மனோ, அனுர முன்வைத்த கோரிக்கை பாராளுமன்றில் ஏற்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த (Most Vulnerable) பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த கோரிக்கையை இன்று, பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

இதன்படி வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் பாராளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் எட்டாம் திகதி செவ்வாய்கிழமை அன்று இந்த கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பெருந்தோட்ட துறை 51 விகிதம், நகர துறை 43 விகிதம், கிராமிய துறை 34 விகிதம், என்ற ஐநா நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்ட துறை மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.

நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாக பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜேவிபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம். அதன்படி இன்று அனுரகுமார திசாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சி தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்து கொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும். பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாள குடும்பங்கள், மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.

இந்த பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும், ஆகவே அந்த அப்பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும், நான் கோர விரும்புகிறேன். எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள், தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகிறேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொலிஸ் பதிவு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம். இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன். தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.