நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் நடைபெற்ற முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலின் போதே முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக பாடசாலைகள் திறக்கப்படாதிருந்தமையால் முன்னாயத்தமாக சிரமதான பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது டெங்கு பரவும் காலநிலை ஆரம்பித்திருப்பதனால் டெங்கு பெருகும் இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பாடசாலைக்கு உள்வரும் பிரதான நுழைவாயில் மற்றும் வகுப்பறைகளில் தொற்று நீக்கும் திரவங்கள் சரிவரப் பயன்படுத்தப்பட வேண்டும்.
சிறு பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதனால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொளி ஊடாக காண்பிப்பதனால். சமூக இடைவெளிகள் கட்டாயமாகப் பேணப்பட வேண்டும். கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கொவிட் தொற்றினால் ஏற்படுகின்ற அறிகுறிகள் குறித்து ஆசிரியர்கள் அதிக அவதானத்தைச் செலுத்த வேண்டும்.
குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் அவர்களது குடும்பத்தில் யாருக்காவது ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிதல்.
சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் வாகனங்கள் மூலம் பிள்ளைகளைக் அழைத்து வரும்போது அங்கு ஏற்படக்கூடிய சமூக இடைவெளிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.
கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு அவற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
இக் கலந்துரையாடலின் போது இவ்வாறான சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் பின்பற்றச் செய்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.