அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை விடுத்த நீதிபதி, முறைப்பாட்டின் சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலை அனுப்புவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் சாட்சிப் பொருளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறுவெட்டையும் அன்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்குமாறு அது குறித்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இறுவெட்டை பகிரங்க நீதிமன்றத்தில் ஔிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.