‘சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை’ இந்தியாவின் பாதுகாப்புக்கான எந்த அச்சுறுத்தலும், இலங்கைக்கும் அச்சுறுத்தலே என்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த வாரம் ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கிறார்.
அவரது அந்தக் கருத்து வெளியாகிய அதே நாள், இந்தியாவின் மற்றொரு நாளிதழான தி ஹிந்துவில், இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் குறித்து கவலை கொள்வதாக, மாநில புலனாய்வுத் துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வுச் செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு வேறெந்த நாடும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று, மிலிந்த மொரகொட கூறியிருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு எந்த நாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும், ஆட்சியில் இருந்த போது பலமுறை உத்தரவாதம் அளித்திருந்தாலும், இலங்கையில் அதிகரித்து வரும் சீனப் பிரசன்னம், இந்தியாவுக்கு கவலையளிப்பதாகவே உள்ளது.
இந்தியாவைக் கண்காணிப்பதற்கு இலங்கையை சீனா ஒரு தளமாகப் பயன்படுத்த தொடங்கியிருப்பது, புதுடில்லிக்கு முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தை இந்தியா அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், சீனா இப்போது இந்தியாவை தன் நேரடி மற்றும் மறைமுக பலத்தைப் பயன்படுத்தி சுற்றி வளைக்கத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் ‘யுவான் வாங் -5’ என்ற செய்மதி, மற்றும் ஏவுகணை வழித்தடக் கண்காணிப்புக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் சென்ற பின்னர், இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனை இன்னும் அதிகரித்திருக்கிறது.வழக்கமாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகள் தான், சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனைகளை- எச்சரிக்கைகளை விடுப்பது வழக்கம். அதற்கு மாறாக, இப்போது இலங்கையில் குறிப்பாக வடக்கில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்திருப்பது குறித்து, எச்சரிக்கை விடுத்திருக்கிறது மாநில அரசின் புலனாய்வு அமைப்பு.
மாநில அரசின் புலனாய்வு அமைப்பு, மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் மற்றும் அளவிலான பொலிஸ் தலைமையகங்களுக்கு, விடுத்துள்ள எச்சரிக்கையில், சீன புலனாய்வாளர்களின் ஊடுருவல்கள் நிகழலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றின் துணையுடன், சீன இராணுவப் புலனாய்வாளர்கள், தமிழகத்துக்குள் ஊடுருவியது பற்றிய செய்தியும், வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிரிவு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், என ஏராளமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. இந்த கேந்திரங்கள் இராணுவ ரீதியாகவோ, மூலோபாய ரீதியாகவோ, பாதுகாப்பு ரீதியாகவோ முக்கியத்துவமானவை.
இவ்வாறான இடங்களில் பாதுகாப்பில் மத்திய அரசும் அதன் புலனாய்வு நிறுவனங்களும் கவனமாக இருக்கின்ற போதும், மாநில புலனாய்வுப் பிரிவு விடுத்திருக்கின்ற எச்சரிக்கை, இந்திய அரசாங்கத்துக்கு சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. காரணம், சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை. அவ்வாறு முரண்படுவது இலங்கை அரசாங்கத்தை சீனாவை நோக்கி இன்னும் நெருங்கிச் செல்லும் நிலையை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம், அதற்கு உள்ளது. இவ்வாறான நிலையில் தான் மாநில புலனாய்வு அமைப்பின் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. இதற்குப் பின்னரும், புது டில்லி இந்த விவகாரத்தில் தற்காப்பு நிலையில் – மதி ல்மேல் பூனையாக இருக்க முடியாது.
