Channel 4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காணப்படும் அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Channel 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் ஒருவர் வௌியிட்டுள்ள கருத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டுவதற்குமான சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாசகார ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளமையானது, எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக, இந்த குழப்பநிலையை ஏற்படுத்தும் விதமான கருத்துகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான தெளிவான புரிதலை சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதன் ஊடாக, சரியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வழிசமைப்பதே இந்த விரிவான செயன்முறையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தின் பாதகமான விளைவுகளுடன் முழு நாடும் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது உண்மையை வெளிப்படுத்தவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கையாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

உண்மையைக் கண்டறிவதற்காக இந்த முக்கியமான விசாரணைகள் நடத்தப்படும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.