போரின் பின்னர் வடக்கு பகுதிகளில் அரச அனுசரணையுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றபோதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.
விவசாயிகள், மீனவர்கள் உட்பட சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றியும், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
அண்மைக்காலமாக வடக்கில் மீனவர்கள் கடலட்டை பண்ணைகளால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரச கட்டமைப்புகளில் முறைப்பாடு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் உள்ள கடலட்டை பண்ணைகளால் உள்ளூர் மீனவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
அங்குள்ள கடலட்டை பண்ணைகளின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த கடலட்டை பண்ணைகளின் விருத்திக்காக நிதியுதவி செய்வதாகவும் மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பண்ணைகளில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தாமல், வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி, கடலட்டை பண்ணைகள் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்கு பிரதேச மீனவர்களை கூட அனுமதிப்பதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள மீனவர்களுக்கு மென்மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்தீவில் அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. அப்பிரதேசத்தை விட்டு அங்கு வாழும் மீனவர்களும் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால், சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இப்பிரதேசத்தின் பூர்வீக தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையை எமக்கு பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.