மாகாணசபைகளுக்கான புதிய சட்ட திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து , அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை எனில் மாகாணசபை தேர்தல் இடம்பெறாது. தேர்தல் இடம்பெறாவிட்டால் மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளால் அன்றி, அதிகாரிகளினாலேயே தொடர்ந்தும் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்படும் என்று சுயாதீன தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, அவற்றின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் , பாடசாலைகள் உள்ளிட்டவற்றின் புனர்நிர்மாணம் உட்பட பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மாகாணசபைகளை வெள்ளை யானை என்று விமர்சிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாணசபை தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வரும் நிலையில் , அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். எமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஜனாதிபதிக்கு கூட பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஜனாதிபதி விரும்பினாலும் அவரால் அதனை செய்ய முடியாது. மாறாக அதற்கு முன்னர் கலைக்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அதற்கான யோசனையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறான யோசனை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.
2018 இல் 7 பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் தெளிவாக இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சட்ட ரீதியாக தற்போதைய காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. தற்போது மாகாணசபைகள் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். மாகாணசபைகள் காணப்படுகின்றன. அதற்குரிய அமைச்சு காணப்படுகிறது. அமைச்சின் கீழ் இதனுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் இயங்குகின்றன. மாகாண சேவை ஆணைக்குழு உள்ளிட்டவை அவற்றில் உள்ளடங்குகின்றன. அரசாங்கத்தினால் இதற்கு நிதியும் ஒதுக்கப்படுகிறது. எனவே மாகாணசபைகளுக்கான பிரதிநிதிகள் மாத்திரமே தற்போது இல்லை.
மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நிறுவனமும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி நிர்வகிக்கப்படக் கூடாது என்பதையே தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகிறது.எனவே இவற்றுக்கு நிச்சயம் மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். மாகாணசபைகளை வெள்ளை யானைகள் என்றும் சிலர் விமர்ச்சிக்கின்றனர். மாகாணசபைகளுக்கான நிதி தொடர்பில் ஆராய்ந்த போது , அதில் சுமார் 90 சதவீத நிதி புனர்நிர்மாணப்பணிகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகள் , வைத்தியசாலைகளில் அதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது மாகாணசபைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்காகவே நிதி ஒதுக்கப்படுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.மாகாணசபை வரவு – செலவு திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்காக 0.03 சதவீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையா வெள்ளை யானை என்கின்றனர்?
எது எவ்வாறிருப்பினும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்கின்றமையை தேர்தல் ஆணைக்குழு கடுமையாக எதிர்க்கின்றது. இதனை நாம் தெரிவுக்குழுவிலும் தெரிவித்திருக்கின்றோம். மாகாணசபை சட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. 88 (2) மற்றும் 2017 (17) ஆகிய இரு சட்டங்கள் காணப்படுகின்றன. 2017 (17) சட்டத்திலுள்ள எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் , அதிலுள்ள முக்கிய விடயமான எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை முன்வைத்த அமைச்சரும் கூட அதற்கு எதிராகவே வாக்களித்தார்.
குறித்த யோசனை தோல்வியடைந்ததனால் , பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் , அந்தக் குழு இரு மாதங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதற்கமைய நியமிக்கப்பட்ட குழு ஒரு தடவை மாத்திரமே கூடியது. அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.எனவே தான் புதிய சட்ட நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக , பழைய சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என்று நாம் குறிப்பிட்டோம்.
எவ்வாறிருப்பினும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமையின் காரணமாக , பழைய சட்டத்தின் கீழ் நடத்த முடியாது என்றும் , மாறாக புதிய சட்டத்தில் ஒரு சிறிய திருத்தத்தினை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடாகக் காணப்பட்டது. அதற்கமைய புதிய திருத்தத்தில் சிறிய திருத்தத்தினை மேற்கொண்டு , மாகாணசபைகளை பழைய முறைமையின் கீழ் நடத்திச் செல்வதற்கும் , அதன் பின்னர் எல்லை நிர்ணயத்துடன் அடுத்தடுத்த மாகாணசபைகளை நடத்திச் செல்வதற்கும் தெரிவு தீர்மானித்தது.
எனவே இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணசபைகளுக்கான புதிய சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை எனில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாது. மக்கள் பிரதிநிதிகள் இன்றி தொடர்ந்தும் அதிகாரிகளால் மாகாணசபைகள் நிர்வகிக்கப்படும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இதுவே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.