யாழில் 1814 கர்ப்பிணிகள் வறுமையினால் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும்,

யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்பிணிகளும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும்,

மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும்,

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகள் என 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

இரண்டு இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களின் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு

பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்குப் பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு

அவசரகால கொள்முதல் செயல்முறை உட்படக் கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமை

சுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.

அத்துடன், குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க உலக சுகாதார நிறுவனம் தலையிடவேண்டும்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மருந்து தட்டுபாட்டை நீக்குவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை அமைத்து, இந்த குழுவின் ஊடாக இந்த மருந்து தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என்ன போன்ற விடயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, சுகாதார அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, ஆகியோருக்கு தெளிவாக கூறியிருந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் பெரிய வைத்தியசாலைகள் தொடக்கம் சிறிய வைத்தியசாலைகள் வரை இந்த மருந்து தட்டுபாடு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலைழைய தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உடனடியாக நிலையான தீர்வை முன்வைக்க தவறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு, மருந்து விலை அதிகரிப்பு, மருந்து கொள்வனவில் ஏற்படும் ஊழல் விடயங்களை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கோரி, கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தில் ​நேற்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக இலங்கைக்கு மருந்து பொருட்களை வழங்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரரி்கைகையும் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல் , முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையால் மீண்டும் கொரேனாவைத் தாங்க முடியாது

தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிலும் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு வருகைதருவோர் குறித்து, கவனம் செலுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு கொரோனா தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனாவின் புதிய மாறுபாடு எதுவும் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வில்லை என்றும் கொரோனா அறிகுறிகள் மாறவில்லை என்றும் ஐடிஎச் வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

எனினும், சாத்தியமான நோய்த் தொற்றைத் தடுக்க உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர் குறிப்பிட்டார்

Posted in Uncategorized

புற்றுநோய் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு

15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10,000 புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து  ஏறபட்டுள்ளது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்,இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்,எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற  சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்,கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர்தனியாரிடமிருந்து மருந்துகளை பெறுமாறு எங்களால் எங்கள் நோயாளிகளை கேட்கமுடியும்,ஆனால் எங்கள் நோயாளிகளில் 90 வீதமானவர்களால் அது முடியாது மருந்துகளின் விலை 50,000 ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

புதிய வரிகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் புதிய வரிகள் குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிடவுள்ளது.

2023 ஜனவரியின் கடைசி வாரத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரியின் இறுதி வாரத்தை கறுப்பு ஆர்ப்பாட்ட வாரம் என அறிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க அரசாங்கம் அறிவித்துள்ள தன்னிச்சையான வரிமாற்றங்கள் தங்களின் தொழில்துறையை சேர்ந்தவர்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட மகஜரை ஜனவரி 10 ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிருப்பில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் சந்தை, மருத்துவ கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கூட 75-மிகி அஸ்பிரின் மாத்திரைக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.