இராணுவத்தின் ஒத்துழைப்பில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுவந்தது.

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் முப்படையினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவருவதாகவும் இதற்க்கு இடைக்கால தடைகோரியும் தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி சட்டதரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் ஸ்ரீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.