இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கை -யதீந்திரா

ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கடிதம் இந்திய தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களில் இந்தியாவை நோக்கி முதல் முதலாக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றனர். கடந்த பன்னிரெண்டு வருடகால தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் அனைத்துமே மேற்கு நோக்கியதாக மட்டுமே இருந்தது. அதாவது, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களே ஒரேயொரு பிரதான விடயமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இ;வாறானதொரு சூழலில்தான், பிரதான தமிழ் கட்சிகள் ஒன்றாக இந்தியாவையே நோக்கி சென்றிருக்கின்றன.

இந்த இடத்தில் இதன் பின்னணி பற்றி சிறிது பார்ப்பது பொருத்தமென்று எண்ணுகின்றேன். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றும் – தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையில் பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியுமான, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இந்த முயற்சியை ஆரம்பித்திருந்தது. இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக டெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி செயற்பட்டிருந்தார். பின்னர், டெலோவின் முயற்சியுடன் கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான, சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் (புளாட்) இணைந்து கொண்டது. இது தொடர்பான முதலாவது சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில், கூட்டமைப்பில் அதிக பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குகொள்ளவில்லை. அதே வேளை, தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் டெலோவின் முயற்சியை பொது வெளிகளில் விமர்சித்திருந்தார். அதாவது, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியாது என்னுமடிப்படையில் அவருடைய விமர்சனம் அமைந்திருந்தது. ஆனால் பின்னர் தமிழரசு கட்சியும் டெலோவின் முயற்சியுடன் இணைந்து கொண்டது.

பல கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகின்ற போது, பலருடைய கருத்துக்களையும் உள்வாங்க வேண்டியது ஒரு ஜனநாயக நெறிமுறையாகும். அந்த அடிப்படையில்தான், தற்போது இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையும் கடிதத்தில் இருக்கின்றது 13ஜை மட்டும், ஓரு கோரிக்கையாக முன்வைக்கக் கூடாதென்று வாதிட்ட தமிழசு கட்சியின் சொற்களும் கடிதத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த முயற்சி எந்த இலக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ, அந்த இலக்கு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெலோவின் முயற்சி வெற்றிபெற்றிருக்கின்றது.

அண்மைக்காலமாக, இந்தியாவை தவிர்த்துச் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பின் தீர்மானங்கள் அமைந்திருந்தன. சம்பந்தன் இதனை திட்டமிட்டு செய்ததாக இந்தக் கட்டுரையாளர் கருதவில்லை. அதே வேளை, சுமந்திரனின் தூண்டுதலால் இது நிகழ்ந்ததாகவும் இந்த கட்டுரையாளர் கருதவில்லை. சுமந்திரன் அரசியலுக்கு முற்றிலும் புதியவர். கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு அவருக்கு முதல் முதலாக கிடைத்த போது, அது அவருக்கு ஒரு பரவசத்தை கொடுத்திருக்கலாம். அவர்களுடன் உரையாடி விடயங்களை மிகவும் இலகுவாக வெற்றிகொள்ளலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சுமந்திரன் மிகவும் வீறாப்பாகவே ஊடகங்களை எதிர்கொண்டிருந்தார். தீர்வை நெருங்கிவிட்டதான ஒரு பார்வையே அவரது பேச்சுக்களில் தெரிந்தது. இறுதியில் என்ன நடந்தது? ஆனால் இந்தக் கட்டுரையாளர் உட்பட பலரும் எதிர்வு கூறியதற்கு அமைவாகவே விடயங்கள் நடந்தேறின.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு தீர்மானகரமான சக்தி. இது தொடர்பில் எனது பத்தியில் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்திருக்கின்றேன். இலங்கையின் உடனடி அயல்நாடாக இ;ந்தியா இருப்பதும் – ஏற்கனவே இந்த பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்து, இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு விடயத்தை முன்வைத்திருப்பதும் பிரதான காரணங்களாகும். இதனை சாதாரணமாக புறம்தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களால் எக்காலத்திலும் செயற்பட முடியாது. இது நமது விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. மாறாக, இந்த பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தின் அடிப்படையில்தான் விரும்பமில்லாமிட்டாலும் கூட, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் தலையீட்டை அனுமதித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் பின்னர், ஜே.ஆர் டைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் – அதாவது, இந்தியா இந்த பிராந்தியத்தின் முதன்மையான சக்தி. நாங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாங்கள் இந்தியாவுடன் செல்ல வேண்டும் அல்லது பிறிதொரு வலிமையான சக்தியோடு செல்ல வேண்டும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் சென்றுவிட்டது. இந்தக் காலத்தில், இலங்கைத் தீவிலும், ஈழத் தமிழர் அரசியலிலும், உலகளாவிய அரசியல் போக்குகளிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி செல்வதற்கான பிரகாசமான எந்தவொரு தெரிவையும் காண முடியவில்லை. மீளவும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நோக்கியே திரும்ப வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்தியா ஒரு பிராந்திய சக்தியென்பதும் – அது எப்போது வேண்டுமானாலும், இலங்கை விடயத்தில் தலையீடு செய்யும் வல்லமையை கொண்டிருக்கின்றது என்பதிலும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது.

இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. பனிப் போர் காலத்தில் – அமெரிக்கா, சோவியத் யூனியனை முடக்குவதற்காக, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியது. இன்று சீனாவை ஒரு வறையறைக்குள் முடக்குவதற்கான அமெரிக்க மூலோபாயத்தின் பிரதான பங்காளியாக இந்தியா இருக்கின்றது. உலக அரசியலில் முன்னர் சோவியத் யூனியன் இருந்த இடத்தில், இப்போது சீனா இருக்கின்றது – சீனா இருந்த இடத்தில் இப்போது, இந்தியா இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவை விலத்திக் கொண்டு ஈழத் தமிழர்களால் எங்கு ஓட முடியும்?

இந்த பின்னணியில்தான் இந்தியாவின் ஈடுபாட்டை மீளவும் தமிழர் பிரச்சினையில் ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் தேசிய கட்சிகள் இந்த வரலாற்று நகர்வை மேற்கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டு வருடங்களாக அரசியல் தீர்வு நோக்கி மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்ற நிலையில்தான், இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான கோரிக்கையொன்றுடன் புதுடில்லியை ஈழத் தமிழர்கள் அணுகியிருக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு இறுதியான அரசியல் தீர்வாக கட்சிகள் முன்வைக்கவில்லை. உண்மையில் இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமே அல்ல. இது அடிப்படையில் இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற – இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் பயணிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் ஒரு தந்திரோபாய முன்னெடுப்பாகும்.

தமிழ் கட்சிகள் இவ்வாறானதொரு முடிவுக்கு சடுதியாக வரவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மேற்குலகத்தை நோக்கி பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவை முன்வைத்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என்போர் ஏட்டிக்கு போட்டியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் – இதுவரையில் எட்டு பிரேரணைகள் இலங்கையின் மீது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 2012இல் அமெரிக்க அனுசரனையுடன், இலங்கையின் மீதான முதலாவது பொறுப்பு கூறல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது.

ஆனாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் என்ன முன்னேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன? சிலர் கூறலாம் கூட்டமைப்பு விடயங்களை சரியாக கையாளவில்லையென்று. ஆட்சி மாற்றத்தை கூட்டமைப்பு உச்சளவில் பயன்படுத்தியிருக்கலாம் என்னும் கருத்தில் இந்த கட்டுரையாளருக்கு முழுமையான உடன்பாடுண்டு. ஆனால் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கு கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என்றால் அது தவறானது. ஏனெனில் சமஸ்டித் தீர்விற்காக சிறிலங்கா அரசை இறங்கிவரச் செய்யக் கூடிய எந்தவொரு பலமும் கூட்டமைப்பிடம் இல்லை. அதே வேளை சர்வதேச நீதிப் பொறிமுறையை கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை என்னும் விமர்சனத்திலும் உண்மையில்லை. ஏனெனில், கூட்டமைப்பு என்னதான் உரத்துப் பேசியிருந்தாலும் கூட, இப்போது இருக்கின்ற நிலைமைக்கு மேல் பெரிதாக எதுவும் நடந்திருக்காது. ஆனால் வாய்ப்புக்களை உச்சளவில் பயன்படுத்தி எடுக்கக் கூடியதை எடுத்துக் கொள்வது என்னும் தந்திரோபாய அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்று கூறினால் அது சரியானது.

தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி கோரிக்கை முன்வைத்ததை ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஸைகளை முடக்க முற்படுகின்றனர் என்பதுதான் அவர்களது விமர்சனத்தின் அடிப்படையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே இவ்வாறான விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது, இந்தியாவிற்கு உரித்தான விடயமொன்றுடன் செல்வதுதானே சரியானது. இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் கொண்வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுக்க வேண்டியிருக்கின்றது. பிரதமர் மோடிக்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்ற கட்சிகள் மிகவும் தூரநோக்குடனும், தந்திரோபாயமாகவும்தான் இந்த விடயத்தை கையாண்டிருக்கின்றன. ஆனால் இந்த விடயத்தை விமர்சனம் செய்வோரிடம் ஒரு அடிப்படையான தவறுண்டு.

அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று கூறுவோரை, விமர்சிப்பவர்கள்- சர்வதேச அழுத்தங்களின் அச்சாணியாக கருதப்படும், ஜெனிவா பிரேரணைகள் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்துவதை வசதியாக மறந்துவிடுகின்றனர். இந்த உண்மையை மக்கள் மத்தியில் திட்டமிட்டு மறைக்கின்றனர். 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இறுதியாக கொண்டுவரப்பட்ட 46ஃ1 தீர்மானத்திலும் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை மாகாண சபைகள் இயங்குவதற்கான சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் இந்த பிரேரணைகளையுமல்லவா தமிழர் தரப்புக்கள் நிராகரிக்க வேண்டும்? எனவே இங்கு அடிப்படையில் பிரச்சினையாக இருப்பது, 13வது திருத்தச்சட்டமா அல்லது, இந்தியாவை நோக்கி செல்வதா?

தற்போது ஒரு நேர்கோட்டில் சந்தித்திருக்கும் பிரதான தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் காலத்தை சரியாக விளங்கிக் கொண்டு செயற்பட்டிருக்கின்றன. ஆனால் இத்துடன் கட்சிகளின் பணி முடிந்துவிடவில்லை. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உண்டு. அதனை விளங்கிக்கொண்டு புதுடில்லியை நோக்கி தொடர்ந்தும் செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களையும் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.