ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி முதலில் இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக கூறினால் மாத்திரமே பேசசுவார்த்தைக்கு செல்வோம் என அவர் கூறினார்.
மேலும் கட்சியின் நிலைப்பாடு குறித்து பங்காளிக் கட்சிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயற்பாடு நேற்றும் நடைபெற்ற நிலையில் இந்த அரசாங்கம் இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே அவர்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளினுடைய ஒட்டுமொத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற வாய்ப்பினை ஜனாதிபதி பெறப்போகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு அரசியற் தீர்வுக்காத்தான் அழைக்கின்றார் என்று நாம் கற்பனையில் இருந்தாலும் எதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் என்ற விடயம் ஜனாதிபதி செயலக நிகழ்ச்சி நிரலில் கூடச் சொல்லப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.