இந்தியாவை ஏமாற்ற நினைத்து தம்மை ஏமாற்றிக்கொண்ட கோட்டாபய அரசாங்கம் – சிறிதுங்க சாடல்

ஜெனீவா பிரேரணைக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியின் அரசாங்கத்தை ஏமாற்றி அதன் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தமக்கான ஆதரவை பெற முடியும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளது என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவை ஏமாற்றி இந்த வேலையை செய்து கொள்ள முடியும் எனவும் நினைத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள்.

அதற்கான சட்டங்களை கொண்டு வருமாறு பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் இந்தியா அவதானித்துக் கொண்டிருந்தது.

இந்தநிலையில், மோடி – கோட்டாவை ஏமாற்றிவிட்டார். இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என்று ஜயநாத் கொலம்பகே கூறியிருந்தார்.

அதுதான், கோட்டாபய தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பின்வாங்குகின்றார். தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட வியத்மக குழுவினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்யுமாறு கூறுகின்றனர். ஆனால் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசிக்கின்றார்.” என்று சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டார்.