அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை

இலங்கை அரசாங்கத்துடனும் அதேபோல், வர்த்தக மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனுமான சந்திப்புகளின் நிமித்தம் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் பல்வேறு முகவரமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவொன்றுடன் கொழும்பை வந்தடைந்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் அமண்டா டோரி உள்ளிட்டோர் இந்த தூதுக்குழுவின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.

ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தல், மனித உரிமைகள், நிலையான பொருளாதார அபிவிருத்தி, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தல், பிராந்திய பாதுகாப்பு, மற்றும் கல்வி சம்பந்தமான கூட்டுறவு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நான்காவது அமெரிக்க – இலங்கை பங்காண்மை உரையாடலுக்கு (U.S.-Sri Lanka Partnership Dialogue) துணை இராஜாங்க செயலாளர் நூலண்டும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பிரிஸும் இணை- தலைமை வழங்கவுள்ளனர்.

உலகளாவிய தொற்றுப்பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றியும் அமெரிக்க – இலங்கை பங்காண்மையை பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடும் நிமித்தம் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

அனைத்து இலங்கையர்களும் செழிப்படையக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதில் சிவில் சமூக மற்றும் தனியார்துறை பிரதிநிதிகளின் முக்கிய வகிபாகங்கள் குறித்து கலந்துரையாடும் நிமித்தம் அவர்களையும் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக் குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.