அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் வாய் திறக்கவில்லை.
எனினும், 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று ஜனாதிபதியும் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இதேவேளை, எந்தத் தேர்தல் நடந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருக்கும் என்று பிரதமர் தினேஷ் மேலும் கூறினார்.