அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக வேண்டும்- புதிய அமெரிக்க தூதுவர்

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக விளங்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின்முன் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இலங்கை இந்து சமுத்திரத்தின் இதயத்தில் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. உலகளாவிய கடற்பாதைகள் மற்றும் வர்த்தக வழித்தடங்களிற்கான வழிகளை கொண்டுள்ள இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்கு மிகவும் முக்கியமானவை.

இது அமெரிக்கா சிவில் சமூகம் தனியார் துறையினர் பொதுமக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவினை ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திநிற்கின்றது.

எனது நியமனம் உறுதி செய்யப்பட்டால் பேண்தகு சூழல் மற்றும் தொழிலாளர் தாரதங்களைகருத்தில் கொள்ளும்,வெளிப்படைத் தன்மை. சர்வதேச சட்டத்திற்கான மதிப்பு நல்லாட்சி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்ட உட்கட்டமைப்பு முதலீடு ஆகியவற்றிற்காக அயராது பாடுபடுவேன்.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற அமெரிக்க நிறுவனங்களிற்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும், வலுக்கட்டாயமாக கடன் வழங்குதல் இரகசியமான ஒப்பந்தங்களிற்கு மாற்றீடுகளை வழங்குவதற்கு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வங்கி போன்றவற்றின் மூலம் எங்களிடம் உள்ள சாதனங்களை பயன்படுத்துவோம்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சில மாதங்களிற்கு முன்னர் எம்விபேர்ள் என்ற கப்பல் மூழ்கியமை அதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட மிகமோசமான பாரிய கடல்சார் அழிவு ஆகியன தராதரங்களை பேணவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மனிதாபிமான உதவி அவசர சூழ்நிலைகளில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான திறன் மற்றும் அதன் சுற்றுசூழல் கண்காணிப்பு சாதனங்கள் இலங்கை இந்த துன்பியல் சம்பவத்தினை எதிர்கொள்ள உதவின. இலங்கை போன்ற நாடுகளின் மக்களிற்கு நாங்கள் எவ்வாறு சாதகமான உறுதியான சகாவாக விளங்கமுடியும் என்பதற்கு இது அடையாளமாக உள்ளது.

இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு. நினைத்துப்பார்க்க முடியாத வன்முறைகள் மற்றும் மத இனரீதியான பிளவுகளை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தத்தின் துயரத்திலிருந்து மீண்ட நாடு இலங்கை.

எனது நியமனம் உறுதியானால் ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் மற்றும் வலுவான சிவில் சமூகத்திற்கு ஆதரவாக தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் குரல்கொடுக்கும் அர்ப்பணிப்புடன் நான் உள்ளேன். அவை ஜனநாயகத்திற்கு அவசியமானவை மற்றும் எங்கள் வெளிவிவகார அணுகுமுறையின் மையமாக உள்ளன.

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் வலுவான பங்காளிகளாக விளங்கவேண்டும்,இதனால் அனைத்து இலங்கையர்களிற்கும் அமைதி பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் கிடைக்கும்.

இரு தரப்பு உறவுகளிற்கு மிகவும் பெறுமதியான பங்களிப்பை வழங்கும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் விளங்கவேண்டும்” என்றார்.