கொவிட் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்துவது ஆபத்தானது என சுகாதார பிரிவினர் பாராளுமன்றபிரதானிகளுக்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பிரகாரம் பாராளுமன்றத்தை அடுத்த வாரம் இரண்டு தினங்களுக்கு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளநடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற அடுத்த நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதிவியாழக்கிழமை இடம்பெற இருக்கின்றது. இதன்போது இதுதொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த வாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும்போது, எதிர்வரும் 6 ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நிலையியற்கட்டளையின் பிரகாரம் குறிப்பிட்ட திகதி பாராளுமன்றம் குறுகிய நேரத்துக்கேனும் கூடவேண்டும்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுகிறது. அன்றைய தினத்தை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கானகேள்விகளுக்கு ஒதுக்குவதற்கு கட்சி தலைவர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தனர்.
அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற ஊழியர்கள் பலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன்பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். அத்துடன் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகிஇருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.