அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

அண்மையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தமானது 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்களை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்றும், நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் இப்புதிய திருத்தத்தின் பிரகாரம் நிறுவப்படும் அரசியலமைப்புப்பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியம் என்பதுடன் அவை நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளுறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும் என்று அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தமெனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அரசாங்கத்தினால் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக குழுநிலையின்போது மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களுடன் கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் வலுப்பெற்ற மக்கள் போராட்டங்களே அரசியலமைப்புத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான அவசியத்தைத் தோற்றுவித்தது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி உள்ளடங்கலாக நிறைவேற்றதிகாரத்தின் பொறுப்புக்கள் தொடர்பில் போதியளவிற்கு ஆராயப்படாமையும் தற்போதைய நெருக்கடிக்கான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன.

இருப்பினும் வருந்தத்தக்கவகையில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தமானது 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்களை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்பதுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் அச்சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருந்ததுடன் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் செயன்முறை அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதானது அப்பேரவையின் ஊடாக அதிகாரிகளின் நியமனம் இடம்பெறும் கட்டமைப்புக்களின் நேர்மை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

எதுஎவ்வாறிருப்பினும் தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதன்கீழ் நிறுவப்படும் அரசியலமைப்புப்பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியம் என்பதுடன் அவை நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளுறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும்.

எனவே அரசியலமைப்புப்பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் செயன்முறையின்போது அதன் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சித்தலைவர்களிடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை அரசியலமைப்புப்பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும் அனைவரையும் உள்ளடக்கியதுமான செயன்முறையை அப்பேரவை பின்பற்றவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.