“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானது என சுட்டிக் காட்டியுள்ள உயர்நீதிமன்றம், ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றுக்கொள்வதுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.” என் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மேற்படி சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறாகும்:-
• 3, 42, 53 மற்றும் 70 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
• 4 ஆம் வாசகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும்.
• 72(1) ஆம் வாசகம் அரசியலமைப்புடன் இணங்காததுடன் விசேட பெரும்பான்மையுடனும் மற்றும் மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும். அதற்கு இணங்க, 72(2) ஆம் வாசகமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.
• 75(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 4 (இ) உறுப்புரையை மீறுவதுடன் 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் ஆணையின் போது அவை அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும்.
• 83 (7) ஆம் வாசகம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.
மேலும், உயர்நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.