ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.
20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அகமட், எம்.எஸ். தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.க்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகியோரையே இவ்வாறு தமது ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கான ஆதரவை வழங்கி வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன், தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். அத்தோடு, விமல் தலைமையிலான அரசின் பங்காளிக்கட்சிகளின் கூட்டணியோடு கைகோர்த்துள்ள தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாஹ்வும் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பளீல் ஆகியோரையும் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
குறித்த எம்.பி.க்களுக்கு எதிராக ஆங்காக்கே ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. பேருவளையில் மர்ஜான் பளீலுக்கு எதிராகவும் கல்முனையில் ஹரீசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களின்போது மக்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதேவேளை குறித்த எம்.பி.க்களுக்கு எதிராக அப் பகுதி மக்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அத்துடன் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன