அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி புவியியல் மற்றும் சுரங்கப்
பணியகத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வௌியிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கையைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
மனுதாரரான புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கனிமச் சுரங்கம், அது தொடர்பான அனுமதிகள் வழங்குதல், அவற்றின் நிர்வாகம் போன்றவற்றின் முழு அதிகாரமும் தங்கள் பணியகத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திருகோணமலையில் 13 கிலோமீற்றர் பரப்பளவில் தாது மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு தமது பணியகம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான அனுமதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிலத்தில் தேவையான அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள, “மிட் வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்து, அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, அதன்படி, அகழாய்வு பணியை, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்பித்ததாக, மனுவில் கூறப்பட்டுள்ளது. .
இருந்த போதிலும், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், கிழக்கு மாகாண செயலாளர் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி, தேவையான அனுமதி பெற வேண்டும் என்றும், அதுவரை திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.
புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தனது மனுவில், கனிம வளங்கள் மற்றும் அவற்றின் சுரங்கம் தொடர்பான உரிமங்களை வழங்குவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தமது நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனிம வளங்கள் தொடர்பான செயற்பாடுகள் மாகாண சபையின் எல்லைக்கு தொடர்பில்லாதது எனவும், கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முற்றாக மீறுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மீறி, கிழக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட கடிதம் செல்லுபடியாகாது என ரிட் ஆணையை பிறப்பிக்குமாறும், அந்த கடிதத்தின் அடிப்படையில் மேலதி நடவடிக்கை எடுப்பதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.