இந்தியாவிடம் பாரிய தொகை கடனை பெறும் இலங்கை!

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் திட்டத்தின் கீழ் பெறுகிறது.

இந்தநிலையில் பெற்றோலியம் தொடர்பான கடன்களுக்காக மேற்கு ஆசியா மற்றும் பிராந்திய பொருளாதார அமைப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.

இந்தநிலையில் 120,000 மெற்றிக்தொன் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டபோது சிங்கப்பூரின் ஏலத்தாரா் ஒருவர் மாத்திரமே முன்வந்துள்ளார்

இறக்குமதிக்கான கடன் கடிதங்களை தற்போது சர்வதேச வங்கி ஒன்றிடம் இருந்தே பெறவேண்டியுள்ளமையே இதற்கான காரணமாகும்.

அத்துடன் சர்வதேச வங்கியிடம் கடன் கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக 3 வீத வட்டியை செலுத்தவேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் அண்டை நாடுகளில் இந்த வட்டிவீதம் 0.5 ஆக இருக்கிறது. இதற்கிடையில் இந்த 3வீத வட்டியை செலுத்தமுடியாது போனமைக் காரணமாக அண்மையில் நிலக்கரிக்கான இரண்டு முக்கிய ஏலங்கள் ரத்துச்செய்யப்பட்டன.