அதேவேளை, வடக்கில் சீன இராணுவப் பிரசன்னம் குறித்த தமிழக புலனாய்வு அறிக்கை எந்தளவுக்கு உண்மையானது என்ற கேள்விகள் உள்ளன. ஏனென்றால் வெளிப்படையாக சீன இராணுவம் வடக்கில் இயங்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் வெளியாகவில்லை. ஆனால், இராணுவ பாணி சீருடையணிந்த சீனர்கள் பலர், வடக்கில் புதிதாக முளைத்த கடல் அட்டைப் பண்ணைகளில் காணப்படும் படங்கள் வெளியாகியிருந்தன. அவை சீனப் பணியாளர்கள் என்று கூறப்பட்டாலும், சீன மக்கள் விடுதலை இராணுவம் அல்லது சீன புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, அவர்களை வேறுபடுத்தி அறிவதற்கான எந்த வழிகளும் இல்லை.
தமிழக அரசின் புலனாய்வுப் பிரிவு, கடலட்டைப் பண்ணைகளில் சீன புலனாய்வுப் பிரிவினர் அதிநவீன கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவதாகவும், கடலட்டை பிடிப்பதை அவதானிப்பது என்ற பெயரில் சீன தூதுவரும் அதிகாரிகளும் அடிக்கடி இந்திய கடல் எல்லை வரை வந்து கண்காணித்துச் செல்வதாகவும் எச்சரித்திருக்கிறது. வடக்கில், சீனா இராணுவ ரீதியாக கால் வைக்க முடியாதென்பது சீனாவுக்கு தெரியும். ஏனென்றால் இந்தியா அதனை தீவிரமாக எதிர்க்கும். ஏற்கனவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, திருகோணமலை சீனக்குடாவில், விமானங்களைப் பழுதுபார்க்கும் மையத்தை அமைக்க சீனா முற்பட்டது. அதற்கு அரசாங்கமும் அனுமதி அளித்த பின்னர் புதுடில்லி தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. எனவே, பொருளாதார அல்லது முதலீட்டுத் திட்டங்களின் மூலமாகத் தான் வடக்கில் கால் வைக்கலாம் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது.
அவ்வாறாகத் தான், நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில், கலப்பு மின் திட்டங்களை அமைக்க சீனா முற்பட்டது. அதனையும் இந்தியா தடுத்து நிறுத்தி விட்டது. இப்போது கடலட்டைப் பண்ணைகளின் ஊடாக சீனா வடக்கில் தீவிரமாக கால் வைக்கத் தொடங்கியிருக்கிறது. வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமலேயே, புதிய கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. கடலட்டைப் பண்ணைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவற்றுடன் பேச்சு நடத்தியதாகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். இது, சீனாவுக்கு எதிரான உணர்வுகளை தணிக்கும் கருத்தாக இருக்கலாம். அதாவது சமநிலையை பேணுகின்ற முயற்சி.
அதேவேளை, இந்தியாவில் கடலட்டை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாகப் பிடிக்கப்படும் கடலட்டைகள் கடல் வழியாக கடத்தப்பட்டு, இலங்கையின் ஊடாகவே சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிறுவனங்கள், இலங்கையில் கடலட்டை பண்ணைகளில் முதலீடு செய்ய முன்வருமா- அதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பன கேள்விக்குரிய விடயங்கள். எவ்வாறாயினும், சீன கடலட்டைப் பண்ணைகளை இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தும், முயற்சிகளை மத்திய அரசு எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறது என்பது கவனத்துக்குரிய விடயமாக உள்ளது.
ஏனென்றால், இலங்கைக்கு இனி கடன்களை வழங்குவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும், முதலீடுகளின் மூலம் இலங்கைக்கு உதவவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. அத்தகைய முதலீடுகள் கடலட்டைப் பண்ணை வடிவில் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை அமைக்க சீனா முன்வந்த போது இந்தியா அதனை தட்டிப் பறித்தது.
அதுபோல, சீனாவுடன் போட்டி போட்டு, கடலட்டைப் பண்ணைகளில் இந்தியாவும் முதலிடக் கூடும். சீனப் பிரசன்னத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு அவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. அவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமானால், அது, வடக்கிலுள்ள மீனவர்களுக்குத் தான் மேலும் பேரிடியாக அமையும். ஏற்கனவே இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்குத் தான் கொண்டு செல்லும்.
– ஹரிகரன்