இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

இலங்கை குறித்து பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராக மக்னட்ஸ்கி  பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும், சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பான தனது அர்ப்பணிப்புகளை நிறைவேற்றவேண்டும்,தனது இராணுவத்திற்கான மிகவும் அதிகரித்த செலவீனங்களை குறைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழுவின் தலைவரும் கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எலியட் கோல்பேர்ன் பிரிட்டன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அப்பால் செல்லவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானம் இலங்கை விவகாரத்தில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதை நோக்கிய பாதையில் சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர்முன்னரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,மனித உரிமை பேரவை தொடர்பிலான சர்வதேச நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்களை விசாரணை செய்து குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான பொறிமுறை என்ற விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் போதுமானதல்ல  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கொல்பேர்ன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிரான ஆதாரங்களை வலுப்படுத்தி அவர்களிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு விசேட வளங்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்,யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை வழக்குவிசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசாங்கம் தயாரில்லை என்பதற்காக அவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுபாட்டுரிமையை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் எலியட் கோல்பேர்னின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் ஏன் சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தொடர்பில் மக்னட்ஸ்கி பாணியிலான தடைகள் குறித்து அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டன்  ஆதரவளித்த சமீபத்தைய தீர்மானம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம்  குற்றவியல் பொறுப்புக்கூறலிற்கு முயலவேண்டும் என்ற பரிந்துரையை ஏன் கொண்டிருக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அவர் பாதுகாப்பு சபையின் போதிய ஆதரவின்மையே அதற்கு காரணம் என பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவி;த்திருந்ததை என்னால் நம்பமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உரத்த செய்தியை சர்வதேச அரங்கில் தெரிவிப்பதே எங்கள் நோக்கமாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள்மற்றும் ஊழல்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக  ஏன் பிரிட்டன் மக்னஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் இலங்கை விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர், லோர்ட் டேவிஸ் மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய முன்னாள் வங்கியாளரும் , முன்னாள் தொழிற்கட்சி அமைச்சருமான இவர், 2020 அக்டோபரில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனினால் இலங்கைக்கான இங்கிலாந்து பிரதமரின் வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டார்.

வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கிலும், இங்கிலாந்து-இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் பரஸ்பர வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் அவர் பல்வேறு வணிக மற்றும் அரசாங்க பங்குதாரர்களை சந்திப்பார் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிலைமை தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்றில் விவாதம்

இலங்கையின் நிலைமை குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழுவின் விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி பொதுச்சபையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பமான விவாதங்களை முன்வைக்க, பின்வரிசை வணிகக்குழு வாய்ப்புகளை வழங்குகிறது.

முன்னதாக கடந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வின் போது பிரித்தானியா தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவே, இலங்கைக்கு எதிரான யோசனையை முன்னகர்த்தி அதனை நிறைவேற்றியது. இதன்படி இலங்கையின் போர் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல் உள்நாட்டில் இருந்து சர்வதேசத்தின் கைகளுக்கு செல்கிறது. எனினும் இதனை இலங்கை கடுமையாக ஆட்சேபித்து வருகிறது.