டிப்ளோமா தகைமை பெறும் 25 பேரதும் உடற்கல்வி டிப்ளோமா தகைமை பெறும் ஒருவரதும், பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களின் தகைமைகள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

முற்பகல் 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ள ஐந்தாவது அமர்வில், சந்தைப்படுத்தலில் கலாநிதி பட்டம் ஒருவரும், சித்த வைத்தியத்தில் முது தத்துவமாணி பட்டம், தமிழில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா இருவரும், கல்வியியலில் முதுமாணி பட்டத்தை 98 பேறும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தை 62 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (4 ஆண்டுகள்) பட்டத்தை 03 பேரும், கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (3 ஆண்டுகள்) பட்டத்தை ஒருவரும், கணினி விஞ்ஞானமாணி பட்டத்தை 02 பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 10 பேரும், விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 106 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 18 பேரும், விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை 98 பேரும் பெறவுள்ளனர்.

பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நடைபெறவுள்ள ஆறாவது அமர்வில், புவியியலில் கலாநிதி, பொருளியலில் முது தத்துவமாணி பட்டம் ஆகிய உயர் பட்டத் தகைமைகளைத் தலா ஒவ்வொருவரும், கல்வியியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா தகைமையினை 25 பேரும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 26 பேரும், பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 33 பேரும், விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 91 பேரும் பெறவுள்ளனர்.

இவற்றுடன், வவுனியா வளாகத்தின் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமாணி (பொது) பட்டத்தை 25 பேரும், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 14 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (பொது) பட்டத்தை 15 பேரும், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தை 09 பேரும், விஞ்ஞானமாணி ( பிரயோக கணிதம், கணினி) பொதுப் பட்டத்தை 22 பேரும், கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தை 04 பேரும், வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தை 52 பேரும், திட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தை 35 பேரும், வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தை 26 பேரும் பெறவிருக்கின்றனர்.

Posted in Uncategorized

விமல் வீரவன்சவிற்கு எந்த உரிமையும் இல்லை! உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் – பொதுஜன பெரமுன

பொதுஜன பெரமுனவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்த அமைச்சர் விமல் வீரவன்ச, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, உள்ளூர் வார இறுதி செய்தித்தாளிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தில் இருந்து அகற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது முடிவெடுக்கவோ வீரவன்சவுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் வீரவன்ச பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,அத்துடன் அவர் தனது அறிக்கையையும் திரும்பப் பெற வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என்று காரியவம் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச இவ்வளவு தாழ்ந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

யாழில் கொரோனாவால் முதலாவது உயிரிழப்பு பதிவு

யாழ். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் நான்காவது நபர் கொவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று மீளவும் மாற்றப்பட்டார். அவரை கொவிட் -19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது சடலம் கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் ஒருவரும் மன்னாரில் இருவரும் என மூவர் கொவிட் -19 நோயால் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.

Posted in Uncategorized

பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டத்தில் பங்குபற்றிய ரெலோ தலைவர் செல்வம், வினோ MP -எதிராக பொலிஸார் நடவடிக்கை

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் பொலிசாரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய B அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்திய நபர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த B அறிக்கையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைகுழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன்,தமிழ் அரசு கட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், துரைராசா ரவிகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் மதத்தலைவர்களின் பெயர்களும் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் பேரணியில் பங்கு பற்றமுடியாது, பேரணியை முன்னெடுக்க முடியாது என தடை கோரி தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்த நிலையில் கடந்த 05 .02.2021 அன்று பேரணி முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிப்பு!

பல வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிய நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஜெனிவாவில் எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் நாட்டின் சுயாதீன தன்மையை விட்டுக்கொடுக்க போவதில்லை – பிரதமர்

யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது. பல நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும் என்பதை நன்கு அறிந்து நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகினோம். எவ்வாறான நெருக்கடி ஏற்பட்டாலும் நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுக்கமாட்டோம். நாட்டின் உரிமை நாட்டு மக்களுக்கே வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சியம்பலான்டுவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற மத நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த சாசனத்தை முன்னிலைப்படுத்தி அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது.நாட்டின் நன்மைக்கு சர்வ மதங்களின் ஆசிர்வாதம் அவசியமாகும். அனைத்து மதத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது பௌத்த சாசனத்துக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டது. இதனால் கடந்த காலங்களில் மதங்களுக்கிடையில் பாரிய பிணக்கு ஏற்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ராஜபக்ஷ பெயருடன் தொடர்புடையவர்களையும், எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளையும் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தியது.பௌத்த மதத்துக்கும்,பௌத்த மத தலைவர்களுக்கும் எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பௌத்த சாசனத்தை பாதுகாக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பிக்குகளின் பெற்றோருக்கு வீடு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

30 வருட கால யுத்தம் பொருளாதாரம், சமூகம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முடிக்க முடியாது என்று குறிப்பிட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய காலத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதாரம் ஆகியவற்றை ஒருசேர முன்னேற்றமடைய செய்தோம்.

யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது. நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிடும் என்பதை நன்கறிந்து நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகினோம்.நாட்டின் சுயாதீனத்தன்மைக்கான நெருக்கடியான பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

நாட்டின் உரிமையை நாட்டு மக்களுக்கே வழங்குவோம். தற்போதும் கூட நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சுயாதீன முறையில் தீர்மானம் எடுத்துள்ளோம். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே மத தலைவர்கள் அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி ஆட்சியை நல்வழிப்படுத்த தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

பேரணி இலக்கைச் சென்றடைந்தது- பொலிகண்டியில் இறுதிப் பேரெழுச்சிப் போராட்டம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.

பல தடைகளை உடைத்து ஐந்தாம் நாளான இன்று தனது இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க யாழ். மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி பேரணி அதனை உடைத்து முன்னேறி இன்று மாலை தனது இலக்கான பொலிகண்டியை அடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து விலகிச்சென்றனர்.

இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.

வாழ விடு வாழ விடு தமிழினத்தை, அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிரச் சிங்களத்தின் செவிப்பறை கிழிய ஐந்து நாள் பேரணி இன்று மாலை மணியளவில் வந்தடைந்துள்ளது.

பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் பல விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகளை வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுர்சி பாரிய போராட்டமாக வடக்கு, கிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.

அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று 7 ம் திகதி யாழ் பொலிகண்டி முற்றத்தை வந்தடைந்துள்ளது.

தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும், தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகைச் சற்று இலங்கை தீவை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

Posted in Uncategorized