மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன ரெலோ தலைவர் செல்வம்

சுகாதார அமைச்சர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்கு காணப்படும் குறைப்பாடுகளை ஆராய வேண்டும். வைத்தியசாலையில் காணப்படும் வசதி குறைபாட்டால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகிறேன் என்று ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சுகாதார அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரை அந்த வைத்தியசாலைக்கு சென்று கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

அங்கே ஆளணி பற்றாக்குறையுடனும், தளபாட பற்றாக்குறையும் காணப்படுகின்றன. வளங்களை கொண்ட வைத்தியசாலையாக இது இல்லை என்பதனையும் கூறுகின்றேன். அங்கே அனுமதிக்கப்பட்ட ஆளணி வைத்தியர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தாலும் ஒரு நிரந்தர வைத்திய நிபுணர்களும் இல்லை. தற்காலிக வைத்திய நிபுணர்களே உள்ளன. இதனால் தொடர்ச்சியாக தரமான சிகிச்சையை வழங்க முடியாமல் உள்ளது.

அத்துடன் ‘சீடி ஸ்கேன்’ இயந்திரம் மன்னார் மாவட்டத்தில் இல்லை. வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அதற்கான கட்டிடங்கள் இருந்தாலும் அந்த இயந்திரம் இல்லை. இதனால் அதை மன்னாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைக்கின்றேன்.

இதேவேளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் அங்கு இல்லை. அத்துடன் அங்கு குழந்தைகள் வைத்திய நிபுணர் ஒரு மாதமாக இல்லை. வவுனியா அல்லது யாழ்ப்பாணத்திற்கு குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர். பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மாரின் துன்பங்கள் வேதனைக்குரியதே. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆளணி பற்றாக்குறை அங்கே இருப்பதால் அந்த வைத்தியசாலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது என்றார்.

கச்சதீவை இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள் -ரெலோ

கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மன வருத்தம் தருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.