அடலேறு சிறிசபாரத்தினம் எழுச்சி நிகழ்வு யாழ் மாவட்ட கோண்டாவிலில் நடைப்பெற்றது

இன்று அடலேறு சிறிசபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் எழுச்சி நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் யாழ் மாவட்ட ரெலோ பொறுப்பாளருமான நிரோஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ரெலோ ஊடக பேச்சாளர் சுரேன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் ,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் பொருளாளருமான விந்தன், யாழ் மாநகர பிரதி முதல்வரும் யாழ் மாவட்ட பிரதி தலைவருமான ஈசன், நல்லார் பிரதி தவிசாளர் ஜெயகரன், நல்லூர் தொகுதி அமைப்பாளர் மதுசூதனன், யாழ் நகர அமைப்பாளர் உதயசிறி,யாழ் மாநகரசபை உறுப்பினர் நளினா பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறமாவட்டங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் வரமுடியாத சூழ்நிலையில் இந்நிகழ்வை வருடாவருடம் நடாத்தி வரும் ரெலோ யாழ் மாவட்ட உறுப்பினர்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று நினைவுகூர்ந்தனர் .

வடக்கு கிழக்கில் உள்ள ரெலோ காரியாலயங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவட்ட கிளையின் உறுப்பினர்களால் எழுச்சி தினம் நடைபெற்றது.

புலம்பெயர் தேசங்களில் உள்ள ரெலோ பிரித்தானிய, சுவிட்சர்லாந்து,கனடா, பிரான்ஸ் கிளைகளில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எழுச்சி நிகழ்வு நடைபெற உள்ளது.

தயாமாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரபட்டது.

2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

வழக்கில் தயா மாஸ்டர் சார்பாக சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கில் தயா மாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.