தமிழ்மொழியின் நவீனமயமாக்கலிற்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு என்று நோக்கும் போது முதன்முதலாக எங்கள் கண் முன்னே தோன்றுபவர் ஆறுமுகநாவலர். நாவலர் பிறந்து இந்த ஆண்டு 200 ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த 200 ஆவது ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒரு தமிழியல் ஆய்வு மாநாட்டை நடாத்தி நாங்கள் ஆறுமுகநாவலரின் கனவுகளை நனவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், மூத்த பேராசிரியருமான எஸ்.சிவலிங்கராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு நேற்றுப் புதன்கிழமை(03.8.2022) மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் “ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) எனும் தொனிப் பொருளில் சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு ஆய்வரங்கைத் திறந்து வைத்து திறப்புரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவீனத்துவம் என்பது என்ன? இந்தக் கேள்விக்கான விடையளிப்பது மிகவும் கடினம். பொதுவாகக் கூறினால் பழமையிலிருந்து வேறுபட்டுப் புதுமையை நோக்கிச் செல்வது என இதற்குப் பொருள் கூறுவார்கள். அல்லது சம காலத்தையது அல்லது பழமை அல்ல என்றும் இதற்குப் பொருள் சொல்கிறார்கள். நவீனத்துவம் என்ற கருத்து நிலை முதன்முதலில் மேலைப் புலங்களிலேயே உருவானது.
உலகளாவிய ரீதியில் வேர்விட்டு வளரத் தொடங்கிய நவீனத்துவம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, சமயம் முதலான பல்வேறு துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. இந்தச் செல்வாக்கு மெல்ல மெல்ல எங்கள் தமிழ்ச் சூழலுக்குள்ளும் தலைவைக்கத் தொடங்கியது.
அதற்கு அனுகூலமாக அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுப் பின்னணிகள் காரணமாக அமைந்தன.
ஈழநாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த வாழ்வியல் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் ஏற்படுத்துகின்றது. எனினும், நாம் தற்போது காணும், அனுபவிக்கின்ற நவீனத்துவம் பெருமளவில் இக்காலங்களில் தான் தோன்றியது என்று கூற முடியாது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்தில் நவீனத்துவம் தனது கரங்களை அகல விரித்தது. 19 ஆம் நூற்றாண்டு பல வழிகளிலும் இதற்குச் சாதகமாக அமைந்தது.
ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரையில் பல சிறப்பியல்புகளை உடைய வரலாற்றுக் காரணங்களால் 19 ஆம் நூற்றாண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மேல்நாட்டுக் கலாசாரம், ஆங்கிலக் கல்வி ஆகியவற்றின் கடுமையான தாக்கமும் அதற்கு எதிரான நிலைப்பாடுகளும் இலக்கிய, இலக்கணச் சிந்தனைகளுக்கும், ஆக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்ததாகப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.ஈழத்து நவீனத்துவத்தின் ஊற்றுக் கால்களை இந்த மேற்கோள் தெளிவாகக் காட்டுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நவீனத்துவம் குட்டி போட்டுப் பட்டி பெருகியது. பின் நவீனத்துவம் என்பது போல…ஈழத்தில் காலனித்துவ காலம் நவீனமயமாக்கத்தை உள்வாங்க, உருவாக்க உதவியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த மிஷனரிமார்களின் செயற்பாடுகள் பல வழிகளிலும் இவற்றின் பின்னணியாக அமைந்தன.
ஈழத்தவர்கள் நவீனத்துவத்திற்குள் பயணிக்க மிஷனரிமார்களின் பணிகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.
மிஷனரிமார்கள் வருவதற்கு முன்னர் எமது கல்வி, கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி முதலானவை கட்டிறுக்கமான, நெகிழ்ச்சித் தன்மையற்ற, குறிப்பிட்ட சில எல்லைகளுக்கு உட்பட்டே விளங்கின. சமயம், கல்வி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்ட கட்டிறுக்கங்களைத் தகர்த்தும், தளர்த்தியும் விட்டமை நவீனத்துவ செயற்பாடுகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன.
ஈழத்தில் நவீனமயமாக்கல் எனக் குறிப்பிடும் போது நமக்கு முன்னே விஸ்வரூப தரிசனமாகத் தெரிவது அச்சுக் கலையே எனலாம். ஈழத்து அச்சு இயந்திரப் பயன்பாடு பற்றிப் பலரும் விஸ்தாரமாக எழுதியுள்ளனர். பேராசிரியர் கைலாசபதி ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்ற தனது நூலில் அச்சுக் கலையில் நவீனத்துவத்தை எவ்வாறு வளர்த்தெடுத்தது என்பது தொடர்பில் விரிவாக எழுதியுள்ளார்.
அச்சுக் கலையின் உடன்பிறப்பாகப் பதிப்புத் துறை மேற்கிளம்புகிறது. தமிழ் நூல்களின் பதிப்புத் துறைக்கு அத்திவாரமிட்டவர் நாவலர்.சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை, கூரை மேய்ந்தவர் உ.வை. சாமிநாத ஐயர். வையாபுரிப்பிள்ளை போன்ற பெரிய பதிப்புச் சூறாவளிகள் வீசத் தொடங்க அத்திவாரமும், சுவரும் அசையாமலிருக்க கூரை ஆட்டம் துறையாக விளங்குகிறது.கொடுக்கத் தொடங்கியது. எனவே, ஈழத்து நவீனமயமாக்கலிற்குப் பதிப்பு முயற்சி மிக முக்கிய துறையாக விளங்குகிறது.
நவீனத்துவம் என்பது முற்றிலும் மேற்கத்தைய வாதம் அல்ல. அது எங்களுடையது. அடிப்படையில் அது எங்களுக்கு உரியது என்பதை நாங்கள் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.