இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளார்! மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது!

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் சட்டத்தில் இல்லை எனவும் அவர் கூறினார்.

எனினும் உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடலாம் எனவும் அவர் கூறினார். மாகாணசபைகளிற்கான தேர்தல்களை மேலும் ஒருவருட காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் ஆணையாளர் இதனை கூறினார்.

தேர்தலை பிற்போடுவது தொடர்பான அமைச்சரவையின் முடிவை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாணசபை தேர்தல்களை ஒத்திப்போடுவது தொடர்பாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளதன் மூலம் இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.