பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே – கருத்துக்கணிப்பில் மக்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு நடத்திய பொருளாதார சீர்திருத்த குறியீடு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை அவசியமான பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே என அதிகளவான இலங்கையர்கள் நம்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 56.6 வீதமானவர்கள் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 31.4 வீதமானவர்கள் தாங்கள் அவரை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 45 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வீதமானவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மீது 42 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை சம்பிக்க ரணவக்க மீது 23 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் – சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி இரண்டு நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.

மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது.

எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.