அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்டச் செயலகங்களின் தலைமையில், மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்புப் பிரிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை செயற்படும்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகள் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள நிவாரண சேவை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கும்.

அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக தேவையான நடவடிக்கைகள் மற்றும் அவசரகால பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்காக எடுக்க வேண்டிய துரிதமான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அப்பணிகளின் செயல்திறனை உயர் மட்டத்தில் பேணி, தேவையான நிவாரணத் திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அனைத்து துறைசார் அமைச்சுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை தொடர்பில் முறையிடுவதற்கு 117 என்ற தொலைபேசி எண், 24 மணிநேரமும் செயல்படுத்தப்படுகிறது. அனர்த்த நிவாரண சேவை நிலையத்தை (NDRSC) 24 மணிநேரமும் செயற்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற வசதிகள் இதன் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.