ஆன்மீக உடை தரித்த துணிச்சலான போராளி ஐாேசப் ஆண்டகை -ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இறைபதம் அடைந்த முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராஐப்பு ஐோசப் அவர்கள் உண்மையில் சீருடை தரிக்காத ஆன்மிக உடை தரித்த போராளி என்றால் மிகையாகாது.

ஈழத் தமிழர் வரலாற்றில் அவரது பணிகள் மகத்தானவை விடுதலைப் போராட்ட காலங்களில் அரசபடைகளால் நடைபெற்ற அட்டூழியங்களை துணிச்சலாக வெளி உலகிற்கு தன்னால் இயன்ற வரை ஊடகங்கள் வாயிலாகவும் சர்வதேச அமைப்புக்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியவர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் தன்னால் இயன்ற பணிகளை ஒன்றிணைத்தவர் கொள்கைக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விட உறுதியாக உண்மையாக செயலாற்றியவர்.

இறுதிப்போரில் நடைபெற்ற அனைத்து மனிதப் படுகொலைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஒன்று திரட்டி சர்வதேச அரங்கிற்கு அம்பலப்படுத்தியதுடன் தானே போரின் சாட்சியாக பதிவு செய்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில் 2009 ஆண்டிற்கு முன்னர் மதிப்பிற்குரிய ஆண்டகை அவர்கள் ஆற்றிய பணிகள் பலவற்றை நேரில் பார்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்தது. ஆனால் அவர் இறைபதம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகவீனம் அடைந்து மக்கள் பணியாற்ற முடியாத நிலையில் இருந்த போதும் அவரைப் பார்க்க இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தது ஆனால் அவர் பணியாற்றிய அளவிற்கு யாராலும் முடியவில்லை என்ற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.

ஐாேசப் ஆண்டகைக்கு நிகர் அவரே தான் உண்மையில் இராஐப்பு ஐாேசப் ஆண்டகை சீருடை தரிக்காத போராளியாகவும் தேர்தல் சீட்டில் நிற்காத மக்கள் பிரதி நிதியாகவும் தமிழ் இனத்திற்காக பணியாற்றினார் என்பதை வரலாறு சொல்லும் அத்துடன் தமிழர் வரலாற்றில் சிறந்த மாமனிதர்.

சபா குகதாஸ்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
ரெலோ இளைஞர் அணி தலைவர்