சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால், அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அன்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அன்றைய தினமே இரண்டாம் கட்ட கடன் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எம்மிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டாம் கட்ட கடன் தொகையும் கிடைக்காது, கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள முடியாது என்று பரவலாகப் பேசப்பட்டது. எனினும் இது பொய்யாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கிடைக்கும் என்று நம்புகின்றோம். சீனா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்றார்.