சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கூடிய சிரேஷ்ட அதிகாரிகளின் குழு

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க ஆகியோரும் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம், தேசிய கொள்கைகளை திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சபையொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதன் கீழ் 02 உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று செயற்படும்.

அதன் கீழ், நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அவசியமான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்காக தேசிய சபை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழு கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதற்தடவையாக கூடியபோதே, “தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு” நியமிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு முதல் அடுத்த 25 வருடங்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்குதல் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கை நிறைவேற்றம் பொறுப்பு இக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இதன்போது நாட்டில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.

புதிய தேசியக் கொள்கையின் வரைவு 27.12.2022 ஆம் திகதிக்குள் தயாரிக்கப்பட்டு, குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டு இறுதி அறிக்கை 15.01.2023 ஆம் திகதிக்குள் சட்ட மூலமாக தயாரிப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

அண்மையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தமானது 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்களை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்றும், நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் இப்புதிய திருத்தத்தின் பிரகாரம் நிறுவப்படும் அரசியலமைப்புப்பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியம் என்பதுடன் அவை நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளுறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும் என்று அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தமெனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அரசாங்கத்தினால் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக குழுநிலையின்போது மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களுடன் கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் வலுப்பெற்ற மக்கள் போராட்டங்களே அரசியலமைப்புத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான அவசியத்தைத் தோற்றுவித்தது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி உள்ளடங்கலாக நிறைவேற்றதிகாரத்தின் பொறுப்புக்கள் தொடர்பில் போதியளவிற்கு ஆராயப்படாமையும் தற்போதைய நெருக்கடிக்கான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன.

இருப்பினும் வருந்தத்தக்கவகையில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தமானது 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்களை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்பதுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் அச்சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருந்ததுடன் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் செயன்முறை அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதானது அப்பேரவையின் ஊடாக அதிகாரிகளின் நியமனம் இடம்பெறும் கட்டமைப்புக்களின் நேர்மை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

எதுஎவ்வாறிருப்பினும் தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதன்கீழ் நிறுவப்படும் அரசியலமைப்புப்பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியம் என்பதுடன் அவை நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளுறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும்.

எனவே அரசியலமைப்புப்பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் செயன்முறையின்போது அதன் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சித்தலைவர்களிடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை அரசியலமைப்புப்பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும் அனைவரையும் உள்ளடக்கியதுமான செயன்முறையை அப்பேரவை பின்பற்றவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் உள்ள மாற்றங்கள் எவை?

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் உள்ள மாற்றங்கள் என்ன?

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கருதப்படுகிறது. எனவே, 22 ஆம் திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தமாகவே அரசியலமைப்பில் உள்வாங்கப்படுகிறது.

இந்த திருத்தத்திற்கு எவ்வாறு வாக்களிக்கப்பட்டது?

இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது இதற்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின் பின்னரான வாக்கெடுப்பின் ​போது 174 வாக்குகள் அளிக்கப்பட்டன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஶ்ரீலங்கா பொதுஜக பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே எதிராக வாக்களித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த திருத்தத்திற்கு வாக்களிக்காதவர்கள் யார்?

44 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

திருத்தத்திற்கு வாக்களிக்காத ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

  1. மஹிந்த ராஜபக்ஸ
  2. பிரசன்ன ரணதுங்க
  3. மஹிந்த அமரவீர
  4. பிரமித்த பண்டார
  5. சனத் நிசாந்த
  6. சிறிபால கம்லத்
  7. அநுராத ஜயரத்ன
  8. சீதா அரம்பேபொல
  9. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
  10. பவித்ரா வன்னியாராச்சி
  11. காமினி லொகுகே
  12. ஜனக பண்டார தென்னகோன்
  13. எஸ்.எம்.சந்திரசேன
  14. ரோஹித அபேகுணவர்தன
  15. விமலவீர திசாநாயக்க
  16. தம்மிக பெரேரா
  17. எஸ்.எம்.எம். முஷாரப்
  18. ஜயந்த கெடகொட
  19. பிரதீப் உதுகொட
  20. சஞ்ஜீவ எதிரிமான்ன
  21. நாலக பண்டார கொட்டிகொட
  22. நிபுண ரணவக்க
  23. சஹன் பிரதீப்
  24. சாகர காரியவசம்
  25. ரஞ்சித் பண்டார
  26. ஜயந்த வீரசிங்க

ஆகியோர் வாக்களிப்பு நடைபெற்ற போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை

  1. ஹேஷா விதானகே
  2. ஹெக்டர் அப்புஹாமி
  3. வடிவேல் சுரேஷ்
  4. வேலு குமார்
  5. அப்துல் ஹலீம்

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாக்களிப்பில் பங்குபற்றியிருக்கவில்லை

  1. இரா.சம்பந்தன்
  2. எம்.ஏ.சுமந்திரன்
  3. இரா.சாணக்கியன்
  4. எஸ்.நோகராதலிங்கம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை

  1. ஜி.எல்.பீரிஸ்
  2. உபுல் கலபதி
  3. திஸ்ஸ விதாரண

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

  1. அங்கஜன் இராமநாதன்
  2. சான் விஜயலால் டி சில்வா

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான

  1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  2. செல்வராசா கஜேந்திரன்

ஆகியோர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தனர்.

புதிய திருத்தத்தில் உள்ள மாற்றங்கள்

  • குறித்த அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் நியமன அதிகாரத்தை நீக்கி, அரசியலமைப்பு சபையை அதனுடன் இணைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போதுள்ள ஆணைக்குழுக்கள் கலைக்கப்பட்டு இந்த திருத்தத்தின் பின்னர் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
  • இந்த திருத்தத்தின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமை இல்லாதொழிக்கப்படுவதுடன், தற்போது பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு உறுப்புரிமை இல்லாமலாக்கப்படும்.
  • இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் வகையில் இந்த திருத்தச் சட்டம் உருவாகியுள்ளது.
  • அரசியலமைப்பு சபைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்வதற்கு இன்று திருத்தங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.