நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுமாறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களான சீனா மற்றும் இந்தியாவுடனான கடனை மறுசீரமைக்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முன்வைக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விடுவிக்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், சீனாவுடனான ஆரம்பக் கருத்துப் பரிமாற்றத்தின் போது, ​​கடனை மறுசீரமைப்பதற்கு முன்னர், தம்முடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என, சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இலங்கை 1998ஆம் ஆண்டு இந்தியாவுடன் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், தங்களுக்கும் இதேபோன்ற வாய்ப்பு தேவை என்று சீனா கருதுகிறது.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னர் எக்டா உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என இந்தியா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நாட்டில் இந்திய முதலீடுகள் மற்றும் சேவை விநியோக வணிகங்களுக்கு வரி விலக்கு அளிக்கிறது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும் முடிவடையும் வரையில் சீனாவும் இந்தியாவும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்காது என்று தெரிய வந்துள்ளது.

இரு நாடுகளுடனான கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்குவது மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சு

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Sarwat Jahan ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுடன் இது தொடர்பில் அவரது கருத்துக்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் சாகல ரத்நாயக்க இந்தக் குழுவிடம் உறுதியளித்தார்.

பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்

IMF ஒப்பந்தம் குறித்து அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் பேச்சு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நிலையான தீர்வுகள் தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் முதலீடு செய்யும் அமெரிக்க வர்த்தகர்கள் குழுவுடனும் அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 25ஆம் திகதி நாட்டிற்கு வந்த ரொபர்ட் கப்ரோத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.