இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpo2022 உலக பாதுகாப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையிலான இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட உத்தியோகபூர்வ தூதுக்குழுவினரே இவ்வாறு சென்றுள்ளனர்.
குஜராத் மாநிலம் காந்திநகரில், அக்டோபர் 19ஆம் திகதியன்று பிரதமர் நரேந்திரமோடி, இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பங்கேற்பது இது இரண்டாவது தடவையாகும்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் குஷிநகர் விமான நிலையத்திற்குச் சென்ற சர்வதேச விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒரு பகுதியாக இருந்தனர் என்று இந்திய உயர்ஸ்தானிகரம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தைப் பாராட்டியுள்ளார்.
பாதுகாப்பு கொள்கையை அதிகரிப்பதில் தற்காப்பு தொழில்துறை அடித்தளத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் ஐந்து பரிமாணங்களில் நவீன போரில் ஏற்படும் மாற்றத்தின் தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இந்த கண்காட்சி சிறந்த வழியை வழங்கியதாகவும், இந்த கண்காட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு துறையின் வளர்ந்துவரும் திறன் காட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பயணத்தின்போது இலங்கையின் அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ அஜய் பட்டை அக்டோபர் 17 ஆம் திகதியன்று சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு துறையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இந்த விஜயத்தின் போது இலங்கை பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இந்தியாவின் மூன்று சேவைத் தலைவர்களுடனும் சுமுகமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஆயுதப் படைகளின் பயிற்சிகளுக்காக வருடாந்தம், இந்தியாவில் 1500-1700 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.