“தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில் செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.
அதேநேரம், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான நுமு-649 ரக விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.15 மணியளவில் டுபாய் நோக்கி ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சென்றுள்ளனர்.
துபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவலும், பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்